கண்களால் கதை சொல்லும் கயல்விழி அழகியே,
கனவோடு நீ சொல்லும் பெருங்கதைதான் என்ன...? - என்
செவிகளுக்கு எட்டவில்லை, கடல் கடந்திருக்கும் எனக்கு..!
தலையணையைக் கட்டியணைத்து, கதை பேசும் கிளியே,
என்ன தான் பேசுவாய், எப்போதும் அதனுடனே....?
முயற்சி செய்தும் முடியவில்லை, நானுமதைக் கேட்பதற்கு…!
உன்னங்க அழகுகளை, கண்ணாடியில் பார்க்கையிலே
என்னதான் சொல்கின்றாய், ஆறுதலாய் அவைகளுக்கு?
முழுதுமாய் யோசிக்கிறேன், முடியவில்லை அறிவதற்கு...!
காதல் படம் பார்க்கையிலே, முகம் சிவந்து போகின்றாய்.
எவற்றையெல்லாம் நினைத்து நீ, வெட்கப்பட்டுக் கொள்கின்றாய்...?
ஒவ்வொரு அனுபவத்தையும், ஒன்றும் விடாது அலசுகிறேன்..
துப்பொன்றும் கிடைக்கவில்லை, அந்த காரணத்தை தெரிவதற்கு...
திருவாய் மலர்ந்து பேசுகையில் “அவருக்கு அவருக்கென்று” சொல்கின்றாய்,
என்னதான் அவருக்கென்றுன் மனதில் பூட்டி வைத்துள்ளாய் ?
படிப்படியாக நானும், பலவற்றை படித்துப் பார்த்தேன்
படியவில்லை என் மனதில், பக்குவமாய் எதுவென்று...!
உங்களுக்கு ஒன்றுமே, புரியாதென்று நீ சொன்ன போது,
பூதமாய் எழுந்து நின்றது என் மூளையில் பெருங்கேள்வி...!
எனக்கொன்றும் விளங்காதா என்று விறுமாப்பாய் கேட்டது..
“ஓமடா மொக்கா....” என்று திட்டியது என்னை என் மனமே.
வழுவிடாது எந்தனுக்கு, வகுப்பொன்றையும் எடுத்தது.
கற்பனையில், உன்னையவள், சொரூபித்துப் பார்க்கிறாள்.
ஒவ்வொரு நிமிடமும், அவள் உன்னுடனேயே வாழ்கிறாள்.
எதையெல்லாம் பார்த்தாலும், தன் நினைவுகளை மீட்கிறாள்.
மொத்தத்தில் அவள் உன்னுள், ஒன்றியே வாழ்கிறாள்.
அனைத்தையும் உந்தனது, மூளையிடம் கேட்டுப் பார்த்தால்,
அதற்கதன் விளக்கமில்லையேல், அதன் பதில் தெரியாது முழிக்கும் - ஆனால்
அவற்றுக்கெல்லாம் விடையை என்னிடம் நீ கேட்டுப்பார்
உளமார உனக்குப் பெரும் விளக்கமொன்றே தந்திடுவேன்
என்று சொல்லி ஏக்கத்துடன், பெரு மூச்சொன்றை விட்டது.
புரிந்து கொண்டேன் ஒவ்வொன்றின், புதுப்புது அர்த்தங்கள்..
இப்போது தெரிந்து கொண்டேன் அவளாசை எண்ணங்கள்..
அதன் பெயர் தான் அன்பு என்று ஆழமாகக் கண்டுகொண்டேன்..
அவள் அழகுமனதை தெளிவாக தெரிந்து கொண்டேன்.