Tuesday, September 3, 2013

இருந்தும் இல்லாதவர்கள்


எனக்கு அம்மா இல்ல... …..........
அப்பா இல்ல.....................
அண்ணா இல்ல.................
யாருமே இல்ல...............
நான் ஏன் உயிரோட இருக்கணும்..............
நான் சாகப் போறன்.......................”
என்று சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லி புலம்பிக் கொண்டிருந்தாள் பொற்கொடி.

பொற்கொடிக்கு 21 வயது தான் ஆகிறது. செந்தளிப்பான, அழகான வட்ட முகம். நேர்த்தியாக வாரியிழுத்துப் பின்னப்பட்ட தலைமுடி, முத்துப் போன்ற பல்வரிகள் என அனைத்து அழகையும், அவளுக்குக் கொடுத்த இறைவன், அவளது வயது, உயரத்திற்கு ஏற்றவாறு இல்லாமல் சற்று உருவத்தில் பெரிய உடலை அவளுக்கு கொடுத்திருந்தான்.

பொற்கொடி வீட்டில் ஒரே பொண்ணு. கடைசிப்பிள்ளையும் கூட. முத்த இருவரும் அண்ணன்கள். அவர்கள் இருவரும் தத்தமது வேலைகளைச் செய்து கொண்டு, தமக்கும் அந்தக் குடும்பத்துக்கும் எந்தவிதமான தொடர்புமில்லை என்றவாறு ஏனோ தானோ என்று இருந்தார்கள்.

இவளுக்கு 14 வயது இருக்கும் போது, தாயாருக்கும் தந்தையாருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. சிறிய பிரச்சனை பெரிய பிரச்சனையாகி நீதிமன்றம் வரை சென்றது. பிறகென்ன? விவாகரத்துக்கு விண்ணப்பித்தார்கள். நீதிமன்றம் இவர்கள் மீண்டும் இணக்கப்பாட்டுக்கு வருவதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளனவா என்பதைப் பரிசீலிப்பதற்காக, ஒரு வருட கால அவகாசம் வழங்கி தீர்ப்பைத் தள்ளிப் போட்டது.

இந்த ஒருவருடத்தில் அவர்களது வீடே இரண்டாகப் பிரிந்து விட்டது. சமையல், படுக்கைய‌‌றை இரண்டானது... வீட்டு வாசல் இரண்டானது என அனைத்துமே இரண்டானது. யாரும் யாரையும் பார்த்துக் கொள்வதில்லை. பார்க்கும் சந்தர்ப்பங்களிலும் முகத்தினைத் திருப்பிக் கொண்டார்கள்.

பிள்ளைகள் மூவரும் அம்மாவுடன் கதைத்தால் அப்பாவுக்குக் கோபம். அப்பாவுடன் கதைத்தால் அம்மாவுக்குக் கோபம். அவர்களுக்கு அடி, உதை என்பது மட்டுமல்லாமல் பட்டினியும் போட்டார்கள். அம்மாவும் அப்பாவும் வேலைக்குப் போனபின் வீட்டுக்கு வருவதைக் குறைத்தார்கள். சில சமயங்களில் பியர் குடித்து விட்டு வந்து சண்டை போட்டார்கள். ஊ‌த்தைப் பேச்சுப் பேசி ஊரையே கூட்டினார்கள்.

ஒருவர் மீது ஒருவருக்கு இருந்த கோபத்தினால், பிள்ளைக‌ளை பற்றிக் கவலைப்படுவதற்கு அவர்களுக்கு நேரம் இருக்கவில்லை. ஒழுங்கான சாப்பாடு, சரியான வழிகாட்டல் ஏதுமின்றி அன்புக்காக ஏங்கித் தவித்தார்கள் அம்மூன்று குஞ்சுகளும். இப்படி அனைத்துக்கும் ஏங்கித் தவித்தவர்களுக்கு ஒரு கம்பனி முதலாளி வேலை ஒன்றைக் கொடுக்கவே, ஆண்கள் இருவரும் அங்கேயே நிரந்தரமாகி வீட்டுக்கு வருவதையே ‌நிறுத்தி விட்டார்கள்.

இப்போ பொற்கொடி வீட்டில் தனிமையிலே இருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டாள். இவ்வாறு அன்பைத்தேடிக்‌ கொண்டிருந்தவளுக்குக் கிடைத்தவன் தான் செல்வா.

பொற்கொடி எப்போதும் பள்ளியில் சோகமாகவே காணப்படுவாள். இதனைப் பார்த்த செல்வா அவளுடன் நெருங்கிப் பழகினான். ஆலோசனை சொன்னான். அன்பை ஏங்கித் தவித்தவளுக்கு செல்வாவின் ஆறுதல் ஆலோசனைகள் எல்லாம் தேவ அமிர்தமாகவே இருந்தது.

செல்வாவை அளவுக்கதிகமாகவே நேசிக்கத் தொடங்கிவிட்டாள் பொற்கொடி. ஒருநாள் அவனைக் காணாவிட்டாலும், துடித்துப் போய்விடுவாள். வீட்டில் தனிமையில் இருக்கும் சந்தர்ப்பங்களில் அவனை வீட்டுக்கழைத்துப் பேசிக்கொண்டே இருப்பாள். செல்வாவுடன் பேசும் போது
” நீ தான் எனது எதிர்காலம் ”
என்று அடிக்கடி சொல்லுவாள்.
செல்வா அதற்கு பதிலேதும் சொல்லாது ஒரு புன்சிரிப்பை மட்டுமே உதிர்ப்பதோடு நிறுத்திவிடுவான்.

அவனது சிரிப்பை, சம்மதமாக எண்ணிய பொற்கொடி, அவன் மீது அளவு கடந்த பாசம் வைத்து அவனிடம் , தம்முயிரிலும் மேலாகக் காத்து, அதற்கு ஒரு பங்கம் வரும் போது தம்முயிரையே மாய்த்துக்கொள்ளும் அளவுக்கு பொத்திப் பொத்தி பொக்கிஷமாக, ஒரே ஒருவனுக்காக என பெண்களால் கட்டிக்காக்கப்படும் அனைத்தையுமே கொடுத்து விட்டாள்.

செல்வாவும் தனக்குக் கிடைக்க வேண்டியவை கி‌டைத்ததும் அவளிடமிருந்து விலகத் தொடங்கினான். செல்வாவின் விலகலால் பொற்கொடி மனதாலும் உடலாலும் ஒடிந்து சோகத்தில் வாடிக்கொண்டிருந்தாள்.

இக்காலப்பகுதியில் பெற்றோருக்கு நீதிமன்றத்திற்கு வருமாறு ஆணைக்கடிதம் வந்திருந்தது. நீதிபதி அவர்களை விசாரித்தார்க்ள. அவர்கள் தமது முடிவில் உறுதியாக இருக்கவே, அவர்களது விருப்பப்படி விவாகரத்து வழங்கப்பட்டது. இருவரும் நரக லோகத்திலிருந்து விடுபட்டது போன்ற உணர்வுடன் நீதிபதிக்கு நன்றி சொல்லி தமது முகத்தைத் ‌திருப்பிக் கொண்டு மிடுக்குடன் நடந்து சென்றனர்.

அன்றிரவு பொற்கொடியின் தாயார், பெரும் போதையுடன் புதிய நபர் ஒருவருடன் வீட்டுக்கு வந்து பொற்கொடியை அழைத்து,
” இவர் தான் உனக்கு இனிமேல் அப்பா...”
என்று பொற்கொடிக்கு தனது புதிய நண்பரை( புதிய கணவர் ) அறிமுகம் செய்து வைத்தாள்.

அன்றிரவு பொற்கொடியால் நிம்மதியாக நித்திரை கொள்ள முடியவில்லை. விம்மி விம்மி அழுது கொண்டு படுக்கையறையில் அடைந்து கிடந்தாள். புருசன் பொண்டாட்டிக்குள் உள்ள ஏற்றத்தாழ்வுப் பிரச்சனைகள் குடும்பத்தைப் பிரிந்து பிள்ளைகளை நடுவீதிக்குக் கொண்டு வந்து தனிமைப்படுத்தி விட்டதே.. இன்னும் எவ்வளவு பிரச்சனைகள் வர‌ப்போகுதோ என்று எண்ணி அழுதவாறே அயர்ந்து துாங்கி விட்டாள் பொற்கொடி.

மறுநாள் காலை எழுந்து குளித்து விட்டு வெளியில் வந்த போது தாயாரும் அந்தப் புதிய தந்தையாரும் ஹோலில் இருந்து தேனீர் அருந்திக் கொண்டிருந்தார்கள்.

பொற்கொடியைக் கண்டதும் தாயார் எழுந்து வந்து அவளைக் கட்டிப்பிடித்து
” என் பொண்ணு............
என் கண்ணு...........”
என்று உச்சிமுகர்ந்து முத்தம்கொடுத்து

” இனி உனக்கு எந்தப் பிரச்சனையுமில்லை. உனக்கு அந்த அப்பா வேணாம்...
இந்த அப்பா தான் இனி உனக்கு அப்பா...”

என்று சொல்லி தனக்குப் பக்கத்தில் இருத்தி தேனீர் கொடுத்தாள்.

பின்னர்
” நான் முன்னரே உங்களுக்குச் சொன்னேன் தானே..
எனக்கு ஒரு பொண்ணு இருக்கிறா என்று............
அவா தான் இவா... பொற்கொடி....”
என்று புதிய த‌ந்தையாருக்கும் அறிமுகப்படுத்தினாள் தாய்.

அவரும் ”ஹாய் பொற்கொடி...” என்று சொல்ல
அவளும் பதிலுக்கு ” ஹாய் “ என்று சொன்னாள்.

பின்னர்

” நீ ஒன்றும் யோசிக்காதை.
நான், உனக்கு நல்வழி காட்டி படிப்பித்து நல்ல நிலைக்குக் கொண்டுவர வேண்டியது என் பொறுப்பு என்று பல உறுதி மொழிகளை வழங்கினார்.

அன்புக்காக ஏங்கியவளுக்கு அவர் சொன்ன ஆறுதல் வார்த்தைகள், நீண்டநாள் புண்ணுக்குப் போடப்பட்ட அருமருந்தாகவே இருந்ததால் பொற்கொடியின் மனம் அவர்கள் பக்கம் சாய்ந்து கொண்டது. அதனால் ” தாங்ஸ்” என்று சொல்லிவிட்டு தன் அறைக்குள்ளே சென்று விட்டாள் பொற்கொடி.

பெற்றோர் நன்றாகவே அவளைக் கவனித்துக் கொண்டார்கள். பிக்னிக் போனார்கள். சினிமா, பீச் , பார்க்.... என்று விடு‌முறை நாட்களில் பொற்கொடியையும அழைத்துச் சென்று அவளை மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கச் செய்தார்கள்.

குடும்பத்தில் தந்தையின் பிரிவு, அண்ணன்களின் பிரிவு, போலி அன்பு காட்டி அவளிடம் இருந்து எடுக்க வேண்டியதை எடுத்து விட்டு ஏமாற்றி விட்ட காதலனின் பிரிவு என அனைத்துப் பிரிவுக் காயங்களுக்கும், அதனால் ஏற்பட்ட இதய வலிகளுக்கும் புதிய தந்தையின் கவனிப்புக்கள் மருந்தாகவே அமைந்திருந்தது.

இவ்வாறே காலங்கள் உருண்டோடி ஒரு வருடத்தைத் தாண்டியிருந்தது.

அதன் பின்னர் புதிய தந்தையார், பொற்கொடியை ஓரம் கட்டத் தொடங்கினார். பொற்கொடி என்ன கேட்டாலும் வாங்கிக் கொடுத்த புதிய தந்தை, தனது படிப்புத் தேவைகளுக்காக ஒரு மேசைக்கணணி வாங்கித்தருமாறு கேட்ட போது

” அதற்கெல்லாம் என்னிடம் காசில்ல.............
நீயும் இப்போ வளர்ந்து விட்டாய் தானே..............
நீயே எங்கையாவது வேலைக்குப் போய் உழைக்க வேண்டியது தானே.............?
எப்போதும் என்னிடமே காசு கேட்கிறாய்..............?
நான் என்ன உன்னைப் பெத்த தகப்பனா...?
உன்னைப் பெத்தவனிடம் கேட்க வேண்டியது தானே.................? ”

என்று பொருத்தமேயில்லாது பேசிக்கொண்டிருந்தார்.

மனதினுள் புதிய தந்தையாரைப்பற்றிப் பெருமையாகக் கட்டிய கோட்டை ஒரு நொடியிலேயே சுக்கு நுாறாக உடைந்து ‌போனது.. பித்துப் பிடித்தவள் போல் நொந்து போய் உட்கார்ந்து விட்டாள்.

புதிய கணவன் பேசிக் கொண்டிருந்ததைக் கிச்சினிலிருந்து ஏதேச்சையாகக் கேட்ட தாய் ஓடி வந்து

” ஏன் இப்படியெல்லாம் பிள்ளையைத் திட்டுறியள்...? ”

என்று அவரைப் பேசிவிட்டு பொற்கொடியைக் கட்டிணைத்து முத்தம் கொடுத்தாள்.

அப்போது
” நீ இந்தப் பூதத்தைக் கட்டிக்கொண்டிருப்பதெனில் அவளோடயே இரு ….......
நான் இன்னொருத்தியைப் பாத்துட்டு, அவளோடயே போறன்............”

என்று சொல்லிவிட்டு அறையினுள் செல்லவும் தாயாரும் அவன் பின்னே அறையினுள் சென்றாள்.

பின்னர் அவர்களிருவருக்குமிடையில் ஏதேதோ பெரும் சத்தத்தில் வாய்த்தர்க்கம் நடந்தது. பின்னர் எந்த விதமான சத்தமும் வெளியில் கேட்கவில்லை. அவர்களிருவரும் அறையினுள்ளேயே இருந்தார்கள். . வெளியில் வரவேயில்லை.

அப்போது மெல்லிய நாதமாய் ஒரு பாடலொன்று வெளியிலிருந்து பொற்கொடியின் காதுகளுக்குள் இசைத்துக் கொண்டு சென்றது..
” அம்மா யாரு அப்பா யாரு எனக்குத் தெரியல
கண்ணீரைத் தான் கண்டேன் அம்மா அன்பைப் பார்க்கல....”

இந்தப் பாடல்கள் அவளுக்குள் ஒரு வேகத்தையும் கோபத்தையும் கொடுக்கவே கிச்சினுள் சென்று குளிர்சாதனப்பெட்டியைத் திறந்தவளுக்கு கண்முன்னே தெரிந்தது பியர் போத்தல்கள் தான். அவற்றை எடுத்து மளக் மளக் என்று தண்ணீர் குடிப்பது போல் குடித்து விட்டாள்.

அதன் பின்னர் தான் அவள் புலம்பிக் கொண்டிருந்தாள்...

“ எனக்கு யாருமே இல்ல...
நான் சாகப்போகிறேன் ...”
என்று.

அதற்கு ஏற்றவாறே ஒரு பாடல் ஒன்றும் இசைத்துக் கொண்டிருந்தது

"ஆண்டவன் முகத்தைப் பாக்கணும் - நான்
அவனிடம் ஒண்ணே ஒண்ணு கேக்கணும்.
ஏன்டா சாமி என்னைப் படைச்சே _ என்னைப்
படைக்கையிலே என்ன நினைச்சே....."

Print this post

No comments: