Friday, April 9, 2010

அடையாள அட்டை

"அம்மா நான் போட்டு வாறன்" என்று சொல்லி பதிலையும் எதிர்பாராமல்
காலையில் சாப்பிடவோ தண்ணீர் குடிக்கவோ நேரமில்லாமல் தனது
சைக்கிளை எடுத்து வேகமாக மிதக்கத்தொடங்கினான் ரூபன். ஓடும் போது
மணியை ஒருமுறை பார்த்தான். மணி 7.53 ஐக் காட்டிக்கொண்டிருந்ததால்
சைக்கிளை மேலும் வேகமாக மிதிக்கத்தொடங்கினான்.

முதல்நாள் பள்ளிக்கூடத்தில் கணிதபாடத்தில் தந்த வீட்டுவேலையைச்
செய்யாததால் சுபத்திரா ரீச்சரிடம் அடி வாங்கியதும் பெண்கள் முன்
அவமானப் பட்டதுமே நினைவுக்கு வந்து கொண்டிருந்தது. அதைவிட
அடுத்தநாள் செய்துவராவிட்டால் வகுப்பை விட்டே கலைத்துவிடுவேன்
என்று மிரட்;டியதே அன்று இரவு நீண்டநேரம் விழித்திருந்து வீட்டுவேலை
செய்யக் காரணமாக இருந்தது. செய்து முடித்து நித்திரையாக பின்னிரவு
2 மணியைத் தாண்டியிருந்தது. அதனால் காலையில் எழும்ப 7.20 ஆகி
விட்டிருந்தது.

இருப்பினும் உடன் எழுந்து அவசரமாக குளித்து நீலக்காற்சட்டையும்
வெள்ளைச்சேட்டும் அணிந்து முதல்நாள் விளையாடியதால் சப்பாத்தில்
படிந்திருந்த புளுதியையும் துடைத்து போடடுக்கொண்டு வேகவேகமாய்
ஓடிவந்ததை நினைத்தவன் சுபத்திரா ரீச்சரின் அடியால் அவமானப்படுவதை
விட இன்று அவசர அவசரமாக வெளிக்கிட்டு வியர்க்க விறுவிறுக்க
பள்ளிக்கூடம் போவது மேல் என்று மேலும் வேகமாக சைக்கிளை
மிதித்து ஆமிக்காம்ப் சந்திக்கு வந்து சேர்ந்தான்.

சந்தியில் வழமைக்கு மாறாக சனங்கள் வரிசையில் நிற்பதைப்பார்த்த
ரூபன் இன்று பள்ளக்கூடத்திற்கு 8.15 க்கிடையில் போய்ச்சேரலாமா?
என்ற சந்தேகத்துடன் சென்றாலும் தனக்கு தனது பள்ளிக்கூட யுனிபோம்
துணைபுரியும் என்ற் எண்ணத்துடன் ஆமிக்காரனுக்கு கிட்ட போனவன்
ஏமாந்தே போனான். வழமையாக அடையாள அட்டை கேட்காத ஆமிக்
காரன் அன்று கேட்டான்.

" மல்லி ஐ.சி யக் கண்ட..."
" பொட்டக் இண்ட சேர் மங் கனவா..."
" வெலாவ கியா... கண்ட.... இக்மண்ட...."

அடையாள அட்டையை தனது மணிபேசிலும் புத்தகப்பையிலும் மாறிமாறி
தேடியும் கிடைக்கவில்லை. எங்கு போயிருக்கும் என யோசிக்கும் போது
தான் முதல் நாள் பின்னேரம் அடையாள அட்டை இலக்கத்தினை விதா
னையாரிடம் பதிவதற்காக அப்பா வாங்கியதும் பின்னர் அவர் தந்த போது
வாங்கி மேசையி;ல் வைத்ததும் வரும்போது எடுக்க மறந்ததும் நினைவுக்கு
வரவே..

" சேர்..... மம அமத்தவுணா சேர்.... மகே ஐ.சி கெதரட்ட தியன்னே....
கெட்ட எனக்கொட்ட கேண்ட சேர்..... தங் வெலாவ கியா சேர்.....
மம ஸ்கூலட்ட யண்டோண சேர்.....'

"ஏமத.....? தம்ச ஸ்கூலட்ட யண்டோணத....? தம்ச தமாய் கொட்டி....
தம்ச தமாய் உதயட்ட வெடித்தியன்னே..."

என்று உறுக்கியவாறு அடிக்கப் போனான் அந்த ஆமிச்சிப்பாய். அந்த
அடியில் இருந்து லாவகமாக விலகிக் கொண்ட ரூபன்

" நா சேர் தங் தமாய் கெதரட்ட எந்தலா எனவா...." என்றான்

" தம்ச பொறுக்கியான்டப்பா...... யண்ட ஓய்......"

என்று ரூபனைத் திட்டிய ஆமிச்சிப்பாய் வேறு ஒரு சிப்பாயை துணைக்கு
அழைத்தான்.

" மகிந்த......! மெகிட்ட பொட்டக் என்ன...... மெயாவத் தமாய் உதயட்ட
வெடித்தியன்னே.... மெயாவ றூமட்ட தாண்ட மம என்னம்....."

என்று சொல்லி மகிந்த என்ற சிப்பாயிடம் ரூபனைத் தள்ளி விட்டான்.
ஆனால் ரூபன் மேலும் மன்றாடி அழுதான்.

" சேர்....... மம தங் தமாய் என்னே சேர்.......... ஒயாட்ட ஓணவனங் ஒயாகே
கான்போனெக் பொட்டக் தெண்டக்கோ சேர்......... மகே தாத்தாட்ட கோல்
கரலா கேண்டக் கியலக் கியான்ன....."
என்றான்.
" தம்ச கரதரக் தெண்டப்பா யண்ட றூமட்ட.... "

என்று கழுத்தில் பிடித்து அறையை நோக்கித் தள்ளினான்.

இனி இவங்களுடன் கதைத்து வேலையில்லை என்று நினைத்த ரூபன்
இன்று யாருடைய முகத்தில் முழித்தோம் என்று தெரியவில்லை என்று
அந்த அறையினுள் சென்று அழுதவாறே சுற்றும் முற்றும் பார்த்தான்.

அங்கு கண்ட காட்சிகள் அவனது உயிரை ஒருமுறை உலுக்கி எடுத்தது
என்றால் அதற்கு தகுந்த காரணங்கள் இருக்கத் தான் செய்;தது.

அந்த அறையினுள் தன்னைவிட மேலும் பத்து அல்லது பன்னிரெண்டு
வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவனும் நாற்பது வயது மதிக்கத்தக்க
ஐயா ஒருவரும் இருந்தார்கள் . அவர்களுக்கு ஆமிச்சிப்பாய் அடித்ததில்
சின்னவனுக்கு முகமெல்லாம் இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. பெரிய
வருக்கு இரத்தம் வராவிட்டாலும் முகம் வீங்கியிருந்தது. ஆங்காங்கே
அடித்ததற்கான அடையாளத் தளும்புகள் காணப்பட்டன.

இதனால் தனக்கு என்ன நடக்கப் போகுதோ என்று பயந்த ரூபன்
" முருகா....... முருகா......... என்னை நீ தான் காப்பாத்த் வேணும்...... "
என்று கட்வுளைப் பிரார்த்தித்துக் கொண்டு ஒரு மூலையில் சுவரோடு
சாய்ந்த வண்ணம் குந்தியிருந்து தன் தலையை இருகைகள்hலும்
தாங்கிக்கொண்டு அழுதவாறே உங்களுக்கு என்ன நடந்ததென்று
பெரியவரைப் பார்த்துக் கேட்டான்.

" நான் தோட்டத்திலை வேலை செய்யிறனான். அதால ஆமிக்காரன்
அடிச்ச அடியெல்லாத்தையும் தாங்கிட்டன்.
ஆனா...... அந்தச் சின்னப் பெடியனைப் பார் தம்பி.... அவனுக்கு 11
வயதாம்...... ஆமிக்காரன் பக்கத்தில கிடந்த கொட்டன் ஒண்டை எடுத்து
சின்னவனெண்டும் பாராமல் தலையில தாறுமாறா அடிச்சுப் போட்டான்..
அது தான் ரத்தம் வழிஞ்சு கொண்டிருக்கு......
அதுக்கு கட்டுப் போடவும் ஆக்களில்லை........
இதுவரைக்கும் நானும் சின்னவனும் செய்த பிழை என்னவெண்டா ஐடன்ரி
காட் கொண்டுவராதது மட்டும் தான்....இதால எஙகமேல புலி எண்ட குற்றச்
சாட்டும் இருக்குது.
அதைவிட காலேல வெடிச்ச குண்டுக்கும் நாங்கள் தான் காரணமெண்டும்
சொல்லி இஞ்சை அடைச்சு வைச்சிருக்கு..........
உண்மையாத் தான் தம்பி சொல்லுறன்..........
உந்த ஆமிக்காரன் செய்யிற அநியாயத்துக்கு.........
பெடியள் செய்யிறது தான் சரியெண்டு சொல்லுவன்..........
பதினொருவயதுப் பிஞ்செண்டு பாராது உந்தமாதிரி அடிச்சிருக்கிறாங்கள்....
நேற்று பதினாறு வயதுப் பொம்;பிளைப்பிள்ளையொண்ட கெடுத்துப்போட்டு
பக்க்த்தில கிடந்த குளத்தில போட்டுட்டுப் போட்டாங்கள்.....
இப்பிடி தினமொண்டு நடந்துகொண்டு தான் இருக்குது........
இப்பிடி தினமும் நடக்கேக்க நாங்களெல்லாம் உயிரோட இருந்து என்னத்த
கிளிக்கப்போறம்...........?
செய்யாதத செய்ததாகச் சொல்லி அடிவாங்கி அடைபட்டு அனுபவிக்கிறத
விட.......எனக்கொரு குண்டு தந்தாங்கள் எண்டால் உவங்கள் எல்லாரையும்
ஒரேயடியாக கூண்டோடு மேல்லோகம் அனுப்பிப் போட்டுத்தான் மிச்ச
வேலை பாப்பன்...."

என்று மூச்சு விடாமல் சொல்லி தனது ஆதங்கங்களை கொட்டித் தீர்த்தார்.

அவர்கள் நிலை அப்படியென்றால் தன்னிலை என்று எண்ணியவன்.......
தான் வீட்டுவேலை செய்யாததாலும் அவசரத்தில் வெளிக்கிட்டதாலும்
வந்த வினையை நினைத்து மேலும் அழுதுகொண்டே இருந்தான்.

அப்போது அங்கு ஆமிக்கொமாண்டர் ஒருவன் சிப்பாயுடன் அறைக்கதவைத்
திறந்து கொண்டு உள்ளே வந்தான். வரும்போதே

" தங் ஆவ கௌத...? "

என்று கேட்டுக்கொண்டே வந்தான். அதைக்கேட்ட ரூபன்

" மம சேர்......"

என்று சொல்லி எழுந்து நின்றான்.

ஆமிக்கொமாண்டர் திரும்பி ரூபனைப் பார்தது தனது துப்பாக்கியின் பின்
புறத்தால் ரூபனின் வயிற்றில் ஓங்கி இடித்தான்.

இதனைச் சற்றும எதிர்பாராததாலும் காலையில் ஒன்றுமே சாப்பிடாததாலு
ம் ஏற்பட்ட தஞ்சக் களைப்பினாலும் அந்த இடத்திலேயே மயக்கம்
போட்டு விழுந்தான் ரூபன்.

இதனால் அடுத்து என்ன நடந்ததென்று ரூபனுக்குத் தெரியவில்லை.
மயக்கம் தெளிந்து கண்விழித்துப் பார்த்த போது பெரிய கோல் ஒன்றினுள்
வெறும் நிலத்தில் விரிப்பேதுமின்றி கிடத்தப்பட்டிருந்தான். அவனைச்
சுற்றி வெள்ளை நிறத்திலான் காற்சட்டையும் சேட்டும் அணிந்திருந்தவர்கள்
பார்த்துக்கொண்டிருந்தார்கள். எல்லோருக்கம் அவர்களது சேட்டின் வலது
புறத்தில் ஆறு எழுத்தில் இலக்கங்கள் எழுதப்பட்டிருந்தன. அதில் நீளத்
தாடியுடன் மீசையும் நரைத்த வயதானவர் ஒருவர் தனது சேட்டைக்
கழற்றி ரூபனுக்கு காற்று வீசிக்கொண்டு பரிதாபமாகப் பார்த்துக்கொண்டு
இருந்தார்.

அவற்றைப பார்த்ததும் துள்ளியெழ முயன்றான் ரூபன். ஆனால் அவனால்
முடியவில்;லை. தலையில் பெரிதாகக் கட்டுப் போடப்பட்டிருந்தது. வயிற்றி
லும் பெரும் வலி காணப்பட்டது. இதனால்.

" நான் எங்கை இருக்கிறன்....? "

என்று சுற்றியிருந்தவர்களைப் பார்த்துக் கேட்டான் ரூபன்.

" ஜெயிலில் ...." என்றார் அந்தப பெரியவர்.

" ஏன் நான் என்ன தப்புச் செய்தேன்....?

" நீ செய்தது கன தப்பு...."

" கன தப்பா.....? "

" ஓமய்யா.... " இரக்கமாகச் சொன்னார் பெரியவர்

" என்னது நான் செய்த தப்பு....?

" முதலாவது நீ தமிழனாகப் பிறந்தது.........
இரண்டாவது நீ இலங்கையில் பிறந்தது.......
மூன்றாவது உனது வாலிபப் பருவம்.........
நான்காவது நீ ஐடன்ரிக் காட் கொண்டு போகாதது........ "

என்று அடுக்கிக் கொண்டே போன் பெரியவரைத் தடுத்த ரூபன்

" இதற்காக எனக்கு இந்த தண்டனையா...? '

" இது மட்டுமல்ல உன்மேல புலி எண்ட குற்றச்சாட்டும் இருக்குது.."

என்ற பெரியவர்

" றெஸ்ற் எடு மோனை......."

என்றுவிட்டு இனி என்னவெல்லாம் நடக்கப் போகுதோ என்ற பெருமூச்சுடன்
அவ்விடத்தை விட்டு நகர்ந்தார்.

சிறிது நேரத்தில் ஆமிச்சிப்பாய் ஒருவன் உள்வந்து

" கௌத கணநாதன் ரூபச்சந்திரன்......? " என்று கேட்டான்.

" மம சேர் ......." என்று எழும்ப முடியாததால் கையை உயர்த்திக் காட்டி
னான் ரூபன்.

கிட்ட வந்த சிப்பாய் பாங் காட் போன்ற அட்டை ஒன்றைக் கொடுத்தான்.

அந்த அட்டையில் மேல் யாழ் சிறைச்சாலை என்றும் அதன் கீழ் தனது
படமும் அதன்கீழ் TA : 421948 எனும் இலக்கமும் அதன் கீழ் தனது
பெயரும் அதன் கீழ் ஸ்ரீலங்கா என்றும் தனிச்சிங்களத்திலே அச்சடிக்கப்
பட்டிருந்தது. இதனைப் பார்த்ததும் சிப்பாயை நிமிர்நதது பார்த்தான் ரூபன்.
இது எதற்கு என்ற கேள்வி அந்தப் பார்வையில் இருந்தது. அதை
விளங்கியதாலோ என்னவோ அந்தப் பெரியவரைக் கூப்பிட்ட சிப்பாய்

" கொய் கரி யனவனங் மே காட்டெக்க கேண்டக்கியல மெயாட்டக்
கியான்ன......."

என்று சொல்லிவிட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தான் சிப்பாய்.

சிப்பாய் போனதும் பெரியவர் ரூபனைப் பார்த்துச் சொன்னார்...

" தம்பி இந்த ஐ.சி தான் உனக்கு இஞ்சை முக்கியம்.......
நீ எங்கை போனாலும் இதை எடுத்துப் போக வேணும்......
இதைக் காட்டினாத் தான் மத்தியாணமும் இரவும் சாப்பாடு கிடைக்கும்....
காத்தாலையும் பின்னேரமும் தேத்தண்ணி குடிக்க சீனியும் தேயிலையும்
கிடைக்கும்..........
இன்னம் என்னவெல்லாம் உனக்கு இஞ்சை வேணுமோ அதுக்கெல்லாம்
இந்த ஐ.சி தான் முக்கியம்.............
கவனமாக வைச்சுக்கொள்......
எங்க போனாலும் எடுத்துக்கொண்டு போ.........."

என்று சொன்ன பெரியவர் இந்தப்பெடியன் 18 வயசுக்குள்ள

1. பத்து வயது முதல் பள்ளிக்கூட அடையாள அட்டை....
2. அதோட மாவட்ட ஆமி அடையாள அட்டை....
3. 16 வயசில் அஞ்சல் அடையாள அட்டை.......
4. 18 வயசில தேசிய அடையாள அட்டை.......
5. 19 வயசில ஜெயிலில் அடையாள அட்டை........

என்று எத்தின அடையாள அட்டையைப் பாத்திட்டான்.... என்று நினைத்துக
கொண்டு இந்தப்படிக்கிற பிள்ளையின்ர எதிர்காலத்தையே பாழாக்கிட்டாங்
களே என்று பெருமூச்சொன்றை விட்டு எழுந்து நடந்தார்.

நான் ஜெயிலுக்கு வந்த ஆறு வருசத்திலயும் தனது பிள்ளையளின்ர
எதர்காலம் எப்படி இருக்குதோ.......
மனிசி எல்லாத்துக்கும் என்ன செய்யுறாளோ......
என்ன பாடு படுகிறாளோ ......
இன்னும் நாலு வருசத்துக்கு என்ன பண்ணப் போகிறார்களோ..... என்ற
ஏக்கத்துடன் தனது ஆறுவருடத் தாடியை தடவிக்கொண்டு நடைப்பிணமாக
நடந்தார் தனது படுக்கையை நோக்கி.............!!

Print this post

No comments: