Wednesday, May 28, 2008

என் தங்கை சாவித்திரி


தாரணி மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தான் மயூரன்.
அவளது அறிவும், அழகும், நல்ல குணமும், துடுக்குத்தனமான
செல்லக் கதைகளுமே, அவளை அவன் காதலிப்பதற்கான உந்து
சக்தியாக அமைந்திருந்தன.

தன் கணவன், தன் பிள்ளை, தன்குடும்பம் என்ற பெண்களுக்கே
உரித்தான சுயநலமான எண்ணங்கள் தாரணிக்கும் அமைந்திருந்ததில்
வியப்பேதுமில்லை...

மயூரன் பெரிய கொம்பனி ஒன்றில் மனேஜராக பணியாற்றி வந்தான்.
ஆண், பெண் என்ற வேறுபாடின்றி பலருடன் பழக வேண்டிய
சந்தர்ப்பம் அவனுக்கு. ஏனெனில் அவனது வேலை அப்படி
இருந்தது.

இந்த வகையில் சுவிஸ், சூரிச்சில் உள்ள சொக்லட் கொம்பனியின்
விற்பனை முகாமையாளராக பணியாற்றி வந்த சாவித்திரி என்பவருடன்
வேலை ரீதியாக தொடர்பேற்பட்டது.

அவளது அறிவு, துடுக்குத்தனமான பேச்சுக்கள், சிறந்த முடிவெடுக்கும்
திறன், தொடர்பு பேணுதல் என்று அவளிடம் அனைத்தும் நிரம்பவே
இருந்தன. இந்தத்தொடர்பு நட்பாக, அண்ணன் தங்கையாக வளர்ந்தது.


சாவித்திரியின் சிறு வயதிலேயே சோகங்கள், துன்பங்கள், என்பன
பலவாறாக பாய்ந்து காயப்படுத்தியிருந்தன. தன் துன்பங்களை
சொல்லி ஆறுதலடைய ஏங்கிய சாவித்திரிக்கு, தட்டுப்பட்ட பாசமலர்
தான் மயூரன்.

தினமும் வேலைக்குச் செல்வதற்க்கு முன்னர் மெயில் பண்ணி சுகம்
விசாரிப்பது, நேரம் கிடைக்கும் போது கதைப்பது என அவர்களது
நட்பு வளர்ந்து வந்தது.

வேலை விட்டு வீட்டுக்குச் சென்றதும் சாவித்திரியைப் பற்றி
தாரணியிடம் சொல்லி கவலைப்படுவதே அவனது வேலையாக
இருந்தது.

சாவித்திரியின் சோகங்கள், திறமைகள் அனைத்தையும் தாரணிக்கு
சொல்லி கவலைப்படுவான் மயூரன். அவளுக்கு அது பிடிக்கவில்லை
என்றாலும், வெளியில் காட்டிக்கொள்ளாது, "ம்" என்று சொல்லிக்
கொண்டிருந்தாள் தாரணி.

ஒரு நாள் வேலை விட்டு வரும் போது மின்குமிழ் (பல்ப்) ஒன்று
வாங்கி வருமாறு கூறியிருந்தாள் தாரணி. ஆனாலும் வேலைப்பளுவில்
மறந்து வாங்காமல் வந்து விட்டான் மயூரன்.

மின்குமிழ் வாங்காமல் வந்த்து கண்டு " நினைப்பு வீட்டின் மேல
இருந்தா தானே மறக்காம வாங்கி வருவதற்க்கு..." என குத்தல் கதை
போட்டாள்.

அந்த வசனம், மயூரனுக்கு சுருக்கென்று உறைத்தாலும், அதை
வெளியில் காட்டாது, " என் காரில் மதனும் வந்ததால் கதைத்துக்கொண்டு
வந்து மறந்து விட்டேன்.... இப்ப பொறுடா... ரெஸ்கோவில வாங்கிட்டு
வாறன்..." என்று கிளம்பி வாங்கி வந்து பொருத்தினான்.

இரவு வளமையான வேலைகளின் பின் குளித்து சாப்பிட்டு, படுக்கைக்கு
சென்று படுத்துக்கொண்டார்கள் தாரணியும், மயூரனும்.

படுப்பதற்க்கு முன்னர் 20 நிமிடம் வரை ஏதாவது கதை வாசிப்பதை
வழக்கமாகக் கொண்டிருந்தான் மயூரன். ஆனாலும் அன்று அவன்
படிக்காது படுத்து விடவே, தனது வார்த்தைகள் மயூரனை
நோகடித்து விட்டன என்பதை புரிந்து கொண்டாள்.

விளக்கை அணைத்து விட்டு, மயூரனை கட்டிக்கொண்ட தாரணி
" என்னங்க.... படிக்காம படுத்திட்டீங்க.... என் மேல கோபமா..."
என கதையை ஆரம்பித்தாள்.

மயூரன் நிதானமாக பதிலளித்தான்.
"நீ எனது மனைவி......,
நான் உன்னில் கோபப்படுவதில் என்ன லாபம் இருக்கிறது.......?
சரி, காரணம் தான் என்ன இருக்கிறது...........?
நான் உன்னுடன் கோபப்பட்டு சண்டை பிடித்து விட்டு நாளை
எப்படி உன் மீது பாசமாக இருப்பது........, உனது முகத்தை
பார்ப்பது சொல்லு............!
இன்று நாம கோபப்பட்டு, சண்டை பிடித்து, அதே வேகத்தில்
ஆத்திரத்தில் வாயில் வந்த படி திட்டி விட்டு, அடுத்த நாள் நெருங்கி
அன்பு வார்த்தை பேசலாமா...? அல்லது அப்படி பேசினால்,
நேற்று, அப்படி திட்டிவிட்டு, இப்போ ஜாலம் கொட்டுறார் என்று நீ
வெறுக்க மாட்டியா..........?
எனது அந்தரங்க விடயங்கள், குடும்ப விடயங்களை உனக்கு
தானே சொல்ல முடியும்..........!
என்னுடைய சந்தோசம், உனது சந்தோசம் எல்லாம், உனது
கையில் தானே இருக்கிறது.......!
உனக்கே தெரியும்...... எனது வேலையில் பெண்கள் உட்பட
நிறைய பேருடன் பழகுகின்றேன், கதைக்கின்றேன்,............
பழகும் பெண்கள் எல்லோரையும் உனது ஸ்தானத்தில் வைத்து
பார்க்க முடியுமா சொல்லு........?
எனக்காக மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கும் உன்னை விடுத்து
வேறொருவரை நினைத்துப்பார்க்க முடியுமா... சொல்லு........?
நான் தான் உனக்கு பலமுறை சொல்லியிருக்கிறேன்,,,,
எந்த விடயங்களும், எங்கள் இருவருக்குள்ளும் ஒளிவு, மறைவு இன்றி
இருக்க வேண்டும் என்று.........!
அப்புறம், நீ மனதினுள் ஏதோ ஒன்றை வைத்துக்கொண்டு கதைத்தது,
எனக்கு புரியவில்லை.
எந்தப்பிரச்சனையையும் நேராக பேசு..... மனதில் சுமையாக
வைத்திருக்காதே.... பிறகு அது ரென்சனை கூட்டி, உன் மனதை
குழப்பி விடும்.....
உனக்கு ஒன்றை மட்டும் சொல்லி வைக்க விரும்புகிறன்.
நீ இல்லை என்றால் இந்த மயூரன் இல்லை...........
எந்தப் பிரச்சனை வந்தாலும் என்னருகிலேயே இருடா....
நீ இல்லாத வாழ்வை என்னால நினைத்துக்கூட பார்க்க முடியல....."

என்று சொன்ன மயூரனுக்கு நா தழுதழுத்து கண்களில் கண்ணீர்
துளிர்த்தது.

" என்னை மன்னிச்சிருங்க.... நீங்க இல்லாத வாழ்வை என்னாலும்
தான் நினைக்க முடியல.... நானும் ஒரு சாதாரண சராசரிப் பொண்ணு
மாதிரி நடந்துக்கிட்டேன்.... என்னை மன்னிச்சிருங்க..."
என விம்மினாள் தாரணி, மயூரனை இறுக அணைத்தபடி.

" சீச்சீ... என்னடா இது...? நீ அழுதா நானும் அழுதுடுவேன்.
ஆம்பிளை அழுதா அசிங்கமாயிடும்... அழாதேடா...."
என்று அவளது கண்ணை துடைத்து இறுக அணைத்தான்.
மயூரனின் அணைப்பில் அவளும் கட்டுண்டு கிடந்தாள். இருவர்
மனமும் எங்கெங்கோ கொடிகட்டிப் பறந்தன....

அன்று இரவு இருவரும் நித்திரையே கொள்ளவில்லை. விடிய விடிய
பேசிக்கொண்டேயிருந்தார்கள், சாவித்திரியைப்பற்றி........!!!!

Print this post

No comments: