Saturday, July 13, 2013

ஒரு தாயின் கனவு


" என்ரை பிள்ளை தனியப் போய் இருக்குது.

பிள்ளையை என்ரை காலத்திலேயே ஒருத்தன்ரை கையில பிடிச்சுக் குடுத்து கரையேத்திவிட வேணும் முருகா.. ஜேசப்பா... !"

என்று ஓயாது பிரார்த்தித்துக் கொண்டிருந்தாள் கமலம்.


அவளுக்கு மதி, கவி, பவி என்று மூன்று பெண்பிள்ளைகள் இருந்தார்கள்.

இவர்களில் மதி தான் மூத்தவள். கமலம் புலம்பிக் கொண்டிருந்ததும் இவளைப் பற்றித் தான்.


ஏனென்றால், அவளது இரண்டாவது மகள் கவி திருமணம் செய்து இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். ஆனால் நாட்டினது கொடூர யுத்தம், அவர்களது குடும்பத்தையே மதியிடம் இருந்து பிரித்து தனிமைப் படுத்தியது.


நீண்ட காலமாக குடும்பத்துடன் சேர்ந்திருக்க முடியாததால், தையல் கொம்பனி ஒன்றில் சேர்ந்து வேலை செய்து, தனது வாழ்க்கையை ஓட்டி வந்தாள் மதி.


நாட்டில் சமாதானம் நிலவி, போர் முடிவுக்கு வந்திருந்த போதும், மதி, தனது ஊருக்குச் சென்று, பெற்றோருடன் சேர்ந்திருப்பதற்கு, அந்த நாட்டின் பயங்கரவாதச் சட்டம், பயங்கரச் சட்டங்களாக, அவளை விடாது துரத்திக் கொண்டே இருந்தது.

அதனால் அவள் வேறு நாடு ஒன்றுக்கு குடிபெயர்ந்து அகதியாக அடைக்கலம் கோரியிருந்தாள்.


ஆனாலும், அவள் தஞ்சம் கோரியிருந்த நாட்டின் சட்டங்களும் கொடுமையாகவே காணப்பட்டன. அந்தக் கொடுஞ்சட்டம் அவளையும் விடவில்லை. விழுந்தவனை மாடேறி மிதித்தது போல் அவள் மீதும் பாய்ந்து அழுத்தியது.


எப்போது அவளது விடுதலை என்று தெரியாது தவித்தாள். தத்தளித்தாள். தாய் கமலத்திடமும் சொல்லிப் புலம்பினாள். ஆனாலும் சட்டங்களுக்குத் தான் மனச்சாட்சி, கண் என்று எதுவும் இல்லையே. சாட்சிகள் என்று எதுவும் கிடைத்தால் போதுமே. அவை பொய்யானதாகவோ போலியானதாகவோ இருப்பதைப் பற்றிப் பிரச்சனை எதுவும் இல்லை.


தஞ்சம் கோரிய நாட்டுச் சட்டத்தைப் பொறுத்தவரை சாட்சியும் தேவையில்லை. விசாரணையாளர்கள் என்ன நினைக்கிறார்களோ அது தான் சட்டமாக இருந்தது. ஏனெனில் அதற்கு மேல் சென்று தமக்கிழைக்கப்பட்ட அநியாயத் தீர்ப்புக்கு நியாயம் கேட்டு முறையிடுவதற்கு, சட்டம் இடம் கொடுக்கவில்லை.


ஒரு குற்றத்தைச் செய்தவர் என்பதை உறுதி செய்ய ஆயிரம் சாட்சிகளைத் தேடலாம். ஆனால் குற்றம் செய்யதவர் என்பதை எப்படி உறுதி செய்வது..? அதற்கு சாட்சிகளை எப்படித் தேட முடியும்....?


அப்படித் தேடுவதெனிலும் கொடூர யுத்தத்தின் முடிவு,

அந்த இடத்து மக்களை சிதறடித்து கொன்று குவித்து இடங்களை அடையாளம் கண்டு கொள்ள முடியாதவாறு சுடுகாடாக்கியுள்ளது.

யார் யார் உயிரோடு உள்ளார்கள் ...?

உயிரோடு உள்ளவர்கள் எங்கெங்கே உள்ளார்கள்....?

என்பதைக் கண்டு பிடிப்பதே பெரிய வேலையாக இருக்கின்றது.


அதை விட சாட்சி சொல்வதற்கு தெரிந்தவர்களை ஒழுங்கு செய்தால், விசாரணை யாளர் நம்பவும் மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் ஒருவரை விசாரணை செய்வதற்கு முன்னரே, அவரைக் குற்றவாளி என்ற முடிவை எடுத்து விட்டு விசாரணை செய்து கொண்டிருந்தால், அவர்களது விசாரணைக்கான கேள்விகளும் அவ்வாறு தான் அமையும். நடுநிலையாக இருந்து விசாரித்தால் தான் உண்மையைக் கண்டிறிந்து நீதி வழங்க முடியும்.

மதியும், தஞ்சம் கோரிய நாட்டில், தனக்கு தங்குவதற்கான விசா கிடைத்ததும்,

புற்று நோயால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் தாயாரை,

வசதியான ஒரு வைத்தியசாலையில் சேர்த்து,

தாயாரின் வருத்தத்தைப் குணமாக்கி,

தானே தாயாரைப் பராமரிக்க வேண்டும் என்று பலவாறாகக் கனவு கண்டு கொண்டிருந்தாள்.


ஆனாலும் தடுப்பு முகாமிலேயே எந்தக் குற்றமும் செய்யாத குற்றத்துக்காக, எப்போது விடுதலை என்று தெரியாத ஒரு சுற்றவாளியாக இருந்து கொண்டிருந்தால் எப்படித் தான் தாயாரைப் பார்க்க வேண்டும்... பராமரிக்க வேண்டும் என்ற கனவு நனவாகிப் போகும்...?


இரண்டு வருடங்களாக புற்று நோயால் பாதிக்கப்பட்டு, துன்பப்பட்டுக்கொண்டிருந்த கமலத்தை, வைத்தியர்களும், மருந்தினாலோ அல்லது அறுவைச்சிகிச்சையினாலோ அவளைக் காப்பாற்றி விட முடியாது என கைவிரித்து விட்டார்கள்.


கமலத்திடம்,

" விரும்பியதைச் சாப்பிடுங்கள்...

இனி வைத்தியம் செய்ய முடியாது. ...

செய்தாலும் பலனளிக்காது....."

எனச் சொல்லி வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள்.


தான் காண்பவர்களுக்கு, போனில் கதைப்பவர்களுக்கு என எல்லோருடனும் மதியைப் பற்றித் தான் பேசிக்கொண்டிருந்தாள் அந்தத் தாய்.


அப்படியே புலம்பிக் கொண்டிருந்த கமலம், ஒருநாள் காலையில் எழுந்து, வழமை போன்று தேநீர் தயாரித்து குடிப்பதற்கென, கேற்றிலை அடுப்பில் வைத்து விட்டு உட்கார்ந்த போது மயக்கமாகி விழுந்தவள் தான் அப்படியே இறைபதம் அடைந்து விட்டாள்.


ஆனாலும், அவளது கடைசி நிமிடத்திலும் அந்தத் தாயின் உதடுகள் உச்சரித்துக்கொண்டிருந்த வார்த்தைகள்

" மதிக்கு ஒரு வழிகாட்டு இறைவா........"

என்பது தான்.


அந்தத் தாயின் கனவு, நனவாகும் நாளும் நெருங்கியது. மதிக்கு நீதி கிடைத்தது. அந்தத் தாயின் ஆசியால் மதி, நல்ல ஒரு வரனைக் கைப்பிடித்து நிம்மதியாக வாழத் தொடங்கினாள்.

Print this post

No comments: