Friday, April 23, 2010

தினசரி செயலில் காட்டிவிடு.

காலையில் ஐந்துக்கு எழுந்துவிடு
மாலையில் பத்துக்கு படுத்துவிடு
மலத்தை தவறாது கழித்துவிடு
பல்லை தவிர்க்காது துலக்கிவிடு
தினமும் காலையில் குளித்துவிடு
அலம்பிய துணியை அணிந்துவிடு

உற்சாகமாய் நீயும் வாழ்வதற்கு
உடற்பயிற்சி தினமும் செய்துவிடு
உணவினை நேரம் தவறாது
உண்டு தண்ணீரும் குடித்துவிடு
உண்ட உடனே படுத்துவிடாமல்
கொஞ்சத் தூரம் நடந்துவிடு

பெற்றோருக்கு மதிப்பு கொடுத்துவிடு
அவரிடம் ஆசிகள் பெற்றுவிடு
கண்முன் நிற்கும் தெய்வமவர்
கடவுளாய் அவரை வணங்கிவிடு
பற்றின்மேல் பற்று வைத்தும்மை
பக்தராய்ப் போற்றி காத்திடுவர்.

மனங்களில் இலக்கை நினைத்துக்கொண்டு
வணங்கிடு உந்தன் கடவுள்தனை
நினைத்தது கைகூட வேண்டுமென்று
நித்தமும் வணங்கி துதித்துவிடு
நல்லதே எண்ணங்கள் வளர்த்துவிடு
கெட்டதை அடியோடு அழித்துவிடு

மற்றவர்க்கு மதிப்பு கொடுத்துவிடு
உற்றவரை உயர்வாய் மதித்துவிடு
மனைவியை சமமாய் நடாத்திவிடு
வாழ்க்கையை சரியாய் புரிந்துவிடு
அவரவர்க்கு அவருரிமை கொடுத்துவிடு
அடுத்தவரைப் பார்த்துநீ திருந்திவிடு

அளவோடு பணச்செலவு செய்துவிடு
அயராது வேண்டியளவு உழைத்துவிடு
வீட்டிலே சிறுதோட்டம் செய்துவிடு
விளைந்ததைக் கொண்டுநீ சமைத்துக்கொடு
எப்படிச் செய்வதென்று சொல்லிக்கொடு - உன்
பிள்ளைகள் தொடர்ந்து செய்வதற்கு

அடக்கமாய் நீயும் நடந்துவிடு
ஆனந்தமாய் என்றும் இருந்துவிடு
துக்கத்தைக் கண்டு துவளாது
நல்லதற்கு என்றே நினைத்துவிடு
அதற்கான பிழையை அறிந்துவிடு
அடுத்தமுறை அதைநீ திருத்திவிடு

நல்லதாய் வார்த்தைகள் பேசிவிடு
மற்றையோர் மனங்குளிர நடந்துவிடு
கற்றவரக ளோடுநீ சேர்ந்துவிடு
மற்றதெல்லாம் படிக்காமல் வந்துவிடும்
பற்றவை உன்மனதில் இலட்சியத்தை - அது
கொற்றமாய் வீற்றிருக்கும் உன்வாழ்வில்.

Wednesday, April 21, 2010

சமவுரிமை

சமவுரிமை
----------

சாதி மத பேதமின்றி

ஏற்றத் தாழ்வு இன்றி

சிறிது பெரிது இன்றி

ஆண் பெண் வேறுபாடின்றி

அனைவருக்கும் சமவுரிமை
சுடலையில்.


பிறப்பும் இறப்பும்
----------------

அனைத்தையும் அனுபவிக்க பிறப்பது ஒரு முறை

அவற்றையெல்லாம் பொய்யாக்க இறப்பது ஒரு முறை

இயற்கையின் நியதி
------------------

மானம் கற்பு போனால் வராது

மரணம் கழிபெயர் வந்தால் போகாது.

Tuesday, April 20, 2010

விண்ணை முட்டிய எங்கள் துயர்

ஆனைமுகம் கொண்ட ஆண்டவனே கணேசா
சேனைவந்து கொன்றபோது பார்த்தவனே குணேசா
பானையிலே சோறுதந்து காத்தவனே கணேசா
வானைப்பிழந்து குண்டுபோட்டும் மீட்கவில்லை குணேசா.

வாய்ததிறந்த போதினிலே அப்பனே என்றோம்
வாய்திறக்க வில்லையே எப்பவும் நீயும்?
பாய்விரித்து நிம்மதியாய் படுக்கவும் முடியலை
பாய்ந்துவந்து எம்மடியில் விழுகிறது எறிகணை.

கொழுக்கட்டை மோதகம் அவித்துமக்குப் படைத்தோம்
வெளுக்கட்டும் எம்மவர் தீவினைகள் என்று
களுக்கென்று சிரித்து கனைத்துவிட்டு இருந்தாயோ?
அழுக்கென்று எம்மையவர் அலைத்துவிட்டார் பார்த்தாயோ?

உன்னை நாங்கள்நம்பி ஊரினிலே இருந்தோம்
பண்ணை எங்கள்வயலினிலே மகிழ்ச்சியாக கிடந்தோம்.
விண்ணைமுட்டும் எங்கள்துயர் கேட்குமென்று நினைத்தோம்.
மண்ணைமுட்ட வைத்துவிட்டான் என்றுமவன் எதிரி.

விழுந்தவர் மேலெழுந்து வருவாரோ சொல்வேழா
அழிந்தவர் தொகையெழுந்து குவிகிறது ஆல்போல
தொழுதவர் அனைவரையும் அழுத்திவிட்டாய் கணேசா
வழுதவர் செய்ததையும் மழுப்பிவிட்டாய் குணேசா.

வீண்வேலை இவர்களுக்கு என்றுநீ நினைத்தாயோ?
ஆண்காளை அவர்களைநீ அலையவிட்டுக் கனைத்தாயோ?
கணதெய்யோ என்றுஅவர் கையெடுத்துக் கும்பிட்டதும்
கண்தெரியாது போச்சோ உம் கருவறைப் பாவியரை?

நியும் கைவிரித்து ஒதுக்கிவிட்டுப் போனால்
நீரும் எமைவிட்டு ஒதுங்கித்தான் போகும்
பாரும் எம்மவரை கைவிடடுப் போச்சு _ தினம்
தோறும் எம்மவர் படுகின்றார் பாடாய்.

உன்கதை எழுதுவதற்கு உன்தந்தம் முறித்தாய்
எம்கதை எழுதுவதற்கு எதைநீ முறிப்பாய்?
உன்காலில் விழுந்துநாம் வணங்கினோம் களித்து
ஊனர்கள் நாமென்று விட்டுவிட்டாய் கழித்து.

கொழுத்தி எரிக்கிறார் அவர்நெஞ்சினுள்ளே தீயை
வளர்த்து விடுகிறார் தம்பிஞ்சினுள்ளே வினையை _ எம்
கழுத்தினிலே வைக்கிறார் அவர்கையிலிருந்த வாளை
தழுவுதற்கு மரணத்தை சாகும்வரை ஆளை.

விநாயகனே வினையை வேரறுக்க வல்லான்
என்றுஒரு கவிஞனவன் பாரிறுக்கச் சொன்னான்.
உண்டுஅதில் உண்மையென்று தேரிழுத்து வாறோம்.
கண்டுவிடுஎம் அனைவரையும் ஊரிழந்து போறோம்.

பிஞ்சிழந்து காயிழந்து பழமிழந்து போறோம்
வஞ்சியிழந்து ப+விழந்து பொட்டிழந்து போனோம்
மிஞ்சியிருக்கும் மொட்டைக்காக்க கடல்கடந்து போறோம்
தஞ்சமடைந்து ஆசியிலேஎம் உயிரைக்காக்க நாமும்.

கட்டிலிலே படுக்கவைத்து பார்க்கிறார்கள் எம்மை
தட்டினிலே சோறுபோட்டு காக்கிறார்கள் நம்மை
வீட்டினிலே சேர்க்கும்வரை காத்துவிடு ஐயா _ உயிர்
கூட்டினிலே இருக்கும்வரை நினைத்திருப்போம் உம்மை.

Monday, April 19, 2010

வஞ்சியவள் எனக்காக




சனத்திரளின் மத்தியிலே ஏற்றிவைத்த ஒளிபோலே

உனைஎந்தன் புத்தியிலே உறைக்கவைத்து சித்திரமாய்

வரைந்தது முழுநிலவாய் என்வாழ்வின் அனைத்துநாள்

இரவெல்லாம் பகலாக்க எனக்காக உனைப்படைத்து


குதிரையின் வால்போல பின்முட்டிவரை உன்கூந்தல்.

பயிரிட்டு வளர்த்ததுபோல் அதில்மல்லிகைப் பூப்பந்தல்.

அதைப்பார்த்து எனக்குன்மேல் விதவிதமாய் ஒருஉந்தல்

இதயமெல்லாம் ஆகிப்போச்சு ஒருநொடியில் பலகந்தல்.


அம்புபூட்டிய வில்லைப்போல வளைந்தநிற்கும் புருவங்கள்.

மீன்தரையில் துடிப்பதுபோல அடித்துக்கொள்ளும் கண்கள்.

அதைஒளித்து ஒளித்துஎம்மை தேடவைக்கும் இமைகள்.

இமையுள்ளே ஒளிந்துநின்று எட்டிப்பார்க்கும் மணிகள்.


பிடித்துவைத்த பிள்ளையார்போல அதனிடத்தில் மூக்கு

அதற்கழகின் அழகுசேர்க்க வைரத்திலொரு ஊக்கு

கடித்துவிடத் தோன்றுமவள் கொவ்வைப்பழ உதடு

கடைந்தெடுத்த வைரம்போல ஜொலிக்குமவள் பற்கள்.


பாய்ந்துசெல்லும் ஆறுபோல அவள்தலையில் நேருச்சி

வந்துசேரும் கடல்போல பரந்திருந்த பெருநெற்றி.

நெற்றிக்கண் இருப்பிடத்தில் சின்னதாக ஒருபொட்டு

ஒற்றைமணித் தோடுபோட்டு வளைந்திருந்த இருகாது


பஞ்சுமிட்டாய் கலரினிலே அவளுடைய கன்னம்

பஞ்சுபஞ்சாய் ஆக்கிவிடும் எம்மையது திண்ணம்.

கொஞ்சுஅவளை என்றுசொல்லி எம்மனது உன்னும்.

மிஞ்சிவிட்டால் அவள்கையால் எம்கன்னம் மின்னும்


பிரம்மனவன் படைத்துவிட்டான் அழகின் சிகரத்தில்

எண்ணத்திலும் அவளைவைத்தான் வானத்தின் உயரத்தில்

அச்சம்மடம் நாணத்துடன் அவளிருந்தாள் பயிர்ப்பில்

காரிருளில் உள்ளஒரு ஒளிவிளக்கின் வடிவில்


வஞ்சியவளை எனக்காகப் படைத்துவிட்ட முருகா

பஞ்சியின்றி தூதுசென்று என்சுகம்சொல் இறைவா

நெஞ்சினிலே கவலையின்றி காத்திருக்கச்சொல் அவளை

வஞ்சமின்றி உணவுண்டு மகிழ்ந்திருக்கச்சொல் தலைவா.


மன்னித்திடு இறைவா தூதுசெல்லச் சொன்னதற்கு

கன்னியவள் எனைநினைத்து தூக்கமின்றி இருப்பவளை

புண்ணியவான் நீதானே படைத்தவரைக் காக்கவேண்டும்.

அந்நியனாய் நில்லாது சேர்ந்துநின்று காத்திடுவாய்.


எம்மைநீ பிரித்துவைத்து வேடிக்கை பார்க்காமல்

வாழ்க்கையை கரிக்கவைத்து வாடிக்கை ஆக்காமல்

சேர்த்துவிடு இருவரையும் சிறப்பிடத்தில் ஒன்றாக

பார்த்து விடு எங்களையும் பக்குவமாய் சேயாக.

Thursday, April 15, 2010

நா காக்க....!

சிறிது காலம் பழகினாலும் நிறைய நாட்கள்
பழகியது போன்ற புரிந்துணர்வைக் கொண்டிருந்தார்கள்
கவிதாவும் பிரியாவும்.

சாப்பிடுவதற்காக உணவகத்திற்கோ அல்லது
பொருட்கள் வாங்குவதற்காக கடைக்கோ விழையாடுவதற்கோ
எங்கு சென்றாலும் இருவரும் சேர்ந்தே போவார்கள் வருவார்கள்.

எங்காவது ஓரிடத்தில் இருவரில் யாராவது ஒருவரைப்பார்த்தால்
மற்றவரும் அங்கிருப்பார் என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளலாம்.
அந்தளவுக்கு ஆழமான நட்பாக இருந்தார்கள்.

அதைவிட இருவரும் என்ன இரட்டையர்களா என்று சக
நண்பர்களால் கேலி செய்யுமளவிற்கு அவர்களது நட்பு
இருந்தது.

இருவருடைய எண்ணங்களும் செய்கைகளும் தமது துன்பங்களை
பகிர்ந்த போது கிடைத்த ஆறுதல்களும் அவர்களை இரட்டையர்
களாக்கியதென்றால் அதில் எந்த விதமான மாற்றுக்கருத்துக்களும்
இருக்காது.

இந்தக் காலப்பகுதியில் தான் சோபிதாவின் நட்பு பிரியாவுக்கு
கிடைக்கிறது. பிரியாவுக்கு கிடைத்தால் அது கவிதாவுக்கும்
கிடைத்தது போன்றது தானே. இருவருக்கும் நண்பியாகிறாள்
சோபிதா.

கவிதா பிரியா நட்பு சோபிதாவுக்கு எரிச்சலூட்டியது. தனது
சந்தேகங்கள் எல்லாவற்றுக்கும் கவிதாவுடன் கலந்தாலோசித்து
பிரியா பதில் சொன்னது சோபிதாவுக்கு பிடிக்கவேயில்லை.
அதனால் இருவரையும் பிரிக்க சதித்திட்டம் தீட்டினாள்.

பிரியா கவிதா இருவரில் ஒருவர் இல்லாத சந்தர்ப்பங்களில்
மற்றவரைப்பற்றி குறை கூறி அவர்களிருவருக்குமிடையில்
வெறுப்புணர்ச்சியை ஏற்படுத்த கிடைக்கும் சந்தர்ப்பங்களை
எல்லாம் பயன்படுத்தினாள்.

இப்படி இல்லாத பொல்லாத் கதைகளையெல்லாம் ஒருவரைப்
பற்றி ஒருவரிடம் சொல்லி இருவருக்கும் சகுனியாக இருந்தாள்
சோபிதா.

சகுனியின் சதிக்கதைகளால் பிரியாவும் கவிதாவும் ஒருவரை
ஒருவர் சந்திக்கும் சந்தர்ப்பங்களை இயன்றவரை தவிர்த்து;க
கொண்டார்கள். எதிர்பாராத சந்திப்புக்களில் ஏனோ தானோ
என்று நலம் விசாரித்து நழுவினார்கள்.

ஒருநாள் பிரியாவும் சோபிதாவும் சதுரங்கம் விளையாடிக்
கொண்டிருந்தார்கள். இவ்விடத்தில் சோபிதாவிற்கு காய்களை
நகர்த்தும் ஐடியாக்களை சொல்லிக கொடுத்துக கொண்டிருந்தாள்
கவிதா.

இதனால் பிரியாவுக்கு தோல்விநிலையைக் காட்டிக்கொண்டு
இருந்தது. அத்துடன் அவளது ராணியை வெட்டும் சந்தர்ப்பம்
சோபிதாவுக்கு கிடைத்து வெட்டி விட்டாள்.

தனது ராணி வெட்டுப்பட்டதும் பிரியாவுக்கு கோபம் தலைக்கு
ஏறியது. கவிதாவுக்கு தாறுமாறாக என்ன பேசுகிறோம் எனறு
யோசிக்காமலே திட்டி விட்டாள்.

இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்த எண்ணிய சோபிதா
"உனது நண்பி இப்படி உன்னைத் திட்டி விட்டாளே" என்று
சொல்லி எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றினாள்
கவிதாவுக்கு.

Wednesday, April 14, 2010

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அன்பானவர்களுக்கு
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
எம் இனிய உறவுகளே இன்றைய நன்னாளிலே
நல்ல சிந்தனைகளை வளர்த்து, மற்றவர்களின் நல்வாழ்வுக்காகவும்
எமது நல்வாழ்வுக்காகவும் இறைவனைப் பிரார்த்திப்போம்.
இன்றைய நன்னாளிலே தீய வழிகளுக்கு செல்ல மாட்டோம் என்று உறுதியெடுத்து
எமது புதிய வாழ்க்கைப்பாதையில் காலடி வைத்து வீறு நடை போடுவோம்.
மீண்டும் ஒருமுறை புத்தாண்டு வாழ்த்துக்கூறி விடைபெறுகின்றேன்.
என்றும் அன்புடன்
உங்கள்
சிவநாதன்.

உள்ளுக்குள்ளே அழுகின்றேன்.

படுத்த வீடிழந்து
பக்கத்து உறவிழந்து
உடுத்த துணியிழந்து
உள்ளாடை கூட இழந்து
எல்லாத்தையும் இழந்து
ஏங்கியிருக்கிறோம்
நடுத்தெருவினிலே
குந்தி இருக்கிறோம்.

ஆர்ப்பரித்த அலை கடந்து
அகதி என்று நாம் வந்து
கம்பி வேலி முகாமினுள்
தும்பி போல சுறறுகிறேன்

சுரணை ஏதுமின்றி எதிரிசெய்த
மரணக் கொடுமை தாண்டி வந்து
சரண் அடைந்திருக்கிறோம் ஆசியில்
வரம் கொடு எமக்கென்று.

எமக்கிருக்கும் சோகங்கள்
பலகோடி ஆயிரம்.
அவைக்கிருக்கும் ஆழங்கள்
சித்தர்களின் பாயிரம்.
வலைக்கிருக்கும் ஓட்டைகள் போல் எம்
தலையிலிருக்கும் சோகங்கள்
பற்பல கோடிகள்.

எனக்கிருக்கும் வேதனைகள்
இன்னொருவர்க்கு எதற்கென்று
உதட்டிலே புன்னகையிட்டு
உள்ளுக்குள்ளே அழுகின்றேன்.
ஆறுதல் சொல்லி அரவணைத்து
ஆசியே எம்மைக் காத்திடு.

Tuesday, April 13, 2010

ஒருதாய்க்கு கன்றாக
























சான்றாக என்றும் இலக்கணமாய் நட்புக்கு
ஒன்றாக இருந்து ஒருதட்டில் உணவுண்டு
வென்றாக வேண்டும் வேற்றவர் வீம்பிலிருந்து
கன்றாக வேண்டும் ஒருதாய்க்கு உளமாற.

துன்பத்தின் போது துணிவாய் நிமிர்ந்தெழுந்து
இன்பத்தின் போது பணிவாய் மகிழ்ந்திருந்து
இரண்டும் ஒன்றென சமமாய் மதித்திருந்து
துணிவாக வாழணும் வாழ்க்கையின் வழியிருந்து.

நலமாய் எண்ணத்தை நல்லதாய் வளர்த்து
பலமாய் கருத்தை சிலையாய் வார்த்து
திடமாய் மற்றவர் உள்ளத்தை வென்று
விளைவாய் என்றும் உரமாக நன்றே.

சொந்தமாய் நீயும் உழைத்துப் பார்
சாந்தமாய் என்றும் வளர்ந்து பார்
மந்தமாய் நில்லாது கிளர்ந்து பார்
பந்தமாய் வளரும் உன்னுயிர் வேர்.

எல்லோரும் சமமென நினைத்துப் பார்
கல்லாரும் திறமென மதித்துத் தேர்
உள்ளாறும் அவர்மன ஆழத்தின் வேர்
வல்லோரும் உன்னிடம் அடக்கிடுவர் போர்.

ஒற்றுமையாக வாழ்

எதிர்க்கடை வேண்டும் கீரைக்கடைக்கென்பது
புதிர்போட்டு அவருடன் பொறாமைப்பட அல்ல
மற்றவரை விட முன்னேறிட என்பதே தவிர
உற்றவரை ஏறி மிதித்திட அல்ல.

கற்றவர் பலரில் உள்ள குறை
கல்லாதவரை பலதில் மறைக்கும் முறை
இல்லாதவரை ஏய்த்துப் பிழைக்கும் கறை
செல்லாதவரை தவிர்த்து கசக்கும் துறை

பெட்டிசம் எழுதி பெரியாள் ஆகி
பட்டியில் இருக்கும் மாடுகள் போல
மற்றவரை எல்லாம் துடிக்க வதைத்து
உள்ளவரை செய்வார் துன்பம் தினமும்.

என்ன செய்வான் பாவி அவன்
சொன்ன சொல்லை தாவிக் காத்து
காலம் பூரா துன்பத்தில் தவித்து
சீலம் போவான் சீராக வானில்.

திருந்திட வேண்டும் கல்வி கற்றவர்
மருந்திட வேண்டும் கல்லாதவற்கு
அழுதிட வேண்டும் செய்த பிழைக்கு
உழுதிட வேண்டும் உள்மனம் எல்லாம்.

கழுதை போல் தாழ்ந்து வாழாது
பழுதை நீக்கி வாழ்ந்து நீகாட்டு
தொழுது தினமும கடவுளை நினைத்து
கழுவு உந்தன் பாவ நாசங்களை.

இனியாவது திருந்தி ஒற்றுமையாக வாழ்
இல்லையேல் உன்னினம் மற்றவரினால் பாழ்
செய்தபிழை பொறுக்க மன்னிப்புக்கேட்டு வீழ்
சேர்ந்துவிடும் உன்னுடன் பலம்கொண்ட வேழ்.

உறுதியுடன் நின்றுஉன் இலட்சியம் நிறைவேற்று
அறுதியிட்டு கூறுஉன் இலட்சியம் இதுவென்று
மறதியின்றி நினைத்திரு தினம்தினம் அதுவொன்றை
சுருதியுடன் நிகழும் கிட்டியசில காலத்தில்

முடிந்தவரை நீ பொறாமையின்றி வாழ்
அடுத்தவரை நீ அரவணைத்துச் செல்
கொடுத்தவரை நீ மறந்ததிடாது நினை
கெடுத்தவரை நீ மறந்துவிட்டுக் கனை

வயது போனால் வழிவிடு இளையோர்க்கு
தீயது வந்தால் தேய்த்திடு அழிவதற்கு
நல்லது சொல்லி வழிகாட்டு புதியவர்க்கு
வல்லவன் நீயென்று வையகம் போற்றுதற்கு

Monday, April 12, 2010

Hail or Fail

The people are living civil!
To military, they have to hail!
If not they have to go to jail!
Therefore their life will be fail!
Ethnics were living together like as finger and nail!
But government have not treated them equal!
They sent to government about that many mail1
But all mails had gone to pail!
Therefore they had got wail!
Their tragedy all have been veil!
Then the people were sent to the world a rail!
But they also give people ail!
Therefore they have come to Aussy by sail!
If the people would exile,
They want to go again jail!
Their life will become again fail!

அம்மா

பச்சைக் குழந்தை முதல்
வெள்ளைக் காரன் வரை
இச்சையுடன் உச்சரிக்கும்
உச்ச வார்த்தை.

வெள்ளை மனத்துடன்
பிள்ளை உளமறிந்து
முலையினால் பாலூட்டி
கலைப்பாள் பசியை.

கலையைக் கையில் காட்டி
தலை வருடி ஆசையுடன்
உச்சி மோந்து உம்மாக் கொடுத்து
"அ" னா சொல்லி தமிழைப்பழக்கி
சமூகத்தின் கையில் தவழக்கொடுத்தவள்.

சம்மாலம் கொட்டி
சக்கைப்பணிய உட்கார்ந்து
சேலைத் தலைப்பினுள் தன்
நூலை வளர்த்திப் போர்த்து

குளிரேதுமின்றி
களிப்பாகத் தூங்கவைத்து
விழித்திருப்பாள் அன்னை
கழித்திருப்பாள் பிள்ளைக்காக
தன் காலமெல்லாம்.

சேயின் செல்லக் கதை கேட்டு
தாயின் உள்ளம் மகிழும்
வாயில் போடும் சனமென்று
காய்ந்த மிளகாய் தீயில் போட்டு
தீயவைப்பாள் கண்ணூறு கழிய.

பிள்ளையின் நலத்துக்காக
தன்னையே உருக்கித் தவமிருந்து
எந்தை எம் பிரானைப் பிரார்த்தித்து
சிந்தையில் வைத்திருப்பாள்
விந்தையாக...!!

Sunday, April 11, 2010

ஏன் எம்மைக் காக்கவில்லை?




நல்லூரில் வீற்றிருக்கும் கந்தனே முருகா

உள்ளுரில் சுற்றியிருக்கும் சண்டைகளைய வாவா

தமிழூரில் பற்றியிருக்கும் தமிழடக்கு முறைகளை

அள்ளுரில் கோட்டு நசுக்கிவிட வாவா


எறிகணை கொண்டு பறிக்கிறார் எம்முயிரை

பறிகளும் இன்றிநாம் பரந்து திரிகின்றோம்.

சொறிகளும் விடவில்லை துரத்துது எம்மை.

கரிக்குது நாக்கு கடிக்க ஏதுமின்றி.

Saturday, April 10, 2010

உலகறிய உரை

பிறக்கும்முன்பு கருவறையில் பத்துமாதம் சிறை
இறந்தபின்பு தரையிலுடல் உக்கும்வரை சிறை
இதைஅனைவர் அறிதெளிய உலகமெலாம் பறை
இனியாவது திருந்தட்டும் அவரிலுள்ள குறை.

பயமின்றி செய்கிறார்கள் பெரும்பெரும் கறை
அதைமறைக்க வாளெடுத்து இடுகிறார்கள் உறை
இதுதெரிந்தும் கீழிருக்குமுன் நெஞ்சிலில்லையோ மறை
அவர்கையை எடுத்துவைத்து மரத்தில்வைத்து தறை

அவரிருந்தும் எமக்கு கிடைக்கவில்லை ஒரு கரை
அமைச்சராகி ஆரவாரமாய் அமர்ந்திருந்த வரை
நாம்செய்தோம் வேலையின்றி அப்பூனைகளுக்கு சிரை
இதையெடுத்து உலகறிய ஒவ்வொறுவறுக்கும் உரை.

நான் தான் உங்கள்பிரதியென்று பிச்சை வாங்கும் துரை
வரமாட்டார் அதன்பின்னரெம் தலையில்விழுந்தாலும் நரை
அடுத்ததடவை அவர்வந்தால் தெருநாய்போல் குரை
அவரைப்போட்டு உடைத்துவிடு நடுத்தெருவில்காய்ச் சுரை

எமக்கென்று நிலம்காண உறுதிகொண்டு விரை
உறுதிகொண்டு ஆகிவிடு விவேகம் கொண்ட மரை
அடுக்கடுக்காய் நின்றுகாட்டு எதிரிக்கு உன் நிரை
கிழிந்தவலை பின்னுவது போல் எதிரியைவைத்துப் புரை.

கௌரவம் ஆடம்பரம் நீக்கு அந்தத் திரை
அவற்றையெல்லாம் கட்டுபல சாக்குசாக்காய் சரை
கொண்டுசென்று எறிந்துவிடு கடலில்கிளம்ப நுரை
அனைத்தும் தொலைஞ்சு போச்சுதென்று உன்மனது நிறை

உன்னைநீ வளர்த்துக்கொள் ஒருபெருந் துறை
அதனால்நீ சேர்த்துவிடு என்றுமழியாத் திறை
எல்லோருக்கும் அந்தமர்மம் சொல்லுஒரு முறை
அவர்வலர்ந்து வந்துவிட்டால் உன் பெருமையெண்ணி நிறை.

Friday, April 9, 2010

என் கனவுக்கன்னி


உன்
கருவிழித் தூண்டலிலே
கருக்கட்டியது என் காதல்.
மெருகூட்டி உருவாக்கி
தருவாக்கினேன் நான்.

உன் பார்வை வீச்சினிலே
என் பாவை சிக்கியது.
விண் உயர மூச்சொன்று
வீசி விட்டு அடங்கியது.

என் கனவுக் கன்னியென
உன்னை நான் வரித்துக் கொண்டேன்.
எந்நாளும் உன்னை நான்
கனவினிலே கண்டு வந்தேன்

உன் மீது ஆசைகள்
பன்மடங்கு வளர்த்து வந்தேன்.
கன்னத்திலே முத்தம் உனக்கு
கனவினிலே இட்டு வந்தேன்.

இப்போதும் துள்ளிக் குதிக்குதடி ஆசைகள்
எப்போதும் நான் வந்து உன்னுடன் இருப்பதற்கு.
பற்பல கனவுக்ள... விதம் விதமாக..
சொல்லவும் வேண்டுமோ வாலிபக் கனவுகளை.

காற்றாக வந்து கசமுசா செய்கின்றாய்
போர்வையுள் புகுந்து பூராயம் காட்டுகின்றாய்.
வேர்வையில் என்னை நனைத்தே விடுகின்றாய்
பார்வையில் எல்லாம் பகல்க் கனவாக..

கத்திக் கத்தி தொண்டைத் தண்ணி வற்ற
பித்துப் பிடித்து பேயாய் அலைகின்றேன்.
பத்துப் பத்தாய் வயதுகள் தாண்டி
மொத்தமாய் முப்பது முடிஞ்சு போச்சடி.

காட்டமாய் நானுன்னை கட்டி அணைக்க
வட்டமாய் நீயும் வளைந்து தாடி
திட்டமாய் நீயென்னை அழைத்துப் போக
கூட்டமாய் வாடி என்னைக் கூட்டிப்போக..

அடையாள அட்டை

"அம்மா நான் போட்டு வாறன்" என்று சொல்லி பதிலையும் எதிர்பாராமல்
காலையில் சாப்பிடவோ தண்ணீர் குடிக்கவோ நேரமில்லாமல் தனது
சைக்கிளை எடுத்து வேகமாக மிதக்கத்தொடங்கினான் ரூபன். ஓடும் போது
மணியை ஒருமுறை பார்த்தான். மணி 7.53 ஐக் காட்டிக்கொண்டிருந்ததால்
சைக்கிளை மேலும் வேகமாக மிதிக்கத்தொடங்கினான்.

முதல்நாள் பள்ளிக்கூடத்தில் கணிதபாடத்தில் தந்த வீட்டுவேலையைச்
செய்யாததால் சுபத்திரா ரீச்சரிடம் அடி வாங்கியதும் பெண்கள் முன்
அவமானப் பட்டதுமே நினைவுக்கு வந்து கொண்டிருந்தது. அதைவிட
அடுத்தநாள் செய்துவராவிட்டால் வகுப்பை விட்டே கலைத்துவிடுவேன்
என்று மிரட்;டியதே அன்று இரவு நீண்டநேரம் விழித்திருந்து வீட்டுவேலை
செய்யக் காரணமாக இருந்தது. செய்து முடித்து நித்திரையாக பின்னிரவு
2 மணியைத் தாண்டியிருந்தது. அதனால் காலையில் எழும்ப 7.20 ஆகி
விட்டிருந்தது.

இருப்பினும் உடன் எழுந்து அவசரமாக குளித்து நீலக்காற்சட்டையும்
வெள்ளைச்சேட்டும் அணிந்து முதல்நாள் விளையாடியதால் சப்பாத்தில்
படிந்திருந்த புளுதியையும் துடைத்து போடடுக்கொண்டு வேகவேகமாய்
ஓடிவந்ததை நினைத்தவன் சுபத்திரா ரீச்சரின் அடியால் அவமானப்படுவதை
விட இன்று அவசர அவசரமாக வெளிக்கிட்டு வியர்க்க விறுவிறுக்க
பள்ளிக்கூடம் போவது மேல் என்று மேலும் வேகமாக சைக்கிளை
மிதித்து ஆமிக்காம்ப் சந்திக்கு வந்து சேர்ந்தான்.

சந்தியில் வழமைக்கு மாறாக சனங்கள் வரிசையில் நிற்பதைப்பார்த்த
ரூபன் இன்று பள்ளக்கூடத்திற்கு 8.15 க்கிடையில் போய்ச்சேரலாமா?
என்ற சந்தேகத்துடன் சென்றாலும் தனக்கு தனது பள்ளிக்கூட யுனிபோம்
துணைபுரியும் என்ற் எண்ணத்துடன் ஆமிக்காரனுக்கு கிட்ட போனவன்
ஏமாந்தே போனான். வழமையாக அடையாள அட்டை கேட்காத ஆமிக்
காரன் அன்று கேட்டான்.

" மல்லி ஐ.சி யக் கண்ட..."
" பொட்டக் இண்ட சேர் மங் கனவா..."
" வெலாவ கியா... கண்ட.... இக்மண்ட...."

அடையாள அட்டையை தனது மணிபேசிலும் புத்தகப்பையிலும் மாறிமாறி
தேடியும் கிடைக்கவில்லை. எங்கு போயிருக்கும் என யோசிக்கும் போது
தான் முதல் நாள் பின்னேரம் அடையாள அட்டை இலக்கத்தினை விதா
னையாரிடம் பதிவதற்காக அப்பா வாங்கியதும் பின்னர் அவர் தந்த போது
வாங்கி மேசையி;ல் வைத்ததும் வரும்போது எடுக்க மறந்ததும் நினைவுக்கு
வரவே..

" சேர்..... மம அமத்தவுணா சேர்.... மகே ஐ.சி கெதரட்ட தியன்னே....
கெட்ட எனக்கொட்ட கேண்ட சேர்..... தங் வெலாவ கியா சேர்.....
மம ஸ்கூலட்ட யண்டோண சேர்.....'

"ஏமத.....? தம்ச ஸ்கூலட்ட யண்டோணத....? தம்ச தமாய் கொட்டி....
தம்ச தமாய் உதயட்ட வெடித்தியன்னே..."

என்று உறுக்கியவாறு அடிக்கப் போனான் அந்த ஆமிச்சிப்பாய். அந்த
அடியில் இருந்து லாவகமாக விலகிக் கொண்ட ரூபன்