Wednesday, July 9, 2008

தேற்றிக்கொள் மனதை....!!!




மெய் மறைத்து, உன்மீது
பொய்ப் புகார்கள் செய்வார்கள்.
வாய் தவறியேனும் அவர்கள் மீது- நீ
நாய் போல் பாய்ந்து குதறி விடாதே...!

இல்லாத பொல்லாதவை எல்லாம் - எந்த
தள்ளாத வயதிலும், தளராது,
பல்லெல்லாம் இளித்துக் காட்டி,
சொல்லால் அடிப்பர், உனைப்பற்றி...!

இவையெல்லா, வற்றையும் பார்த்து,
அவையில் தளர்வாக இருந்து விடாதே.
கயவர் வீசும், ஒவ்வொரு சொல்லும் - உனை
உயர்த்தும் அத்திவாரக் கற்கள், நினைவிற்கொள்...!

காய்க்கிற மரத்துக்கு தான், கல்லெறி விழும் - அவரிடமிருந்து
பாய்கிற சொற்கள் உன் திறமைகளின் எண்ணிக்கைக்கு சமம்.
சாய்க்கிற நோக்கம் தான் உன் திறமைகளை..,
வேய்ந்த வீட்டுக்குள், நெல்மணி போல் பத்திரமாக காத்திடு...!

தற்காலிக பின்னடைவு தான் இது என்பதை
பிற்காலத்தில் புரிந்து கொள்வாய்.
முற்காலத்தில் நடந்தை யோசித்துப் பார்,
எக்காலத்திலும் வெற்றி உனக்குத் தான்....!

தேற்றிக் கொள் மனதை, பின்னடைவுகளில் இருந்து,
போற்றிக்கொள் தமிழ்த்தெய்வம், முருகனை என்றும்,
தொற்றிக்கொள் உன் மன வலிமையை மேலும் - பறை
சாற்றிக்கொள் வெற்றிகள் என்றென்றும் உனதென்று....!!!

Print this post

No comments: