Tuesday, April 20, 2010

விண்ணை முட்டிய எங்கள் துயர்

ஆனைமுகம் கொண்ட ஆண்டவனே கணேசா
சேனைவந்து கொன்றபோது பார்த்தவனே குணேசா
பானையிலே சோறுதந்து காத்தவனே கணேசா
வானைப்பிழந்து குண்டுபோட்டும் மீட்கவில்லை குணேசா.

வாய்ததிறந்த போதினிலே அப்பனே என்றோம்
வாய்திறக்க வில்லையே எப்பவும் நீயும்?
பாய்விரித்து நிம்மதியாய் படுக்கவும் முடியலை
பாய்ந்துவந்து எம்மடியில் விழுகிறது எறிகணை.

கொழுக்கட்டை மோதகம் அவித்துமக்குப் படைத்தோம்
வெளுக்கட்டும் எம்மவர் தீவினைகள் என்று
களுக்கென்று சிரித்து கனைத்துவிட்டு இருந்தாயோ?
அழுக்கென்று எம்மையவர் அலைத்துவிட்டார் பார்த்தாயோ?

உன்னை நாங்கள்நம்பி ஊரினிலே இருந்தோம்
பண்ணை எங்கள்வயலினிலே மகிழ்ச்சியாக கிடந்தோம்.
விண்ணைமுட்டும் எங்கள்துயர் கேட்குமென்று நினைத்தோம்.
மண்ணைமுட்ட வைத்துவிட்டான் என்றுமவன் எதிரி.

விழுந்தவர் மேலெழுந்து வருவாரோ சொல்வேழா
அழிந்தவர் தொகையெழுந்து குவிகிறது ஆல்போல
தொழுதவர் அனைவரையும் அழுத்திவிட்டாய் கணேசா
வழுதவர் செய்ததையும் மழுப்பிவிட்டாய் குணேசா.

வீண்வேலை இவர்களுக்கு என்றுநீ நினைத்தாயோ?
ஆண்காளை அவர்களைநீ அலையவிட்டுக் கனைத்தாயோ?
கணதெய்யோ என்றுஅவர் கையெடுத்துக் கும்பிட்டதும்
கண்தெரியாது போச்சோ உம் கருவறைப் பாவியரை?

நியும் கைவிரித்து ஒதுக்கிவிட்டுப் போனால்
நீரும் எமைவிட்டு ஒதுங்கித்தான் போகும்
பாரும் எம்மவரை கைவிடடுப் போச்சு _ தினம்
தோறும் எம்மவர் படுகின்றார் பாடாய்.

உன்கதை எழுதுவதற்கு உன்தந்தம் முறித்தாய்
எம்கதை எழுதுவதற்கு எதைநீ முறிப்பாய்?
உன்காலில் விழுந்துநாம் வணங்கினோம் களித்து
ஊனர்கள் நாமென்று விட்டுவிட்டாய் கழித்து.

கொழுத்தி எரிக்கிறார் அவர்நெஞ்சினுள்ளே தீயை
வளர்த்து விடுகிறார் தம்பிஞ்சினுள்ளே வினையை _ எம்
கழுத்தினிலே வைக்கிறார் அவர்கையிலிருந்த வாளை
தழுவுதற்கு மரணத்தை சாகும்வரை ஆளை.

விநாயகனே வினையை வேரறுக்க வல்லான்
என்றுஒரு கவிஞனவன் பாரிறுக்கச் சொன்னான்.
உண்டுஅதில் உண்மையென்று தேரிழுத்து வாறோம்.
கண்டுவிடுஎம் அனைவரையும் ஊரிழந்து போறோம்.

பிஞ்சிழந்து காயிழந்து பழமிழந்து போறோம்
வஞ்சியிழந்து ப+விழந்து பொட்டிழந்து போனோம்
மிஞ்சியிருக்கும் மொட்டைக்காக்க கடல்கடந்து போறோம்
தஞ்சமடைந்து ஆசியிலேஎம் உயிரைக்காக்க நாமும்.

கட்டிலிலே படுக்கவைத்து பார்க்கிறார்கள் எம்மை
தட்டினிலே சோறுபோட்டு காக்கிறார்கள் நம்மை
வீட்டினிலே சேர்க்கும்வரை காத்துவிடு ஐயா _ உயிர்
கூட்டினிலே இருக்கும்வரை நினைத்திருப்போம் உம்மை.

Print this post

No comments: