சிறந்த எழுத்தாளனாகவும் ஒரு விடயத்தை விளங்கி
கிரகித்து அதனை அப்படியே ஒப்புவிப்பதில் சிறந்தவனாகவும் விளங்கினான் ராகவன்.
ராகவன் ஒரு சர்வதேச அளவில் பிரபல்யமான கொம்பனி ஒன்றில் அதிகாரியாக பணி புரிந்தான்.
அவன், அந்த அதிகாரி நிலையை அடைவதற்கு சாதகமாக இருந்தவை என்று பார்த்தால், அவனது எழுத்து திறமை, கிரகித்தல் தன்மை
என்பதைக் காட்டிலும், மேலதிகாரிக்கு துதி பாடுதல் என்பதே பொருத்தமாக இருந்திருக்கும் எனலாம்.
ஏனென்றால் அலுவலகத்தில் நடக்கும் ஒவ்வொரு சின்ன
விடயங்களும் அன்று பிற்பகல் மேலதிகாரிக்கு
தெரிந்திருக்கும்.
தேவையற்ற, சிறு சிறு விடயங்களையும், ஒன்றை பத்தாக
சொல்லி பெரிது படுத்தி, சக அதிகாரிகளுக்கு ஆப்பு வைப்பதில் மன்னனாகவும் இருந்தான்.
இதனால் ராகவனுக்கு " ஆப்பு மன்னன் " என்ற பட்டப்பெயரும்
இருந்தது அவனுக்கே தெரியாத விடயம்.
அவன், இருக்கும் இடத்தில் எல்லோரையும் நக்கலடித்து
மட்டம் தட்டி ரசிப்பதே அவனது பொழுது போக்காக,
ஏன் வேலையாக இருந்தது என்று கூட சொல்லலாம்.
இளநிலை அதிகாரிகளின் திறமையும், துணிவும் அவனுக்குபயத்தை ஏற்படுத்தியிருந்தது. அவர்களின் திறமைகளைமேலதிகாரி கண்டு கொண்டால் தனது பதவிக்கு ஆபத்து
வந்து விடுமே என்று உள்ளூரவே பயந்தான் ராகவன்.
தன் கீழுள்ள இளநிலை அதிகாரிகளால் செய்யப்படும்
வேலைகளை தானே செய்ததாக கூறி மேலதிகாரியிடம்நல்லபேர் வாங்குவது மட்டுமல்லாது, இளநிலை அதிகாரிகள்
மீது நல்ல அபிப்பிராயம் மேலதிகாரிக்கு ஏற்பட்டு விடாதபடி கதைகளையும் சொல்லி வந்தான்.
அதே போல் வேலைகளில் ஏதாவது பிழை நடந்து விட்டால் அதனை அவர்கள் மீது போல் எறிந்து தான் தப்பி விட்டு அவர்களுக்கு பேச்சு வாங்கி குடுப்பதும் ராகவனுக்கு கை வந்த கலையாக இருந்தது.
அதிகாரிகள் அலுவலகத்தில் இல்லாத சமயங்களில்
அவர்களது பைல்களை எடுத்து என்ன செய்கிறார்கள் என்று பார்த்து
பிழை பிடித்து பின்னர் அதற்கான கீழறுப்பு வேலைகளில்
ஈடுபடுவது என எல்லா வகையான கெட்ட எண்ணங்களையும்
தன்னகத்தே கொண்டிருந்தான்.
ேலதிகாரியும் ராகவன் மீது அளவு கடந்த நம்பிக்கையை
வைத்திருந்ததுடன், அவன் சொன்னால் சரியாகத்தான்
இருக்கும் என்ற சித்தாந்தத்தையும் வைத்திருந்தார்.
மேலதிகாரியின் இந்த நம்பிக்கையும், தன் சொல்லுக்கு இருந்த
மதிப்பையும் நன்கு அறிந்து கொண்ட ராகவன், தனது
காரியங்களை மிக இலகுவாக நிறைவேற்றி வந்தான்.
தனக்கு பிடிக்காதவர்கள் மீது குறைகள் பிடித்து அதனை
மேலதிகாரிக்கு எழுத்து மூலம் தெரியப்படுத்தி
அவர்களை கீழறுப்பு வேலைகள் செய்து திருப்திப்
பட்டுக்கொண்டான்.
மேலதிகாரியிடம் ராகவனின் சொல்லுக்கு இருந்த மதிப்பு
காரணமாக சக அதிகாரிகள், இளநிலை அதிகாரிகள் எல்லோரும்
ராகவனுக்கு முன்னால் சிரித்து பேசினார்கள்.
அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரும் தமக்கு கிடைக்கும்
மதிய இடைவேளை, தேனீர் இடைவேளையின் போது ஒன்றாக
அமர்ந்து பலதும் பத்தும் பேசி சிரித்து கும்மாளமடிப்பார்கள்.
ராகவன் வருகிறான் என்று யாராவது கண்டு " வண்டு "
வருகுது என சொன்னால், ராகவன் வருகிறான் என்பதனை விளங்கிக்கொண்டு அடுத்த கணமே அவ்விடம் நிசப்தம் ஆகி விடுவதுடன், இடைவேளை முடிவதற்க்கு முன்னரே தத்தமது வேலைகளுக்கு கிளம்பி விடுவார்கள், "இவனின் தொல்லை தாங்க முடியவில்லை" என்ற திட்டுக்களுடன்.
"வண்டு" என்பது குறிப்பிட்ட இலக்குகளை படம் எடுத்து
உடனுக்குடன் தலைமையகத்துக்கு அனுப்பி வைக்கக்கூடிய
இராணுவத்தினரால் பயன் படுத்தப்படும் வேவு விமானத்திற்கு
தமிழர்களால் சூட்டப்பட்ட புனைபெயர் ஆகும்.
இவற்றை எல்லாம் அவதானித்த ராகவன், தான் வரும்போது
மேலதிகாரிக்கு குடுக்கும் மரியாதை போல தனக்கும்
குடுக்கின்றார்கள் என்று எண்ணி தனக்குள்ளே சிரித்து
பெருமைப்பட்டுகொண்டான்.
இந்த மரியாதைக்கெல்லாம் காரணம், தனது குறை
கண்டுபிடிப்பு வேலைகள் தான் என்று விளங்கிக்கொண்ட
ராகவன், அதனை தொடர்ந்து தக்க வைப்பதற்காக, அனைத்து
விடயங்களயும் ஒன்றும் விடாது மேலதிகாரியிடம் ஒப்புவித்து
வந்தான்.
இவ்வேளையில் ராகவனைப் பற்றிய சில தகவல்களும் மேலதிகாரிக்கு
சென்றிருந்தது. நம்ப முடியாததால் உறுதிப்படுத்தி சொல்லுமாறு
தகவல் கொடூத்தவருக்க்கு பணித்திருந்தார்.
ராகவனை தனது அலுவலகத்துக்கு அழைத்த மேலதிகாரி,
அவனது பிழைகளை கூறி, உன்னை திருத்த முயற்சி செய்.
இப்படி எல்லாம் செய்யாதே என அறிவுரை சொன்னார்.
ஆனாலும் அப்பிழைகளை எல்லாம் மறுத்த ராகவன், அதனை
உறுதிப்படுத்தி காட்ட முடியுமா என சவால் விட்டது,
அதிகாரிக்கு பிடிக்கவே இல்லை. நாளை வா.... காட்டுகிறேன்
எனச்சொல்லிவிட்டு சென்று விட்டார்.
அடுத்த நாள் ராகவனின் பிழைகள் அனைத்தையும் ஆதாரங்களுடன்
எடுத்து காட்டி, நான் உன் மீது வைத்திருந்த நம்பிக்கையை நீயே கெடுத்துக்கொண்டாய். எனி எமது தலைமை அலுவலகத்தில் பணி புரியமுடியாது. வேற் இடத்திற்கு மாற்றி விடுகிறேன்.
விரும்பினால் வேலை செய் என அனுப்பி விட்டார்.
சில நாட்களின் பின்னர் புதிய இடத்திற்கு சென்ற ராகவன் இரண்டு/மூன்று மாதங்கள் சோர்வாகவே இருந்தான்.
ஆனாலும் அவனுடன் சேர்ந்திருந்த சக ஊழியர்கள் அவனது கவலைக்களை பகிர்ந்து கொண்டதோடு ஆறுதலும் கூறினர்.
புதிய இட மாற்றத்தில் வெறுப்படைந்த ராகவன், தனது சுயநல
தேவைகளுக்கு பயன்படக்கூ்டிய சிலரை தவிர ஏனைய
நண்பர்களின் தொடர்பையும் துண்டித்துக்கொண்டான்.
தொடர்்பை துண்டித்தான் என்பதை விட, துண்டித்துக் கொண்டார்கள்
என்பது தான் பொருத்தமாக இருக்கும். ஏனெனில் அதிகாரத்தில்
இருக்கும் போது அனைவரையும் அப்படித்தான ஆட்டுவித்தான்
சில காலம் சோர்வடைந்திருந்த ராகவன் மீளவும் அதே '' வண்டு "
வேலையை ஆரம்பித்து, சக அதிகாரிகள் செய்யும் வேலைகளை
தான் செய்ததாக காட்டி மேலதிகாரிக்கு கடிதம் மேல் கடிதம்
அனுப்பிக் கொண்டிருந்தான்.
ஆனாலும் ராகவன் தன்னை நம்ப வைத்து ஏமாற்றியதால்
வெறுப்படைந்த அதிகாரி அவரை கருத்திலேயே எடுப்பதில்லை.
இருப்பினும் தனது புதிய அதிகாரிகளினூடாக கண்துடைப்புக்காக
" கடிதம் கிடைத்தது .... பார்வையிட்டேன் ......" என்ற பதிலை அனுப்பிக்
கொண்டிருந்தார்.
ராகவனின் கடிதத்தை, அதிகாரிகளின் சந்திப்புக்களின் போது, வாசித்துக் காட்டி இப்படி ராகவன் என்ற முன்னாள் அதிகாரி எழுதியுள்ளார்.
இவ்வாறு நீங்களும் எழுதி, உங்கள் மீதான நம்பிக்கை
தன்மைகளை கெ்டுத்துக்கொள்ளாமல் இருப்பதோடு,
இது போன்ற சிறுமைத்தனமான வேலைகளிலும ஈடுபட
வேண்டாம் என்ற பணிப்பையும் விடுத்தார்.
அத்துடன் ஒருவரின் தகவலை வைத்து, முடிவு, நடவடிக்கைகளை
எடுப்பதை விடுத்து, கிடைக்கும் விடயங்களை ஆராய்ந்து,
உறுதிப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதிலும்
உறுதி எடுத்துக் கொண்டார்.....
1 comment:
இந்தக் கதை ஓர் உன்மைக் கதை போலே உள்ளது... இப்போ உலகெங்கும் பொறாமையால் மூடப்பட்டுள்ளது. யாரை வீழ்த்தி தான் அந்த இடத்தை பிடிக்கலாம் என்று திரிகிறார்கள். உண்மையில் அவருக்கு நல்ல பாடம் கொடுத்திருக்கிறார் கடவுள்...
Post a Comment