Monday, October 21, 2013

முதற் பயம்

" தம்பி இந்த தேத்தண்ணியைக் வயலுக்குக் கொண்டு போய் அம்மாக்களிட்ட குடுத்திட்டு வாறியோ.... அச்சாப்பிள்ளை...." என்று அப்போது தான் பாடசாலையில் இருந்து வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டு இருந்த நேரத்தில் சுடுதண்ணீர் போத்தலினுள் தேனீரை ஊற்றி மூடிக் கொண்டே என்னிடம் கேட்டாள் என் அக்கா.

நானும் வயலுக்குப் போய் அந்த பச்சைப் பசேல் என்ற நெல்வயலைப் பார்க்கும்ஆர்வத்தில் " ஓமோம் தாங்கோ கொண்டு போய் குடுக்கிறன்.." என்று வாங்கிக் கொண்டேன்.

அப்போது அக்கா " இண்டைக்கு களி வயலுக்குத் தான் புல்லுப் பிடுங்கப் போறதெண்டு அம்மா சொன்னவா. அங்கை போய்ப் பார். அங்கை இல்லையென்றால் பெரியக்காவின்ரை வயலுக்குப் போய்ப் பார்" என்று சொன்னாள்.

" ஓமோம் " என்று சொல்லிக் கொண்டு சைக்கிளை எடுத்துக் கொண்டு வயலை நோக்கிப் பறந்தேன்.

எமது ஊர் ஓர் அழகான ஊர். எங்களது வீட்டிலிருந்த 200 மீற்றருக்கு முன்னாடி ஒரு கிலோ மிற்றர் வரை சுமார் ஆயிரம் ஏக்கர் வரையான நிலத்தில் நெற்பயிர்ச செய்கை செய்வார்கள்.

இது மழை காலத்தில் மட்டும் அதாவது ஒரு போகம் மட்டுமே நெற்பயிற் செய்கையில் விவசாயிகள் ஈடுபடுவார்கள். அந்தக் காலத்தில் வயல்வெளியில் வீசும் குளிர்காற்றை அனுபவிப்பதற்காகவும் அக்காற்றினில் அலை போன்று அசைந்தாடும் நெற்கதிரின் பச்சைப் பசேல் என்ற கண்ணுக்கு குளிற்சியான அவ் வண்ணத்தை ரசிப்பதற்காகவும் நான் அங்கு செல்ல ஆசைப்படுவேன்.

ஆனாலும் எனக்கு அப்போ சிறிய வயது என்பதால் மழை காலத்தில் வெளியில் சென்றால் வருத்தங்கள் வந்து விடும் என்று தாய்மை உள்ளத்தோடு கண்டிப்பாக வயல்வெளிக்குச் செல்ல அம்மா அனுமதிப்பதில்லை.

சில சமயங்களில் அம்மாவுக்குத் தெரியாத வகையில் ஓடிப் போய் வயல்க் காட்சிகளை ரசித்து விட்டு வந்து அம்மாவிடம் அடி வாங்கிக் கொண்டதும் உண்டு.

எமது வீட்டினருகில் வயல் வெளியிருந்தும் அக்காட்சிகளைப் பார்த்து ரசிக்க முடியவில்லையே என்று பலமுறை ஏங்கியதும் உண்டு.

இப்படியான ஏங்கங்கள் இருந்த காலத்தில் தான் அக்காவும் அம்மாவுக்க தேனீர் கொண்டு சென்று கொடுக்குமாறு கூற சந்தோசத்தில் பறந்து வயல் வெளிக்கு வந்தேன்.

அக்கா சொன்ன களி வயலில் அம்மாக்கள் இல்லாதது எனக்கு மிக்க சந்தோசத்தைக் கொடுத்தது. ஏனென்றால் களிவயல் இருப்பது வீதியோரத்தில். ஆகையால் நான் தேனீரை அம்மாவிடம் கொடுத்தவுடன் வாங்கிக் கொண்டு வீட்டுக்குப் போய் விடுமாறு கூறி விடுவார். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்ற ஏமாற்றத்துடன் திரும்பியிருக்க வேண்டியிருக்கும். அதனால் தான் சந்தோசத்துடன் வயல்களின் நடுவே இருந்த பெரியக்காவின் வயலை நாடிச் சென்றேன்.

அங்கே அம்மா, சித்தி, பெரியக்கா, பெரியண்ணா, ஐயா எல்லோரும் புல்லுப் பிடுங்கிக் கொண்டிருந்தார்கள். "அம்மா, குட்டியக்கா தேத்தண்ணி தந்துவிட்டவா..." என்றேன்.

அம்மா என்னை நிமிர்ந்து பார்த்து விட்டு " சரி அதை அந்த வரம்பில வைச்சிட்டு வீட்டுக்குப் போ.." என்று ஒரே சொல்லில் சொல்லி விட்டார்.

எனக்கோ ஏமாற்றமாகவும் கவலையாகவும் இருந்தது. ஆனாலும் நான் ஐயாவின் செல்லம். அதனால் நான் ஐயாவிடம் கதை கொடுத்தேன். " ஐயா.... உங்களுக்கு தேத்தண்ணி கொண்டு வந்து தரட்டா...?" என்றேன்.

ஆனால் அம்மா "நீ ஒண்டும் செய்யத் தேவையில்லை... வீட்டுக்குப் போய்ப் படிக்கிற வேலையைப் பார்...." என்றார். ஆனால் ஐயா அம்மாவை தடுத்து விட்டு "பிள்ளை இவ்வளவு தூரம் கொண்டு வந்தது...., தேத்தண்ணியை சில்வரில் ஊத்திக் குடுத்து விட்டுப் போகட்டுமன்..." என்று சொல்லி விட்டு " இஞ்சை எடுத்துக் கொண்டுவா......" என்று அம்மாவின் பதிலையும் எதிர்பாராமல் எனக்கு நேரடியாகச் சொன்னார்.

இது எனக்கு, தாயைக் கண்ட கன்றுக் குட்டி துள்ளியோடுவதைப் போன்ற உற்சாகத்துடன் இரண்டையும் எடுத்துக் கொண்டு வயலினுள் இறங்கினேன்.

அப்போது ஐயா " கவனமாகப் பாத்து வா.... நெல்லுக்கதிரை மிரிச்சுப்போடாதை..... தண்ணி காச்சட்டையை நனைச்சுப் போடும்... அதால காலை மடிச்சு விடு..." என்று விடயங்களை சொன்னார்.

ஐயா சொன்ன வாறே காச்சட்டையை மடித்து விட்டு இறங்கியும் நனைந்து விட்டது. சில்லென்ற குளிர் உடலிர் பட, நெற்கதிர்கள் உடலை உரச தேனீரையும் குவளையையும் தண்ணீரில் படாதவாறு உயர்த்திப் பிடித்துக் கொண்டு ஐயாவுக்கப் பக்கத்தில் சென்று அனைவருக்கும் குவளையில் தேனீரை ஊற்றிக் கொடுத்தேன்.

அவர்கள் குடித்து முடித்து குவளைகளை வாங்கும் வரை அங்கேயே நிற்க வேண்டியிருந்தது.

அப்போது ஐயாவிடம், " ஐயா .. இவற்றில் புல்லு எது நெல்லு எது என்று டிப்படி கண்டு பிடிப்பது..." என்று கேட்டேன்.

அவரும் தேனீர் குடித்தவாறே சில கதிர் ஓலைகளைக்காட்டி " இந்த ஓலையைத் தடவிப் பார். இது மசுக்குட்டியின் மயிர்கள் இருப்பது போன்ற உணர்வு தெரியும். இது தான் நெல்லு. ஆனால் இதன ஓலையைத் தடவிப்பார். இதில் அப்படி இருக்காது. இது தான் புல்லு.... என்று கோழிச்சூடன் ... நெற்சப்பி .... " என்று புற்கள் சிலவற்றை காட்டிச் சொன்னார்.

நானும் அவர்கள் தேனீர் குடிக்கும் வரையான நேரத்தில் பத்துப் புல்லாவது புடுங்கி விட வேண்டும் என்ற ஆர்வத்துடன் தேடிக் கொண்டிருந்தேன்.

அப்போது ஒரு புல்லைக் கண்டுபிடித்து ஐயாவுக்குக் காட்டினேன். அவரும் பார்த்து விட்டு "பிறகென்ன கெட்டிக்காரன்... நெல்லுப் புடுங்குப்படாமல் புல்லை மட்டும் கவனமாகப் புடுங்க வேணும் ..." என்று சொல்லி என்னையே புடுங்க அனுமதி தந்தவர் " இஞ்சரப்பா.... பிள்ளையும் ஒரு புல்லைக் கண்டு பிடிச்சிட்டான்... " என்று அம்மாவைக் கூப்பிட்டுச் சொன்னார் ஐயா.

" கெட்டிக்காரன்.... " என்று ஒற்றைச் சொல்லில் பாராட்டிவிட்டு சித்தியுடன் ஏதோ ஆர்வமாகச் கதைத்துக் கொண்டிருந்தார்.

நானும் அப்புல்லைப் பிடுங்கி விட்டு வேறு புல்லைத் தேடிக்கொண்டிருந்த சமயத்தில் தான், பேரிரைச்சலுடன் இரு விமானங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து எம் வயல் வெளிகளின் மேலாகவே வட்டமிட்டது. நாம் அனைவரும் பயந்து ஓடி வயல் வரம்புகளில் படுத்துக் கொண்டோம்.

அப்போது அடுத்தடுத்த வயல்களில் வேலை செய்து கொண்டிருந்தவர்களும் அவர்களுக்குப்பக்கத்தில் இருந்த வரம்புகளில் படுத்துக் கொண்டார்கள்.

அப்போது அவர்கள்

" கடவுளே முருகா .... எங்களைக் காப்பாத்து....!!!"
"அம்மாளாச்சி ... என்ரை பிள்ளையளக் காப்பாத்து..."
" ஈஸ்வரா......."
" ஜேசுவே...."
" ஐயோ.... கடவுளே....."
என்று தங்கள் தங்களது விருப்பக் கடவுளைப் பிரார்த்தித்துக் கத்திக் கொண்டிருந்தார்கள்.

முதலாவது வட்டமடித்து இரண்டாவது வட்டமடித்த அந்த இரு விமானங்களும் பேரிரைச்சலுடன் பதிவாக வந்து ஒவ்வொன்றும் ஒவ்வொரு குண்டை வீசி விட்டுச் சென்று விட்டன.

அவ்விமானங்கள் சென்றதும் அனைவரும் செய்த வேலைகளை விட்டுவிட்டு தமது பிள்ளைகள் எப்படி இருக்கிறார்கள் என்ற ஏக்கத்தில் வீட்டை நோக்கி ஓடிச் சென்றார்கள்.

நாங்களும் வீட்டை நோக்கி ஓடினோம். செல்லும் வழியில் அந்த விமானங்கள் வீசிய குண்டுகள் விழுந்த இடங்களைப் பார்த்தோம்.

அவை எமது வயலில் இருந்து அண்ணளவாக 300 மீற்றர் தூரத்தில் வயல் வெளியிலேயே நான் வந்த பாதையிலேயே வீழ்ந்து வெடித்திருந்தன.

அந்த ஒவ்வொரு குண்டும் 10 மீற்றர் விட்டம் கொண்ட இடத்தில் 10 அடி வரை ஆழமான கிடங்கைக் ஒரு சில வினாடிகளில் கிண்டி அனைத்துப் பயிர்களையும் அழித்திருந்தன. தெய்வாதீனமாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

இவற்றையெல்லாம் பார்த்துச் சென்ற எனக்கு இரவு ஒரே காய்ச்சல். நான் படுக்கையில் நடுங்கிக் கொண்டு அம்மாவுக்குப் பக்கத்தில் படுத்திருந்தேன்.

அப்போது என் நெற்றியில் தைலம் பூசிக்கொண்டே ' நான் அப்பவும் சொன்னனான்... வயலுக்குள்ள இறங்க வேண்டாம் என்று...... இப்ப பார் குளிரேறி காய்ச்சல் எண்டு படுத்திருக்கிறாய்...." என்று அம்மா என்னைத் திட்டினார்.

" அவன் நீ சொன்ன மாதிரி வந்திருந்தால் வந்த பாதையிலயே அந்த விமானக் குண்டினில் மாட்டி சில வேளை பிள்ளையே இல்லாமல் போயிருப்பான்.... நாளைக்குப் பிள்ளையின்ர சாதகத்தை ஒருக்கா ஐயரிட்ட காட்ட வேணும்... கிரகநிலை எப்படியெண்டு தெரியேல்லை..." என்று ஐயா அம்மாவுக்குச் சொன்னார்.

ஆனால் எங்கள் வீட்டுக்கு வந்திருந்த பெரியாச்சி என்னைத் தொட்டுப் பார்த்துவிட்டு " பிள்ளைக்குப் பயத்தில தான் காய்ச்சல் வந்திருக்கு ... நீங்கள் சொல்வது போல குளிருமில்ல... கிரகமுமில்லை.... ஒண்டுமில்லை.... நீங்கள் சும்மா வீணாக மனதைப் போட்டுக் குழப்பிக்காதீங்க.... நான் இப்ப தான் அன்னம்மா வீட்ட போட்டு வாறன். அவளின்ர மோனுக்கும் காய்ச்சல் ... அவன் என்ன வயலுக்கே போனவன்....?" என்று சொல்லி அம்மாவினதும் ஐயாவினதும் கதையை நிறுத்தினார்.

அன்று இரவு 8 மணிச் செய்தியில் " இன்று பிற்பகல் 4 மணியளவில் பயங்கரவாதிகளின் இராணுவநிலைகளின் மீது விமானத் தாக்குதல் ஒன்று நடாத்தப்பட்டது. இதில் ஏழு பயங்கரவாதிகள் அவ்விடத்திலேயே கொல்லப்பட்டனர். 60 றிகும் மேற்பட்டோர் படுகாயமடைந்து அவசர சிகிச்சைப் பகுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் வெற்றிகரமான தாக்குதலைச் செய்த விமானிகளுக்கு முப்படைகளின் தளபதியும் பாதுகாப்பு அமைச்சருமான ஜனாதிபதி அவர்கள் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். இந்த வெற்றிகரமான தாக்குதல் விமானப் படையினரால் அண்மையில் ரஷ்யாவிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட கிபீர் ரக விமானங்களினாலேயே நடாத்தப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது" என்று தேசிய வானொலியில் செய்தி தொடர்ந்தது.

Print this post

No comments: