Thursday, July 10, 2008

கனவாகவே போய்விட்ட கனவு.....!!!


முரளி ஒரு படித்த குடும்பத்தை சேர்ந்தவன்.
வீட்டில் ஐந்து சகோதரர்களுள் இவன் நடுப்பிள்ளை.
மூன்று ஆண்கள், இரண்டு பெண்கள். இவனுக்கு,
அக்கா, அண்ணா, தம்பி, தங்கை என எல்லா உறவு
முறைகளும் இருந்தன.

சிதம்பரப்பிள்ளை, முரளியின் அப்பா. சிறிய பாடசாலை
ஒன்றில் அதிபராக இருக்கிறார். அம்மா வீட்டுப்பணி,
அதனால் அம்மாவின் கட்டுப்பாட்டில் பிள்ளைகள் வளர்ந்தனர்.

சிதம்பரத்தாரின் மாதச்சம்பளமான பதினையாயிரம்
ரூபாவினை நம்பியே, அந்த குடும்பத்தின் ஏழு ஜீவன்களும்,
உணவு, உடை, படிப்புச் செலவு என அனைத்துத்
தேவைகளையும் நிறைவு செய்து வந்தார்கள்.

வீட்டில் மூத்தவன் எனும் வகையில் தர்சனும்,
மூத்தவள் எனும் வகையில் தர்சினியும்,
கடைக்குட்டி எனும் வகையில் சுதனும்,
இளையள் எனும் வகையில் சுதாவும்,
செல்லப்பிள்ளைகளாக இருந்தனர்.
முரளி மட்டும் நடுவில் பிறந்ததால், எடுபிடிப்
பிள்ளையாகப் போய் விட்டான்.


குடும்பத்தாரின் வருமானப் பற்றாக்குறை காரணமாக,
ரேவதியம்மா, வீட்டில் கிடுகு பின்னுதல், தேங்காய் விற்றல்,
காய்ந்த தேங்காயில் எண்ணெய் எடுத்தல்... போன்ற ,
சிறு கைத்தொழில் வேலைகளைச் வேலைகளை செய்து
ஓரளவு செலவுகளை சமாளித்து வந்தார்.

அம்மாவின் கண்டிப்பும், அப்பாவின் ஆதரவும்,
பெண்களை படிப்பிக்க முடியா விட்டாலும்,
மூத்த, இளைய மகன்களை படிப்பித்து ஒரு நல்ல
நிலைக்கு உருவாக்கி விட்டார்கள்.

அதற்காக முரளியை பெற்றோர், கை விட்டதாகவோ,
முரளி படிக்க மாட்டான் என்றோ, எண்ணி விடாதீர்கள்.

முரளி இளகிய மனம் படைத்தவன்.
எல்லோருக்கும் உதவி செய்ய வேண்டுமென்று நினைப்பவன்.
குடும்பத்தின் நிலை அறிந்து எந்நேரமும் தாய்க்கு உதவியாக
இருப்பதுடன், தனது படிப்பிலும் கெட்டித்தனமாக படித்து வந்தான்.

அவன், வகுப்பில் எப்போதும் முதலாம் பிள்ளை தான்.
அவனது வகுப்பில், அவனுக்கும், சிறீதேவிக்கும் தான்
போட்டி இருக்கும். ஆனாலும் எப்போதும் 70 அல்லது
80 மார்க்குகள் வித்தியாசத்தில், முதலாம் பிள்ளையாக
வந்துவிடுவான்.

காலப்போக்கில் இருவருக்குள்ளும் ஓர் காதல் உணர்வு
இருந்தாலும், அதனை வெளியில் காட்டிக் கொள்ளாது,
தொடர்ந்து படித்தனர்.

ஓ/எல் பரீட்சையும் வந்தது. இருவரும் மிகச் சிறந்த
பெறுபேறுகளைப் பெற்று சித்தியடைந்தனர்.

ஏ/எல் இல் இருவரும், விஞ்ஞானப் பிரிவை தேர்ந்தெடுத்து
படித்து வரும் சந்தர்ப்பத்தில் முரளிக்கு படிக்க முடியாத
சூழல் ஏற்படுகின்றது.

இடம்பெயர்வின் காரணமாக, 5 வருடங்கள் வரை படிப்பை
தொடர முடியவில்லை. இருப்பினும் படிக்க வேண்டும் என்ற
ஆர்வம், ஏன் வெறி என்று கூட சொல்லலாம்.
அது அவனிடம் குறையாமலேயே இருந்தது.

ஐந்து வருடங்களின் பின்னர் ஓர் உதவி வழங்கும் நிறுவனத்தின் ஊடாக, ஏ/எல் கணிதப் பிரிவில் இரு வருடப் படிப்பை ஒரு வருடத்திலேயே தனது முழுமையான திறமைகளையும், பயன்படுத்தி படித்து பல்கலைக்கழகம் செல்லக்கூடிய அளவுக்கு மார்க்கைப் பெற்று பரீட்சையில் சித்தியடைந்தான்.

ஆனாலும் நாட்டுச் சூழல் காரணமாக குறித்த பல்கலைக்கழகத்தில் படிப்பைத் தொடர முடியாத நிலையிலும், குறித்த அந்த உதவி வழங்கும் நிறுவனத்தின் பண உதவியுடன், வெளிநாடு ஒன்றில் கல்வி கற்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டான் முரளி.

அங்குள்ள பல்கலைக்கழகத்தில் மொழி உட்பட இடம், நண்பர்கள் என அனைத்தும் புதியதாக இருந்தது முரளிக்கு.
ஆரம்பத்தில் வகுப்புக்குச் சென்றபோது அனைத்து வகுப்புக்களும், ஆங்கில மொழியிலேயே போதிக்கப்பட்டது.
அது அவனுக்கு எதயுமே புரிய வைக்கவில்லை....
சிதம்பர சக்கரம் தான்....

ஒரு சில மாதங்கள் வீட்டிலிருந்தோ, அல்லது
குறித்த நிறுவனத்திலிருந்தோ, பரீட்சைப் பெறுபேறுகள்
கேட்கப்படும் என்ற ஓர் பயத்தில் படித்து வந்தான் முரளி.

ஆனாலும் அங்கிருந்தும, எந்த கேள்விகளும் வரவில்லை
என்பதால், அவனிடம் இருந்த பயங்களும் போய்,
எதையுமே கருத்தில் எடுக்காது சாதாரணமாக காலையில்
வகுப்புக்குச் செல்வது, மாலையில் வீட்டில் இருக்கும்
நண்பர்களுடன் அரட்டை அடிப்பது, பட்மின்ரன் விளையாடுவது, செய்திகள் வாசிப்பது என நேரத்தை
விரயம் செய்தான்.

இறுதியில் அவனது படிப்புக் காலம் முடிவடைந்து
வெளியாகிய போது அவனுக்குரிய பரீட்சைப் பெறுபேறு
பட்டம் பெறுவதற்குரிய மார்க்கை வாங்காது விட்டதால்
சித்தியடையவில்லை.

இதனால், இடப்பெயர்வு காரணமாக விரயமான ஐந்து வருடங்களுடன், மேலும் ஐந்து வருடத்தை விரயமாக்கியதுடன் பெருந்தொகைப் பணத்தினையும் செலவு செய்திருந்தான்.

இந்த வகையில் முரளி ஆங்கில பாடத்தில் முனைப்புக் காட்டி, சற்று கவனமெடுத்து படித்திருந்தால், அவனால் சிறந்த பட்டதாரியாக வந்திருக்க முடியும். ஏனெனில் அவனிடம் அந்த திறமை இருந்தது.

இரு வருடப்படிப்பை ஒரே வருடத்தில் முற்றிலும்
வேறுபட்ட, அதாவது விஞ்ஞானப்பிரிவில் இருந்து
கணிதப்பிரிவுப் பாடங்களை படித்து தேர்ச்சி பெற்றவன்.

இதில் தவறு எங்கு நடந்தது என ஆராய்ச்சி செய்து பார்ப்போமாயின்,


(1). முரளியை படிப்பிக்க வேண்டும் என்ற அக்கறையை, குறித்த நிறுவனம் அவனது பரீட்சைபெறுபேறுகளை பரிசீலிக்க வேண்டும் என்றும், அக்கறை செலுத்தியிருந்தால் அவனை பட்டதாரியாக்கியிருக்கலாம்.

(2). குறித்த நிறுவனம் தானே உணவில் இருந்து, அனைத்து
தேவைகளுக்குமான செலவுகளையும் செய்கின்றது. இதில்
நாங்கள் என்ன அக்கறை காட்ட வேண்டி இருக்கிறது
என்று பெற்றோர் அக்கறை இன்றி இருந்திருக்கலாம்.

ஆனாலும் இவை எல்லாம் ஒரு ஆரோக்கியம் நிறைந்த
முடிவான ஆய்வாக இருக்காது.

ஆனால் முரளி,
தனது படிப்பில் முனைப்புடன் மும்முரமாக ஈடுபட்டிருந்தால்.............,
தனது அண்ணன், தம்பியின் கல்வி நிலைகளை எண்ணி தானும், அவ்வாறு வரவேண்டும் என்ற, குறிக்கோளுடன் படித்திருந்தால்................,
என்னைப் படிப்பைக்க வைத்த நிறுவனத்திற்கு,
என்றும் நன்றிக்கடனுடையவனாக, எனது படிப்பைக் கொண்டு சேவைகள் செய்ய வேண்டும் என்ற உறுதியுடன் படித்திருந்தால்................,
குறித்த நிறுவனம் தனது படிப்புச் செலவுகளுக்காக தரப்படும் பணத்திற்காக, எவ்வளவு கஸ்ரங்களை அனுபவித்திருக்கும் என்ற தெளிவு இருந்திருந்தால்.................,
சகல திறமைகளும் உள்ள முரளியும் தனது அண்ணன், தம்பி போல், ஒரு சிறந்த பட்டதாரி தான் என்பது மறுக்கப் பட முடியாத உண்மையாகும்............!!

Print this post

1 comment:

Unknown said...

முரளிக்கு கிடைத்த அருமையான வாய்ப்பு. தவற விட்டு விட்டார். வீட்டுக்காரர் கொஞ்சம் கவனமெடுத்திருக்கலாம். கொம்பனி பல வேலைகளில் இருந்திருக்கலாம். உதாரணத்திற்கு வகுப்பொன்றில் படிக்கும் பிள்ளை மீது ஆசிரியை செலுத்தும் அக்கறையை விட வீட்டுக்காரர் செலுத்தும் அக்கறை கூடுதலாக இருக்கும். அந்த வகையில் முரளியின் தோல்விக்கு, முதலாவது முரளியும் இரண்டாவது முரளியின் வீட்டுக்காரருமே காரணமாகின்றனர் என்பது என் கருத்து.