சனத்திரளின் மத்தியிலே ஏற்றிவைத்த ஒளிபோலே
உனைஎந்தன் புத்தியிலே உறைக்கவைத்து சித்திரமாய்
வரைந்தது முழுநிலவாய் என்வாழ்வின் அனைத்துநாள்
இரவெல்லாம் பகலாக்க எனக்காக உனைப்படைத்து
குதிரையின் வால்போல பின்முட்டிவரை உன்கூந்தல்.
பயிரிட்டு வளர்த்ததுபோல் அதில்மல்லிகைப் பூப்பந்தல்.
அதைப்பார்த்து எனக்குன்மேல் விதவிதமாய் ஒருஉந்தல்
இதயமெல்லாம் ஆகிப்போச்சு ஒருநொடியில் பலகந்தல்.
அம்புபூட்டிய வில்லைப்போல வளைந்தநிற்கும் புருவங்கள்.
மீன்தரையில் துடிப்பதுபோல அடித்துக்கொள்ளும் கண்கள்.
அதைஒளித்து ஒளித்துஎம்மை தேடவைக்கும் இமைகள்.
இமையுள்ளே ஒளிந்துநின்று எட்டிப்பார்க்கும் மணிகள்.
பிடித்துவைத்த பிள்ளையார்போல அதனிடத்தில் மூக்கு
அதற்கழகின் அழகுசேர்க்க வைரத்திலொரு ஊக்கு
கடித்துவிடத் தோன்றுமவள் கொவ்வைப்பழ உதடு
கடைந்தெடுத்த வைரம்போல ஜொலிக்குமவள் பற்கள்.
பாய்ந்துசெல்லும் ஆறுபோல அவள்தலையில் நேருச்சி
வந்துசேரும் கடல்போல பரந்திருந்த பெருநெற்றி.
நெற்றிக்கண் இருப்பிடத்தில் சின்னதாக ஒருபொட்டு
ஒற்றைமணித் தோடுபோட்டு வளைந்திருந்த இருகாது
பஞ்சுமிட்டாய் கலரினிலே அவளுடைய கன்னம்
பஞ்சுபஞ்சாய் ஆக்கிவிடும் எம்மையது திண்ணம்.
கொஞ்சுஅவளை என்றுசொல்லி எம்மனது உன்னும்.
மிஞ்சிவிட்டால் அவள்கையால் எம்கன்னம் மின்னும்
பிரம்மனவன் படைத்துவிட்டான் அழகின் சிகரத்தில்
எண்ணத்திலும் அவளைவைத்தான் வானத்தின் உயரத்தில்
அச்சம்மடம் நாணத்துடன் அவளிருந்தாள் பயிர்ப்பில்
காரிருளில் உள்ளஒரு ஒளிவிளக்கின் வடிவில்
வஞ்சியவளை எனக்காகப் படைத்துவிட்ட முருகா
பஞ்சியின்றி தூதுசென்று என்சுகம்சொல் இறைவா
நெஞ்சினிலே கவலையின்றி காத்திருக்கச்சொல் அவளை
வஞ்சமின்றி உணவுண்டு மகிழ்ந்திருக்கச்சொல் தலைவா.
மன்னித்திடு இறைவா தூதுசெல்லச் சொன்னதற்கு
கன்னியவள் எனைநினைத்து தூக்கமின்றி இருப்பவளை
புண்ணியவான் நீதானே படைத்தவரைக் காக்கவேண்டும்.
அந்நியனாய் நில்லாது சேர்ந்துநின்று காத்திடுவாய்.
எம்மைநீ பிரித்துவைத்து வேடிக்கை பார்க்காமல்
வாழ்க்கையை கரிக்கவைத்து வாடிக்கை ஆக்காமல்
சேர்த்துவிடு இருவரையும் சிறப்பிடத்தில் ஒன்றாக
பார்த்து விடு எங்களையும் பக்குவமாய் சேயாக.
No comments:
Post a Comment