Wednesday, April 14, 2010

உள்ளுக்குள்ளே அழுகின்றேன்.

படுத்த வீடிழந்து
பக்கத்து உறவிழந்து
உடுத்த துணியிழந்து
உள்ளாடை கூட இழந்து
எல்லாத்தையும் இழந்து
ஏங்கியிருக்கிறோம்
நடுத்தெருவினிலே
குந்தி இருக்கிறோம்.

ஆர்ப்பரித்த அலை கடந்து
அகதி என்று நாம் வந்து
கம்பி வேலி முகாமினுள்
தும்பி போல சுறறுகிறேன்

சுரணை ஏதுமின்றி எதிரிசெய்த
மரணக் கொடுமை தாண்டி வந்து
சரண் அடைந்திருக்கிறோம் ஆசியில்
வரம் கொடு எமக்கென்று.

எமக்கிருக்கும் சோகங்கள்
பலகோடி ஆயிரம்.
அவைக்கிருக்கும் ஆழங்கள்
சித்தர்களின் பாயிரம்.
வலைக்கிருக்கும் ஓட்டைகள் போல் எம்
தலையிலிருக்கும் சோகங்கள்
பற்பல கோடிகள்.

எனக்கிருக்கும் வேதனைகள்
இன்னொருவர்க்கு எதற்கென்று
உதட்டிலே புன்னகையிட்டு
உள்ளுக்குள்ளே அழுகின்றேன்.
ஆறுதல் சொல்லி அரவணைத்து
ஆசியே எம்மைக் காத்திடு.

Print this post

No comments: