Sunday, July 7, 2013

ஐஸ் பிரியாணி




" காலைத்தென்றல் பாடிவரும் கானம் ஒரு கானம்...." என்று கைத்தொலைபேசியின் இரண்டு மூன்று தடவை பாடி ஓய்ந்த பின்னர் கண்ணை விழித்துப் போனைப் பார்த்த அரசு 5 மிஸ்ட் கோல் இருக்கவும் நேரத்தைப் பார்த்தான். மணி 11 ஐத் தாண்டிக் கொண்டிருந்தது.


அன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் சற்று நீண்ட நேரம் தூங்குவதற்காக அலார மணியை நிறுத்தி விட்டிருந்தான்

. மற்றைய நாட்களில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை தங்களது பலசரக்குக் கடையில் வேலை செய்வதற்காக 6 மணிக்கே எழுந்து வேலை செய்ய வேண்டியிருந்தது.

அரசு கடையில் வேலை என்றால் அவனது அம்மா சுதாவுக்கு வீட்டிலும் கடையிலும் என இருபடி வேலை அவளுக்கு


. பிள்ளைக்கு 3 வேலை சாப்பாடு தயாரித்து கடைக்குக் கொண்டுபோய்க் கொடுப்பதிலிருந்த வீட்டில் வேலை முடித்து கடையில் வேலை செய்வதிலிருந்து அவளது தலையிலும் ஆயிரம் வேலைகளை தன் தலையில் இழுத்துப் போட்டுச் செய்து கொண்டிருந்தாள்.

அன்று அரசுக்கு விடுமுறை என்றால் தாய் சுதாவுக்கும் விடுமுறை தான்

அவளும் சற்று நீண்ட நேரம் தூங்கித் தான் விட்டாள்.

அதனால் தாயும் மகனும் தூக்கம் விட்டு எழுந்து குளித்து வர

12 மணிக்கு மேலாகி விட்டது. ஒரு சோறும் கறியும் சமைக்க எப்படியும் 2 மணிநேரமாவது எடுக்கும் அதுவரை அரசு பசி தாங்க மாட்டான் என்று நினைத்த தாய், உடனடிச் சாப்பாடு என்ன உள்ளது என்று பார்த்த போது முதல் நாள் இரவு மீதியிருந்த சோற்றை படுதாகாமல் இருப்பதற்கு தண்ணீர் ஊற்றி வைத்தது நினைவுக்கு வந்தது.

அந்த பழைய சோற்றை எடுத்து

, அதற்கு பச்சை மிளகாய், வெங்காயத்தை தூளாக வெட்டிஅதனுடன் கலந்து சிறிதளவு தேங்காய்ப்பாலும் தேசிப்புளியும் தேவையான அளவு உப்பும் கலந்து கையால் நல்லாப் பிசைந்து ஒரு குவளையில் விட்டு மேசையில் வைக்கவும் அரசு குளித்து விட்டு வரவும் நேரம் சரியாக இருந்தது.

"புரியாணி தான் சமைத்துச் சாப்பிட்டாலும் இந்தப் பழைய கஞ்சியின் சுவையோ தனி தான்....." என்று தாயாரைப் புகழ்ந்து கொண்டு அப்பழைய கஞ்சியைச் சுவைத்துக் குடித்துக் கொண்டிருந்தான் அரசு.

" உண்மையிலேயே இந்தப் பழைய கஞ்சியைக் குடித்தால்,

உடம்புக்கு மிகக்குளிர்மையைக் கொடுக்கும்..............

மலம் இளகி இலகுவாகப் போகும்................

உடம்புச் சூடு நீங்கும்..................

குறைந்த செலவு...................

தயாரிப்பதற்கு சொற்ப நேரமே எடுக்கும்................

என்று சொன்ன சுதா,

" இதெல்லாம் இப்போ உள்ள பெடி பெட்டையளுக்கு எப்படி விளங்கப் போகுது.... மக்டொனால்ட்.... கே.எவ்.சி என்று பாஸ்ற் வூட்டை சாப்பிட்டு தங்கடை உடம்பை எல்லோ பூதம் மாதிரி வளர்த்து வைத்திருக்குதுகள்...." என்று அலுத்துக்கொண்டாள்.

அந்நேரத்தில் மீண்டும் ஒருமுறை

" காலைத்தென்றல் பாடி வரும்...." என்று கைத்தொலைபேசியில் பாட்டு வரவே பதிலுக்கான பட்டனை அழுத்தி "ஹலோ..." என்று சொன்னான் அரசு.

" என்னடா.... கோல் எடுத்தா ஆன்சர் பண்ண மாட்டியா...? காலையில் இருந்து எத்தனை தடவை உனக்கு கோல் எடுத்தனான்... ஆனால் நீ பதிலே பண்ணலையே....?" என்று எடுத்த எடுப்பிலேயே தம்பியாருடன் அலுத்துக் கொண்டாள் வசீகரி.

" அக்கா.... இண்டைக்கு ஞாயிற்றுக் கிழமை என்று தெரியும் தானே.... இண்டைக்குத் தான் கொஞ்சம் கூட நேரம் தூங்கலாம்..... அது தான் .... இப்ப போலை செக் பண்ணும் போது உங்களது மிஸ்ட் கோல் பார்த்தேன். சாப்பிட்டு விட்டு திரும்ப கோல் பண்ணுவம் என்று இருக்க நீங்கள் போன் பண்ணி விட்டீங்கள். ..."

என்றான் அரசு

" அப்போ தாயும் பிள்ளையும் சேர்ந்து நல்லா தூங்கியிருக்கிறியள்.... நான் இஞ்சை வேளையோட எழும்பி உங்களுக்கு கோல் எடுத்துக் கொண்டிருக்கிறன்.... சரி.... அப்போ என்ன சாப்பாடு மத்தியாணத்துக்கு......" என்று கேட்டாள் வசீகரி.

வசீகரி அவுஸ்ரேலியாவில் படித்துக்கொண்டு பாட் ரைம் வேலை செய்து கொண்டிருக்கிறாள்

. அவளுக்கு பழைய கஞ்சி விருப்பமற்ற சாப்பாட்டில் ஒன்று என்பதை விட பழைய கஞ்சி தான் சாப்பாடு என்று சொன்னால் இன்னொரு தடவை தமக்கையாரிடம் பேச்சு வாங்க வேண்டும என்பதை விட, அறிவுரை வேறு இருக்குமே என்று நினைத்த அரசு, பழையகஞ்சிக்கு புதிதாக ஒரு பெயரை நவீன முறையில் தான் விரும்பியவாறு,

" ஐஸ் புரியாணி அக்கா....." என்று கொடுப்புக்குள் சிரித்துக்கொண்டு சொன்னான்.

" அதென்னடா... ஐஸ்புரியாணி......" என்று வசீகரி கேட்க ,

" அதெல்லாம் உங்களுக்குத் தெரியாது .... நிங்கள் வீட்டுக்கு வரும் போது அம்மா செய்து தருவா.... சாப்பிட்டுப் பாருங்க.... அதுக்குப் பிறகு அம்மாவிடம் ஒவ்வொரு நாளும் அதைச் செய்து தருமாறு கேட்பீங்கள்...." என்று அரசு சொல்லவும் அவனுக்குப் பின்னால் இருந்த சந்தோஷ், தனது பிஞ்சுக்குரலால்

"பழைய கஞ்சி அக்கா....." என்று கத்திச் சொன்னான்.

இதனைக் கேட்ட வசீகரி

தன்னைச் சமாளிப்பதற்காக கெட்டித்தனமாக ஒரு பெயரைச் சொல்லி விட்டானே என்று சிரிக்க, அவளைத் தொடர்ந்து அரசு சிரிக்க, சுதா, சந்தோசும் சேர்ந்து குடும்பமே சிரித்துக் கொண்டிருந்தார்கள் கொக்கட்டம் போட்டு......!!!!

Print this post

No comments: