Sunday, June 1, 2014

பிஞ்சு நெஞ்சுக் காதல் - 2.



மறுநாள் எழுந்து குளித்து வெளிக்கிட்டு தாரணியை எப்படிச் சமாளிப்பது என்று யோசித்தவாறு 9 மணியளவில் பள்ளிக்கூடத்திற்கு வந்து சேர்ந்தான்.


அதற்கு முன்னரே தாரணி அங்கு வந்து காத்திருந்தாள்.

கார்த்திக்கைக் கண்டதும் எழுந்திருந்தாள்.


அவன் தனது பழைய வகுப்பினுள் வந்து, முன்னர் இருந்த இடத்தில் இருந்த போது, அவனருகில் வந்த தாரணி, அவனது கை மேல் தன் கை வைத்து கண் கலங்கினாள். அவள் கண் கலங்கியதும், கார்த்திக்கும் கண் கலங்கி விட்டது.


கண்களைத் துடைத்தவாறே தாரணி துவக்கினாள்,


" கார்த்தி,

எமது பழைய அன்பையும், நினைவுகளையும் நினைத்து,

அதிலிருந்து ஒரு முடிவுக்கு வருவதற்காகத் தான்,

உங்களை பள்ளிக்கூடத்துக்கு வரச்சொன்னேன்.

நான் விட்டுக்கு வந்த போது,

குடும்பச்சுமை, பொறுப்பு என்று பெரிய கதை எல்லாம் கதைச்சீங்கள்.

ஆனாலும், நீங்கள் என்னைக் கடைக்கண்ணால் அடிக்கடி பாத்ததை கவனிச்சன். அதிலிருந்து,

உங்களுக்கும் என்மேல இருந்த காதல் குறையேல்லஎண்டு தெரிஞ்சு கொண்டேன்.

அதை விட, அங்க உங்கட அப்பாவுக்கு முன்னால கதைக்கச் சங்கடப் பட்டதையும் பார்த்தன்.

அது தான் இஞ்சை வரச்சொன்னேன்.....

இந்த இடம் உங்களுக்கு என்னத்தை ஞாபகப்படுத்துகிறது...

சொல்லுங்கோ பாப்பம்.......?

எனக்கு நினைவுக்கு வருவதெல்லாம்,

நீங்க இந்தஇடத்தில, என்னைக் கட்டிப்பிடிச்சு முத்தம் குடுத்ததும்

அதற்குப் பதிலாக நான் உங்களுக்குக் குடுத்ததும் தான் ஞாபகம் வருகுது...."


என்று வாய் ஓயாது தனது நினைவுகளை சொல்லிக்கொண்டே போனாள்.


கார்த்திக் எதுவும் பேசவில்லை, கேட்டுக்கொண்டே இருந்தான். அதனால் தாரணியே தொடர்ந்து பேசினாள்.


" நான் வரும் போது உங்களுக்குக் காட்ட வேணுமெண்டு என்ரை றிப்போட் எடுத்துக் கொண்டு வந்தனான்.

இதைப் பாருங்கோ...

நான் இப்ப கணிதத்தில் 99 மாகஸ் எடுத்திருக்கிறேன்.

அதுக்கு நீங்கள் தானே காரணம்.

அந்த மாமரத்துக்குக் கீழ் இருந்து,

நீங்க எனக்குச் சொன்ன ஆறுதல் வார்த்தைகளும் அதன் பின்னர் நீங்கள் என்மீது எடுத்துக்கொண்ட அக்கறையும் தானே காரணம்.

எனது ஏக்கங்களையும், வலிகளையும் சுமந்து தள்ளாடிய போது,

அவற்றைக் குறைக்கும் சுமைதாங்கியாக, நீங்கள் இருந்தது தான், என்னை இந்த நிலைக்கு உயர்த்தி விட்டிருக்கிறது.

அதன் பின்னர் கிடைத்த பெருமையும், புகழ்ச்சியும் என்னை மேலும் உயர வைத்தது. அதை விட,

அதன் பின்னர், எனது குடும்பத்திடம் இருந்து கிடைத்த பரிவு தான் பிரதான காரணமாக இருந்தது.

இதற்கெல்லாம் அடிப்படையாக இருந்தது நீங்கள் தானே. ....."


என்று பெருமூச்சு விட்டாள் தாரணி.


இப்போ கார்த்திக் கதைக்கத் தொடங்கினான்.


" தாரணி .... !

இவற்றையெல்லாம் நீ சொல்லும் போது எனக்கு ஆறுதலாகவும் சந்தோசமாகவும் தான் இருக்கிறது.

அதை விட, நீ மூன்று வருடம் தலைநகரில் இருந்து படித்தாலும்,

என்னை ஒரு பொருட்டாக மதித்து வந்து பார்த்ததில்லாமல்,

கல்யாணம் கட்டினால் என்னைத் தான் கட்டுவன் என்று,

பிடிவாதமாக இருப்பதும் பெருமையாகத் தான் இருக்கு....

அதை விட நீ எனக்குக் கிடைத்தால்,

இந்த உலகத்தில் யாருமே சந்தோசப்படாத அளவு சந்தோசத்தைப் பெறுவேன், என்பது எனக்கு மட்டும் தான் தெரியும்.

ஆனாலும்,

என்மீது சுமத்தப்பட்டுள்ள குடும்பச்சுமை,

அதனால் என் எதிர்கால கல்வித்தர வாழ்க்கையில் விழுந்த இடி,

எனது வீட்டு வறுமை எல்லாம் உனக்கு ஒத்துவருமா சொல்...?

நீ நல்லாப் படிச்சவள்.

வசதி உள்ளவள். ....

அதை விட வீட்டில் ஒரே பிள்ளை...

ஆனால்,

என்னை யோசித்துப்பார்....

எல்லாமே உனது நிலைக்கு எதிரானதாகத் தான் இருக்கிறது.

சரி நான் உன்னைக் கட்டிக்கொண்டாலும்,

நான் கூலித்தொழில் செய்து தான் உன்னைக் காப்பாற்ற வேணும் ....

நீ வசதியாக வாழ்ந்து பழக்கப்பட்டவள்.

நீ வாழ்ந்த வசதிக்கேற்றவாறு என்னால் வாழ வைக்கலாமோ சொல்.... உண்மையான ஒரு காதலன்,

தனது காதலி/மனைவி வசதியாக சந்தோசமாக வாழ்வதைத் தான் விரும்புவான்.

கஷ்டப்படுத்த விரும்ப மாட்டான்.

அது இந்த ஜென்மத்தில் என்னால் முடியுமோ தெரியவில்லை.

அதனால்,

என்னை மறந்துவிட்டு நல்ல வசதியான ஒருவரைக் கட்டிக்கொண்டு நல்லாயிரு. .... இதனால் எனக்கு உன்மேல அன்பில்லையெண்டு நினைக்காதே....

உன்மிது இருக்கிற அளவு கடந்த அன்பினால் தான்,

நீ என்னோட வந்து கஸ்ரப்பட வேண்டாம் என்று நினைக்கிறேன்.

எனது அப்பா அன்றைக்கு அந்தக்காரில் அடிபட்டு படுத்த படுக்கையாகப் போனாப்பிறகு, நான் தான் எங்கட குடும்பத்தைப் பாக்கிறன்.

வீட்டில், சாப்பாடு,

தம்பி தங்கச்சியாக்கட படிப்பு,

உடுப்பு,

அப்பாவின்ரை மருத்துவச்செலவு,

எண்டு எல்லாம் என் தலையில தான்....

அது தான் பிறந்தாலும் தலைப்பிள்ளையாகப் பிறக்கக்கூடாது....

அதுவும் ஆம்பிளையாக இருக்கக் கூடாது, என்று முன்னோர்கள் சொல்வார்கள்.

என்ன செய்வது தாரணி....

இது தான் எனது விதி..... "

என்று கண்கலங்கினான் கார்த்திக்.


" எனக்கு நீங்க தான் வேணும்....

ஒரு பெண்,

தனது மனசில ஒருவனை நினைச்சா அதை மறக்கவோ... மாத்தவோ மாட்டா...

நீங்க சொல்வது போல்,

நான் வசதியாக வாழ்ந்தாலும், உங்களிடமிருந்து தான் எனக்கு நிம்மதி கிடைத்தது.... அதன்பிறகு தான் என்னாலேயே நிமிர்ந்து நிற்க முடிஞ்சது.....

இந்த நிம்மதி வேறு யாரிடமிருந்தும் கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.... உங்களிடமிருந்து தான் கிடைக்க வேணுமென்று எதிர்பார்க்கிறேன்.

நிம்மதி எங்கே இருக்கிறதோ,

அங்கே மகிழ்ச்சி தானாகவே தேடி வந்து ஒட்டிக்கொள்ளும்.

உங்களுடன் நான் இருந்தால்,

நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழ்வேன் என்ற நம்பிக்கை எனக்கிருக்கு.

என்னை சந்தோசமாக வைத்திருக்க வேண்டும் என விரும்பும் உங்களுடன் இருந்தால் தான்,

நான் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.

நீங்கள் ஒன்றும் என்னைப்பற்றி யோசிக்க வேண்டாம்.

எனக்கு உங்கட பதில் தான் வேணும்....

நீங்கள் என்னைக் கட்டுவீங்களா.... மாட்டீங்களா.....?

அதன் பிறகு தான் எனது அடுத்த முடிவுகள் இருக்கும்.....

நீங்கள் மாட்டேன் என்று சொன்னால்,

எனது வாழ்க்கை சூனியமாகத் தான் இருக்கும்...

அதனால் நான் தொடர்ந்து படிச்சென்ன செய்யப்போறன்...

அல்லது

உயிரோட இருந்து தான் என்ன செய்யப்போறன்...."


என்ற தாரணி,

கண்கலங்கியவாறு கார்த்திக்கின் கைகளை இறுகப் பற்றினாள்.


அவளது பிடிவாதத்தையும்,

தன் மீது வைத்திருந்த அன்பையும் நினைத்த கார்த்திக்,

கண்கலங்கி தாரணியின் முகத்தைப் பார்த்து,


" அப்படி நான் தான் உன்னைக் கட்ட வேணுமென்றால்,

நீ உனது படிப்பு முடிஞ்ச பின்னர்,

நீங்கள் குடும்பமாக வந்து, எங்களது வீட்டில் கதையுங்கோ.....

என்னைப் பொறுத்தவரை எங்கட வீட்டில எந்தப் பிரச்சனையுமிருக்காது....

உங்கட வீட்டில தான் பிரச்சனை கிளம்புமெண்டு நினைக்கிறன்.

அதனால் உனது அம்மா அப்பாவின் சம்மதமில்லாமல்,

அவர்களின் சாபத்தைப் பெற்று நாம் கல்யாணம் கட்டிக்கொண்டால்,

பின்னால் நாம் நலமாக, நிம்மதியாக இருக்க முடியாது...."



என்று ஆறுதல் வார்த்தைகள் சொன்னான் கார்த்திக்.


" அதென்னவோ உண்மை தான்.

அம்மாவையும் அப்பாவையும் கூட்டிவாறது என்னை பொறுப்பு ...

அப்போ நீங்கள் என்னைத் தானே கட்டுவீங்கள்....."


என்று, ஆர்வம் பொங்க, மகிழ்ச்சியுடன் கேட்டாள் தாரணி.


" ஓம்.....

நீ இல்லாமல் என் வாழ்க்கையில்லை...."


என்று, தன் மனதினுள் பூட்டி வைத்திருந்த பெட்டகத்தை திறந்து காட்டினான் கார்த்திக்.


" எனக்கும் அப்படித்தான்....."


என்ற தாரணி,

அவனது கையை எடுத்து முத்தமிட்ட பின் சொன்னாள்,


" கார்த்தி...

இன்றைக்கு,

நான் பழையபடி சின்னப்பிள்ளையாக மாறிவிட்டது போன்ற ஒரு சந்தோசம் என்மனதில் ஏற்படுகுது....

எப்படிச் சொல்வதென்றே தெரியேல்ல....

என்ன செய்வதென்றே புரியேல்ல....

துள்ளித் துள்ளி ஓட வேணும் போல கிடக்கு....

உன்னைக் கட்டிப்பிடிச்சு முத்தம் குடுக்க வேணும் போல கிடக்கு ...

வெட்கமாகவும் கிடக்கு...."


என்று தலைகுனிந்தவாறு சிரித்துச் சொல்லிக் கொண்டிருந்தாள் தாரணி.


" சரி தாரணி....

நாங்கள் வீட்டுக்குப் போவோம்...

கன நேரமாகக் கதைச்சுக் கொண்டிருக்கிறம்....

சனம் பார்த்தால் பத்துக் கதை சொல்லும்...வா....

உங்கடை வீட்டை போய் ரீச்சரையும் பாத்துக்கொண்டு வருவம்..."


என்று சொல்லி தாரணியையும் கூட்டிக்கொண்டு வந்த கார்த்திக்,

இருவரும் புதிய காதல்ப் பறவைகளாக, நம்பிக்கையுடன் சைக்கிளை எடுத்துக்கொண்டு புறப்பட்டார்கள்.


Print this post

No comments: