" என்ரை பிள்ளை தனியப் போய் இருக்குது.
பிள்ளையை என்ரை காலத்திலேயே ஒருத்தன்ரை கையில பிடிச்சுக் குடுத்து கரையேத்திவிட வேணும் முருகா.. ஜேசப்பா... !"
என்று ஓயாது பிரார்த்தித்துக் கொண்டிருந்தாள் கமலம்.
அவளுக்கு மதி, கவி, பவி என்று மூன்று பெண்பிள்ளைகள் இருந்தார்கள்.
இவர்களில் மதி தான் மூத்தவள். கமலம் புலம்பிக் கொண்டிருந்ததும் இவளைப் பற்றித் தான்.
ஏனென்றால், அவளது இரண்டாவது மகள் கவி திருமணம் செய்து இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். ஆனால் நாட்டினது கொடூர யுத்தம், அவர்களது குடும்பத்தையே மதியிடம் இருந்து பிரித்து தனிமைப் படுத்தியது.
நீண்ட காலமாக குடும்பத்துடன் சேர்ந்திருக்க முடியாததால், தையல் கொம்பனி ஒன்றில் சேர்ந்து வேலை செய்து, தனது வாழ்க்கையை ஓட்டி வந்தாள் மதி.
நாட்டில் சமாதானம் நிலவி, போர் முடிவுக்கு வந்திருந்த போதும், மதி, தனது ஊருக்குச் சென்று, பெற்றோருடன் சேர்ந்திருப்பதற்கு, அந்த நாட்டின் பயங்கரவாதச் சட்டம், பயங்கரச் சட்டங்களாக, அவளை விடாது துரத்திக் கொண்டே இருந்தது.
அதனால் அவள் வேறு நாடு ஒன்றுக்கு குடிபெயர்ந்து அகதியாக அடைக்கலம் கோரியிருந்தாள்.
ஆனாலும், அவள் தஞ்சம் கோரியிருந்த நாட்டின் சட்டங்களும் கொடுமையாகவே காணப்பட்டன. அந்தக் கொடுஞ்சட்டம் அவளையும் விடவில்லை. விழுந்தவனை மாடேறி மிதித்தது போல் அவள் மீதும் பாய்ந்து அழுத்தியது.
எப்போது அவளது விடுதலை என்று தெரியாது தவித்தாள். தத்தளித்தாள். தாய் கமலத்திடமும் சொல்லிப் புலம்பினாள். ஆனாலும் சட்டங்களுக்குத் தான் மனச்சாட்சி, கண் என்று எதுவும் இல்லையே. சாட்சிகள் என்று எதுவும் கிடைத்தால் போதுமே. அவை பொய்யானதாகவோ போலியானதாகவோ இருப்பதைப் பற்றிப் பிரச்சனை எதுவும் இல்லை.
தஞ்சம் கோரிய நாட்டுச் சட்டத்தைப் பொறுத்தவரை சாட்சியும் தேவையில்லை. விசாரணையாளர்கள் என்ன நினைக்கிறார்களோ அது தான் சட்டமாக இருந்தது. ஏனெனில் அதற்கு மேல் சென்று தமக்கிழைக்கப்பட்ட அநியாயத் தீர்ப்புக்கு நியாயம் கேட்டு முறையிடுவதற்கு, சட்டம் இடம் கொடுக்கவில்லை.