Thursday, April 15, 2010

நா காக்க....!

சிறிது காலம் பழகினாலும் நிறைய நாட்கள்
பழகியது போன்ற புரிந்துணர்வைக் கொண்டிருந்தார்கள்
கவிதாவும் பிரியாவும்.

சாப்பிடுவதற்காக உணவகத்திற்கோ அல்லது
பொருட்கள் வாங்குவதற்காக கடைக்கோ விழையாடுவதற்கோ
எங்கு சென்றாலும் இருவரும் சேர்ந்தே போவார்கள் வருவார்கள்.

எங்காவது ஓரிடத்தில் இருவரில் யாராவது ஒருவரைப்பார்த்தால்
மற்றவரும் அங்கிருப்பார் என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளலாம்.
அந்தளவுக்கு ஆழமான நட்பாக இருந்தார்கள்.

அதைவிட இருவரும் என்ன இரட்டையர்களா என்று சக
நண்பர்களால் கேலி செய்யுமளவிற்கு அவர்களது நட்பு
இருந்தது.

இருவருடைய எண்ணங்களும் செய்கைகளும் தமது துன்பங்களை
பகிர்ந்த போது கிடைத்த ஆறுதல்களும் அவர்களை இரட்டையர்
களாக்கியதென்றால் அதில் எந்த விதமான மாற்றுக்கருத்துக்களும்
இருக்காது.

இந்தக் காலப்பகுதியில் தான் சோபிதாவின் நட்பு பிரியாவுக்கு
கிடைக்கிறது. பிரியாவுக்கு கிடைத்தால் அது கவிதாவுக்கும்
கிடைத்தது போன்றது தானே. இருவருக்கும் நண்பியாகிறாள்
சோபிதா.

கவிதா பிரியா நட்பு சோபிதாவுக்கு எரிச்சலூட்டியது. தனது
சந்தேகங்கள் எல்லாவற்றுக்கும் கவிதாவுடன் கலந்தாலோசித்து
பிரியா பதில் சொன்னது சோபிதாவுக்கு பிடிக்கவேயில்லை.
அதனால் இருவரையும் பிரிக்க சதித்திட்டம் தீட்டினாள்.

பிரியா கவிதா இருவரில் ஒருவர் இல்லாத சந்தர்ப்பங்களில்
மற்றவரைப்பற்றி குறை கூறி அவர்களிருவருக்குமிடையில்
வெறுப்புணர்ச்சியை ஏற்படுத்த கிடைக்கும் சந்தர்ப்பங்களை
எல்லாம் பயன்படுத்தினாள்.

இப்படி இல்லாத பொல்லாத் கதைகளையெல்லாம் ஒருவரைப்
பற்றி ஒருவரிடம் சொல்லி இருவருக்கும் சகுனியாக இருந்தாள்
சோபிதா.

சகுனியின் சதிக்கதைகளால் பிரியாவும் கவிதாவும் ஒருவரை
ஒருவர் சந்திக்கும் சந்தர்ப்பங்களை இயன்றவரை தவிர்த்து;க
கொண்டார்கள். எதிர்பாராத சந்திப்புக்களில் ஏனோ தானோ
என்று நலம் விசாரித்து நழுவினார்கள்.

ஒருநாள் பிரியாவும் சோபிதாவும் சதுரங்கம் விளையாடிக்
கொண்டிருந்தார்கள். இவ்விடத்தில் சோபிதாவிற்கு காய்களை
நகர்த்தும் ஐடியாக்களை சொல்லிக கொடுத்துக கொண்டிருந்தாள்
கவிதா.

இதனால் பிரியாவுக்கு தோல்விநிலையைக் காட்டிக்கொண்டு
இருந்தது. அத்துடன் அவளது ராணியை வெட்டும் சந்தர்ப்பம்
சோபிதாவுக்கு கிடைத்து வெட்டி விட்டாள்.

தனது ராணி வெட்டுப்பட்டதும் பிரியாவுக்கு கோபம் தலைக்கு
ஏறியது. கவிதாவுக்கு தாறுமாறாக என்ன பேசுகிறோம் எனறு
யோசிக்காமலே திட்டி விட்டாள்.

இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்த எண்ணிய சோபிதா
"உனது நண்பி இப்படி உன்னைத் திட்டி விட்டாளே" என்று
சொல்லி எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றினாள்
கவிதாவுக்கு.

ஆனாலும் "பிறண்சிப்பிற்குள் இதெல்லாம் பெரிசா எடுக்க
கூடாது.. விடடி" என்று கவிதா பிரியாவுக்கு சொல்லி
சமாளிக்க முற்பட்டாள்

அதற்குப் பிரியா " பிறண்சிப்பும் மண்ணாங்கட்டியும் இனி
என்னுடன் கதைக்காதே " என்று சொல்லி விட்டு அந்த
இடத்தை விட்டு நகர்ந்து விட்டாள்.

சோபிதாவும் இது தான் சந்தர்ப்பமென்று தனித்தனியாக
இருவருக்கும் ஒருவரைப்பற்றி ஒருவருக்குச் சொல்லி
நிரந்தரமாக சேர்ந்து கொள்ள முடியாத அளவுக்குப்
பிரித்து விட்டாள்.

தன்னைத் திட்டினால் பறவாயில்லை. ஆனால் எமது
பிறண்சிப்பை திட்டி விட்டாளே.. இதுவரை போலியாகவே
பழகியிருக்கிறாள். இனி தேவையின்றி பிரியாவுடன்
எதையும் கதைப்பதில்லை என்று முடிவெடுத்தாள்
கவிதா.

அதே போல் பிரியாவைக் காணும் போதெல்லாம்
"பிறண்சிப்பும் மண்ணாங்கட்டியும்" என்று அவள்
சொன்ன வார்த்தைகளே நினைவுகளில் ஒலித்துக்
கொண்டிருந்ததால் " கலோ எப்படி இருக்கிறாய்"
என்று கேட்டுவிட்டு பதிலை எதிர்பார்க்காமலேயே
அவ்விடத்தை விட்டு நகர்ந்து விடுகிறாள் கவிதா.

இதனைத் தான் திருவள்ளுவரும் தனது திருக்குறளில்
குறிப்பிட்டுள்ளார்.

(1) யாகாவாராயினும் நாகாக்க - காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப்பட்டு.
_ குறள் 127 _

(2) தீயினால் சுட்ட புண் உள்ளாறும் - ஆறாதே
நாவினால் சுட்ட வடு.
_ குறள் 129 _

Print this post

2 comments:

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Unknown said...

நன்றிகள் நண்பரே