Saturday, September 22, 2012

மறக்க முடியாத நினைவுகள்.



மாலதி தேவகி என்ற இரு சகோதரிகள் தமது நாட்டில் நடந்த யுத்தம்

காரணமாக தந்தையை அநியாயமாக பலி கொடுத்து தாயை தவற விட்டு

யாருமே இல்லாது வேறோர் நாட்டுக்கு அகதித் தஞ்சம் கோரிச் சென்று

குடிவரவுத்துறையின் தடுப்பு முகாமில் காத்திருந்தார்கள்.



தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டவர்களின் மனநலங்களை பேணும்

அமைப்பொன்று அங்கு செயற்பட்டுக்கொண்டிருந்தது. அவர்கள் தினமும்

தடுத்து வைக்கப்பட்டவர்களால் கொடுக்கப்பட்ட வாக்குமூலங்களை

பரிசீலித்து அதில் உள்ள துயரம் நிறைந்த சம்பவங்களை தூக்கிப்பார்த்து

அவற்றினடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டவர்கள் சிலரை அழைத்து

கதைத்து அவர்களது மனோபலங்களை கூட்டுவதற்கு முயற்சி

செய்வார்கள்.



இந்த வகையான பரிசீலனையின் வரிசையில் அடுத்த படியாக தேவகியும்

மாலதியும் வியாழக்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு

அழைக்கப்பட்டிருந்தார்கள்.



அது ஒரு விசாலமான அறை. நான்கு பக்கச் சுவர்களுக்கும் வெள்ளை

நிறத்திலான வர்ணம் பூசப்பட்டிருந்தது. நடுவில் ஓர் வட்ட மேசை

போடப்பட்டு அதில் மேசை விரிப்பு விரிக்கப்பட்டிருந்தது. அந்த விரிப்பிலே

புள்ளிமான் கலைமான் இரண்டும் சேர்ந்து ஓடிக்கொண்டிருந்தது.

அவற்றினைத் தொடர்ந்து இரண்டு குட்டி மான்கள் ஓடிக்கொண்டிருந்தது.

அந்த மேசையைச் சுற்றி நான்கு பச்சை நிறத்திலான பிளாஸ்ரிக்

கதிரைகள் போடப்பட்டு அக்கதிரைகளில் இருப்பவர்களின் பாவனைக்கென

நான்கு தண்ணீர்ப் போத்தல்களும் வைக்கப் பட்டிருந்தன.



இங்கு தான் மாலதியும் தேவகியும் அழைத்து வரப்பட்டு உட்கார

வைக்கப்பட்டிருந்தார்கள். சில நிமிடங்களில் மனநலம் பேணும்

அமைப்பைச் சேர்ந்த அம்மையார் ஒருவரும் மொழிபெயர்ப்பாளர்

ஒருவரும் உள்ளே வந்து மற்ற இரு கதிரைகளிலும உட்கார்ந்த

அம்மையார் தனது பெயர் திருமதி மாக்கிரட் என்றும் தாம் வந்த

நோக்கத்தையும் சொல்ல மொழிபெயர்ப்பாளர் அப்படியே மொழி

பெயர்த்தார்.



இவ்வாறே அம்மையார் சொல்லச் சொல்ல ஒரு சொல்லுத்தப்பாது

விளக்கமாக விபரித்துக் கொண்டிருந்தார் மொழிபெயர்ப்பாளர்.



" நீங்கள் உங்களது வீட்டைப் பற்றியும் அப்பாவின் இழப்பைப் பற்றயும்

அம்மாவை தவற விட்டதைப் பற்றியமே எண்ணிக் கவலைப்பட்டுக்

கொண்டிருப்பீர்கள்........

இரவு நித்திரைக்குப் போனாலும் அந்த அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள்

திரும்பத்திரும்ப நினைவுக்கு வந்து பழைய வற்றை மீட்டும்....,...

நித்திரையும் வராது... அப்படியிருந்தும் உடல் அசதியில் தூங்கி விட்டாலும்

கனவுகளில் பழைய நினைவுகள் வந்து துன்புறுத்தும்............



இது மட்டுமல்லாமல் ஒரு செயலில் மனதை நிலை நிறுத்த முடியாமல்

மனம் தத்தளிக்கும்....



உதாரணத்துக்கு உங்கள் மொழி மேம்பாட்டுக்காக இங்கு நடக்கும்

ஆங்கில வகுப்புக்களில் கலந்து கொள்வீர்கள் ஆனாலும் உடல் வகுப்பில்

இருக்கும், ஆனால் மனம் உங்களது பழைய துயரங்களையும்

ஏக்கங்களையுமே நினைவு படுத்தி ஊசலாடும்................

இதனால் கிரகிக்கும் தன்மை இல்லாதிருக்கும்...............

திடீர் திடீரென அடக்க முடியாத கோபம் வரும்.... .....

சில வேளைகளில் குற்ற உணர்ச்சிகள் உங்களை தாழ்வு

மனப்பான்மைக்கு இட்டுச் செல்லும்..... ...............

அடிக்கடி ஞாபக மறதிகள் உண்டாகும்....................



இவ்வாறு பல கஸ்ரங்களுக்கு முகம் கொடுப்பீர்கள்.............

இவற்றை எல்லாம் திரும்பத்திரும்ப மனதில் ஓட விடுவதால் ஏற்படும்

பின்விளைவுகள் மிக மோசமாக இருக்கும்.



புதியவர்களுடன் நட்பாக பழக முடியாதிருக்கும்..............

வேலைகள் தேடுவது கஸ்ரமாக இருக்கும்..............

ஆங்கில மொழி படிப்பது போன்ற இன்னும் பல விடயங்கள் உங்களுக்கு

கடினமாக இருக்கும்...........



இதனால் இதனை நீங்கள் மறக்க முற்பட வேண்டும். இவற்றை மறக்க

அல்லது குறைக்க காலையில் எழுந்து சிறிதளவேனும் உடற்பயிற்சி

செய்யுங்கள்.............

உடல் அசதியினால் இரவு நித்திரை விரைவில் வந்து விடலாம்.



அதே போல், மூச்சுப் பயிற்சி ஒன்றுள்ளது............

அதனை நீங்கள் செய்யலாம்.



அதாவது மூச்சை உள்ளிளுக்கும் போது ஒன்று...... இரண்டு.... மூன்று ... என

ஒரே இடைவெளியில் ஐந்து வரை எண்ணி மூச்சை இழுத்து அடி

வயிற்றில் சேமித்து அப்படியே ஒன்று தொடக்கம் ஏழு வரை எண்ணி

அடக்கி வைத்திருந்து பின்னர் ஒன்று தொடக்கம் எட்டு வரை எண்ணி

வெளியில் விட வேண்டும்.



வெளிவிடும் போது உங்களது துன்பங்கள் எல்லாம் வெளியில் செல்வதாக

கற்பனை பண்ணி மூச்சை வெளிவிட வேண்டும்.



இவ்வாறு நான்கு அல்லது ஐந்து தடவைகள் செய்யலாம். இப்படி

செய்வதால் உங்களது கவலைகள் துன்பங்கள் சிலதை குறைத்து மனதை

ஒருநிலைப்படுத்தலாம். இதனூடாக உங்களது துன்ப துயரங்களை

குறைக்க முயற்சி செய்யலாம்.



என்று கூறி முடித்த மொழி பெயர்ப்பாளர் அம்மையாரைப் பார்க்க .............



ஏதாவது கேள்வியிருக்கிறதா என்று அவர்களிடம் கேட்கும் படி

முன்பிருந்த சகோதரிகளைக் காட்டினார்.



மொழிபெயர்ப்பாளரும் அவர்களிடம் கேட்டார். ஆனாலும் இருவரும்

குனிந்த தலை நிமிராது மாலதி மேசைவிரிப்பிலிருந்த கலைமானைத்

தடவிக்கொண்டிருந்தாள்.



தேவகி அவற்றையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தாள். மேசை விரிப்பில்

இருந்த மான்குட்டிகள் மீது இரண்டு மூன்று கண்ணீர்த்துளிகள் விழுந்து

கிடந்தன.



மொழிபெயர்ப்பாளர் கேட்டும் பதிலும் சொல்லாமல் நிமிர்ந்தும் பாராமல்

இருந்த சகோதரிகளை பார்த்து பரிதாபப்பட்ட மொழிபெயர்ப்பாளர்

மாலதியின் கையில் தட்டினார்.



" ஐயோ... அம்மா.... " என்று பலத்த சத்தத்துடன் வீறிட்டுத் துள்ளினாள்

மாலதி. அவளைப் பார்த்து தேவகியும் திடுக்கிட்டு " ஆ............." என்று கத்தி

விட்டாள்.



இதனை சற்றும் எதிர்பார்க்காத அம்மையார்,



" சரி நீங்கள் சென்று உங்களது அறையில் ஓய்வெடுங்கள்.. பிறகு மீண்டும்

சந்திப்போம்.... " என்று கூறி அனுப்பி விட்டார்.



வரும் வழியில் மாலதியும் தேவகியும் கதைத்துக் கொண்டு வந்தார்கள்...



" தேவகி.... அந்த மேசை விரிப்பிலிருந்த மான் கூட்டத்தைப் பார்க்க எங்கட

வீட்டு நினைவு தானெடி வந்தது........."



" ஓமக்கா..... எனக்கும் தான்... அந்த கலைமானைப் பார்க்க அம்மாவின்ர

நினைப்புத் தான் வந்தது....?



கண்களில் வழிந்த நீரைத் துடைத்தவாறே சொன்னாள் தேவகி.

Print this post

No comments: