Saturday, April 19, 2008

நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்.


அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் எல்லோரும் வீட்டிலேயே இருந்து கும்மாளமடித்துக்கொண்டிருந்தார்கள். சிவத்தாரின் இரு தோள்களிலும்
சிவசங்கரும், ஜெய்சங்கரும் இருந்து கொண்டு அவரின் காதையும்,
வாயையும் பிடுங்கிக்கொண்டிருந்தார்கள்.

தர்சினி, கீதா, தீபா, தாரணி, மதுரா, ஐவரும் சாரி உடுத்தி, தலையில் மல்லிக்கைப்பூ சூடி, குங்கும பொட்டு வைத்து, ஒன்றாக இருந்து போஸ் குடுத்துக்கொண்டிருந்தார்கள்.

அம்மா..! இஞ்சை ஒருக்கா வந்து பாருங்கோவன்.... என்று மதுரா கூப்பிடவும், அடுப்படியில் சமையலில் இருந்த மரகதம், அடுப்பில் நெருப்பை
குறைத்து விட்டு வந்து, திண்ணையை எட்டிப்பார்த்து, திகைத்துப்போனாள்.

என்னடி இது விளையாட்டு...? உங்களுக்கு வேளையோட கலியாணத்தை கட்டி குடுத்தும் உங்களின்ர அட்டகாசம் குறையேல்ல... என்று சொல்லியபடி அடுப்படிக்கு திரும்பிய மரகதம், இப்படியே எல்லோரும் பாசமாக, ஒற்றுமையாக இருக்க வேணும் என தங்கள் குல தெய்வமான சன்னதி முருகனை மனதினுள் பிரார்த்தித்துக்கொண்டு வேலைகளை கவனிக்கலானாள்.

சிவத்தாரும், மரகதமும் திருமணம் செய்து ஐந்து பெண் பிள்ளைகளுடன் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து வந்து கொண்டிருந்தார். விதானை வேலை பார்த்தாலும், மேலதிக வருமானத்திற்காக சிவத்தார் வீட்டில் சின்ன
தோட்டம் ஒன்றும் வைத்திருந்தார். மரகதமும் பிள்ளைகளும் சிவத்தாருக்கு உறுதுணையாகவே இருந்து வந்தார்கள்.

ஐந்து பெண் பிள்ளைகளை பெற்றவருக்கு ஏக்கங்கள் இருக்க தானே செய்யும். படிப்பு, உடுப்பு, சாப்பாடு, என செலவுகள் அதிகமாச்சே.. அதைவிட யாழ்ப்பாணத்தை பொறுத்தவரை, சீதனம் என்றும் ஒன்று உள்ளதே..!

ஐந்தும் பெண் பிள்ளைகளாக போச்சு, ஒரு ஆண் பிள்ளை இல்லையே என்று மனதளவில் சிறு கவலை இருந்தாலும் ஐந்து பிள்ளைகளின் படிப்புத்திறமை, அழகு, சுட்டித்தனமான விளையாட்டு, ஒவ்வொருத்தர் மீதும் வைத்திருந்த பாசம் என்பன அந்த கவலையை அடியோடு மறக்கடிக்கச் செய்திருந்தது.

தர்சினி .பொ..(சா/) பரீட்சையில் 10 A எடுத்ததும், கீதா, தீபா, தாரணி ஆகியோர் 5ம் ஆண்டு புலமைப் பரீட்சையில் சிறப்புச்சித்தியடைந்ததும், மதுரா ஆண்டு ஒன்றில் இருந்து 3ம் ஆண்டுக்கு டபிள் புரமோசனில் வந்ததும் குடும்பத்தில் மிக்க மகிழ்ச்சி பரவி இருந்தாலும், ஊர் மக்களின் மத்தியில் பெரும் போட்டியும், பொறாமையும் ஏற்பட்டிருந்தது.

இவற்றை எல்லாம் யோசித்த சிவத்தார், மரகதத்துடன் கதைத்து வெளிநாடு செல்லும் முடிவெடுத்து அவுஸ்ரேலியா வந்து சேர்ந்தார். 40 வயதாக இருந்தும் சுறுசுறுப்பாக செயற்பட்ட சிவத்தார், அடுத்த ஒரு வருடத்திலேயே ௨000 டொலர் உழைக்கும் அளவுக்கு தன்னை வளர்த்துக்கொண்டார்.

இந்த ஒரு வருடத்திலேயே சிவத்தாருக்கு அவுஸ்ரேலியா குடியுரிமை கிடைத்தவுடன், மரகதம், பிள்ளைகளையும் தன்னோடு அழைத்துக்கொண்டவர், பிள்ளைகள் ஐவரையும் நல்லா படிக்க வைத்தார். அவர்களும் நல்ல கெட்டிக்காரர் என்பதால், சிறப்புதேர்ச்சி பெற்று முன்னுக்கு வந்தனர்.

இந்த காலப்பகுதியில் சொந்தமாக கொம்பனி பதிவு செய்து வியாபாரத்தில் ஈடுபட்டார் சிவத்தார். உலகிலேயே தனக்கென ஒரு பெயர் ஏற்படுத்தக்கூடியளவுக்கு சிறந்த முறையில் வியாபாரத்தை நடாத்தி, செல்வச்செழிப்புடன் போட்டி, பொறாமை இன்றி சந்தோசமாக வாழ்ந்து வருகின்றனர்.

பொறாமையின்றி பெண்கள் இல்லை என்று, வாய்க்கு வாய் அனைவரும் சொல்லிக்கொண்டாலும், இந்த ஐந்து பிள்ளைகளும் எதுவித சலனங்களுமின்றி, தந்தையின் சொற்படி நடந்து தமது குடும்பத்திற்கு பெருமை சேர்த்தனர்.

இப்போ சிவத்தார், ஐந்து பிள்ளைகளுக்கு அப்பா மட்டும் இல்லை, இரண்டு பிள்ளைகளுக்கு தாத்தா...நான்கு பேருக்கு மாமா... என செல்வ சீமானாக,
உதாரண புருசனாக வாழ்ந்து வருகின்றார்.

முயற்சி, சுறுசுறுப்பு, ஏனையோருக்கு மதிப்பளித்தல், சிறந்த பிள்ளை வளர்ப்பு... என எத்தனையோ விடயங்களுக்கு அவரை முன்னுதாரணமாக கொள்ளலாம்.

இவ்வாறு அனைவரும் இருந்தால் முதலில் வீடும், பின்னர் ஊரும், நாடும் அமைதிப்பூங்காவாக பூத்து குலுங்கும்...

Print this post

No comments: