Monday, April 12, 2010

அம்மா

பச்சைக் குழந்தை முதல்
வெள்ளைக் காரன் வரை
இச்சையுடன் உச்சரிக்கும்
உச்ச வார்த்தை.

வெள்ளை மனத்துடன்
பிள்ளை உளமறிந்து
முலையினால் பாலூட்டி
கலைப்பாள் பசியை.

கலையைக் கையில் காட்டி
தலை வருடி ஆசையுடன்
உச்சி மோந்து உம்மாக் கொடுத்து
"அ" னா சொல்லி தமிழைப்பழக்கி
சமூகத்தின் கையில் தவழக்கொடுத்தவள்.

சம்மாலம் கொட்டி
சக்கைப்பணிய உட்கார்ந்து
சேலைத் தலைப்பினுள் தன்
நூலை வளர்த்திப் போர்த்து

குளிரேதுமின்றி
களிப்பாகத் தூங்கவைத்து
விழித்திருப்பாள் அன்னை
கழித்திருப்பாள் பிள்ளைக்காக
தன் காலமெல்லாம்.

சேயின் செல்லக் கதை கேட்டு
தாயின் உள்ளம் மகிழும்
வாயில் போடும் சனமென்று
காய்ந்த மிளகாய் தீயில் போட்டு
தீயவைப்பாள் கண்ணூறு கழிய.

பிள்ளையின் நலத்துக்காக
தன்னையே உருக்கித் தவமிருந்து
எந்தை எம் பிரானைப் பிரார்த்தித்து
சிந்தையில் வைத்திருப்பாள்
விந்தையாக...!!

Print this post

No comments: