பரந்தவான் பரப்பினிலே ஒளிர்கின்ற வெண்ணிலவே
பறந்தஎன் பெற்றோரை பார்த்திருந்தால் சொல்நிலவே
தங்கையைநான் உமைப்போலே காத்திடுவேன் பார்த்திருப்பேன்
உங்கள்பிள்ளை நானென்றும் உறுதியோடு வாழ்ந்திடுவேன்
பெற்றோரை இழந்தோரை அநாதையென்று சொல்கின்றார்
மற்றோரை இருப்போரை இயலாதவரென்று ஏசுகின்றார்
கற்றோரை படித்திருக்கும் முட்டாளென்று இகழ்கின்றார்
எப்பேரை இவர்களின்னும் விட்டாரென்று தெரியவில்லை.
வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் ஏசுமிந்த உலகினிலே
அலையாடும் வழியினிலே அசைந்தாடும் நாணல்போலே
அவரோடு சேர்ந்திருந்து வாழ்ந்திட வேண்டுமம்மா
எம்மோடு துணையிருந்து நல்லவழி காட்டிடம்மா.
சொல்வோரின் கதைகேட்டு சோர்ந்துபோகும் இதயம்
கல்லாகி விடுகிறது மறுநாளின் உதயம்
சொல்லாலே கொல்கிறார்கள் ஒவ்வொரு செல்களாய்
வேலாலே கொன்றிடலாம் ஒரேயொரு நொடியினிலே.
என்மைநீ தவிக்கவிட்டு ஏனம்மா சென்றுவிட்டாய்
நான்செய்த குழப்படிகள் உனக்கன்று பிடிக்கலையோ
தங்கைக்கு பேனாகொடுக்க மறுத்தது பொறுக்கலையோ
நானிப்போ நல்லபிள்ளை எம்மோடு வந்துவிடம்மா.
காலத்தில் எல்லாமே காலனிட்ட கட்டளைதான்
நாமென்ன செய்துவிட்டோம் உமைக்கொன்ற பாவியர்க்கு
காலமொரு பதில்சொல்லும் கயவர்செய்த கொடுமைகட்கு
துக்கங்கள் ஏதுமின்றி சுதந்திரமாய் உறங்கிடம்மா.
No comments:
Post a Comment