Sunday, August 4, 2013

நீ ஆபரணமா...? அல்லது பொக்கிஷமா....?


வழமை போலவே அன்றும் தன் மனைவி பரிமளத்துக்கு கோல் எடுத்தார் அம்பலத்தார். அப்போது மற்றைய போனில் பரிமளம் கதைத்துக் கொண்டிருந்ததால் போனில் காத்திருந்தார் அம்பலத்தார். சொந்த மொழிக் காரன் ஒருவருடன் வீடு ஒன்று வாடகைக்கு எடுப்பது தொடர்பாக ஆங்கிலத்தில் கதைத்துக் கொண்டிருந்தாள்.

பரிமளத்துக்கு நம்பிக்கையுடன் ஆங்கிலம் கதைக்கத் தெரிந்திருந்தாலும், கேட்டுக் கொண்டிருந்தவனுக்கு விளங்குமோ என்னவோ.....? ஆனாலும் பரிமளம், தான் என்ன நினைத்தாளோ, அதைச் சொல்லிக் கொண்டிருந்தாள்.

பரிமளம், போனில் கஷ்ரப்பட்டு விளங்கப்படுத்திக் கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டிருந்த அம்பலத்தார், அவள் தனது உரையாடலை முடித்து விட்டு கணவர் அம்பலத்தாருடன் கதைத்த போது,

"வீடு வாடகைக்கு எடுத்தல் தொடர்பாக கதைக்கும் போது எமது மொழிக் காரருடன் எமது மொழியிலேயே கதைப்பது நல்லது. ஆங்கிலத்தில் கதைத்தால், அவர்கள் உங்களை வெளிநாட்டவர் என நினைத்து வாடகையைக் கூட்டிச் சொல்வார்கள்......"

என்று சொன்னார்.

"முதலில் எங்கள் மொழியில் தான் கதைத்தேன். ஆனால் அவர் தான் ஆங்கிலத்தில் கதைத்தார். பின்னர் நான் தொடர்ந்து கதைத்தேன்"
என்றாள் பரிமளம்

" சரி..... சரி..... ஏதோ அவனுக்கு விளங்கப்படுத்த முயற்சிப்பது போலிருந்தது அது தான் சொன்னேன்....... அதை விட ஆசிய நாடுகளில், வெளிநாட்டுக்க காரர் என்றால், வாடகையைக் கூடச் சொல்லி வாங்குவதைக் கேள்விப் பட்டிருக்கிறேன்..... அது தான் ....."
என்றார் அம்பலத்தார்.

" சரி கதையை விடுங்கோ.... அதெல்லாம் கதைச்சாச்சு..... நீங்கள் தேவையில்லாமல் இதுக்குள்ளை தலையை விடாதையுங்கோ..... இது உங்களுக்குத் தேவையில்லாத விஷயம்......."
என்று கோபமாகச் சொன்னாள் பரிமளம்.

இது பரிமளத்தில் வேலையுடன் தொடர்புடையது என்றாலும் கூட, அம்பலத்தார் அவளுக்கு ஆலோசனை சொல்லத் தலைப்பட்டது, பரிமளம் அவரது மனைவி என்பதாலேயே..... ஆனாலும் அம்பலத்தாருடன், ஒரு வேற்று மனிதன் போல் கதைத்தது, அவருக்கு ஆழ்ந்த கவலையையே ஏற்படுத்தியது.

பரிமளம் மீண்டும் தனது வேலையுடன் தொடர்புடைய கதைகளையே கதைத்துக் கொண்டிருந்தாள். ஏனென்றால் அவளுக்கு வேலைத்தளத்தில் நடக்கும் பிரச்சனைகளை சோகங்களை சந்தோசங்களை சொல்லி ஆறுவதற்கு இருந்தவர் அம்பலத்தார் ஒருவரே.

அவள் சொல்வதைக் கேட்பதா..? அல்லது வேண்டாமா...? என்று சிந்தித்த அம்பலத்தாருக்கு, வேண்டாம் என்றே தோன்றிது. ஏனெனில் வேலை தொடர்பான விடயங்களை கேட்டுக் கொண்டிருந்தால், சில சமயங்களில் அதற்கு ஆலோசனை சொல்ல வேண்டிவரும். பின்னர் மனக்கசப்புக்கள் தான் வரும், இதே போல் முன்னரும் பலதடவைகள் நடந்திருக்கின்றன, என்பதால் கதையைத் திசை திருப்புவதற்காக,

"அம்மாவுடன் கதைத்தீர்களா....? "
என்று கேட்டார் அம்பலத்தார்.

" நான் என்னவோ சொல்லுறன்.... நீங்கள் என்னவோ கேட்கிறீர்கள்..... "
என்று அம்பலத்தார் மீது பாய்ந்தாள் பரிமளம்.

"அம்மாவுடன் கதைத்தீங்களா.....?"
என்று மீண்டும் கேட்டார் அம்பலத்தார்.

" நான் போனை வைக்கிறேன்...."
என்று கோபத்துடன் தொடர்பைத் துண்டித்து விட்டாள் பரிமளம்.

அது தான் தமிழில் அழகான பழமொழி ஒன்று உண்டு

" அழகான பெண் கண்களுக்கு விருந்து
குணமான பெண் மனதுக்கு விருந்து
முன்னது ஆபரணம்... பின்னது பொக்கிஷம்..."

அதனால் பெண்களே நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்,
நீங்கள் ஆபரணமா...? அல்லது பொக்கிஷமா.....?

ஆபரணம் என்பது சில காலத்துக்குத் தான் அழகாக இருக்கும். அதன் அழகு குறைந்ததும், அடுத்ததுக்கு மாறிவிடுவார்கள். பொக்கிஷம் என்பது காலாதி காலமாக பாதுகாத்துப் பேணி, அடுத்த தலைமுறைக்கும் கை மாற்றி விடுவார்கள்.

கவியரசர் கண்ணதாசனும் குணம் தொடர்பாக எழுதிச் சென்றிருக்கிறார்,

" பணம் என்னடா பணம் பணம்
குணம் தானடா நிரந்தரம்....."

இக்கதைக்குப் பொருத்தமான இன்னும் சில பழமொழிகள்

" முழுக்க முழுக்க எட்டிக்காயாக இருக்காதீர்கள்
இந்த உலகம் உங்களை உமிழ்ந்து விடும்...."

"மனைவி என்பவள் கணவனுக்கு, குடும்பத்துக்கு ஒரு உந்து சக்தியாக இருக்க வேண்டுமே தவிர, குந்தக சக்தியாக இருக்கக் கூடாது"

"ஆயிரம் பேர் சேர்ந்து ஒரு தொழிற்சாலையைக் கட்டிவிடலாம்.
ஆனால் ஒரு அழகான சிறந்த வீட்டைக் கட்ட,
ஒரு குணமான பெண் தேவை. "

" நல்ல மனைவியை விட உயர்ந்த வரமும் இல்லை
கெட்ட மனைவியை விட மோசமான சாபமும் இல்லை..."

"மனிதனுக்கு,
ஆசையால் விருப்பமும்
விருப்பத்தால் கோபமும்
கோபத்தால் மயக்கமும்
மயக்கத்தால் புத்தி நாசமும்
புத்தி நாசத்தால் அழிவும்
ஏற்படுகிறது...."

Print this post

No comments: