Thursday, May 29, 2014

பிஞ்சு நெஞ்சுக் காதல் - 1.



நான் கடைக்குப் போய்ச்சேரும் வரைக்கும் முதலாளி கடைக்கு வந்திடக் கூடாது.... அம்மாளாச்சி.... என்று அம்மாளை வேண்டிக்கொண்டு நேரத்தைப் பார்த்துப் பார்த்து சைக்கிளை ஊண்டி விளக்கினான் கார்த்திக்.


போகும் வழியில் தன்னுடைய வயதுப் பிள்ளைகளும் சைக்கிள் கரியலில் மூட்டைக் கணக்கில் புத்தகங்களை வைத்துக் கொண்டு போவதைப் பார்த்துப் பெருமூச்சு விட்டபடி நகரும் போது தான் அவனது பழைய நினைவுகள் எட்டிப்பார்க்கத் தொடங்கின.


அப்போது அவனுக்கு வயது 13 தான் ஆகியிருந்தது. ஆண்டு 7 படித்துக் கொண்டிருந்தான். படிப்பில் நல்ல கெட்டிக்காரன். என்னத்தை வகுப்பில் விளங்கப்படுத்தினாலும் கற்பூரம் மாதிரி ஒரே தடவையில் வேகமாகப் பற்றிக் கொள்ளுவான். இதனால் வகுப்பாசிரியர் வசந்தா ரீச்சருக்கும் தமிழ்-சமயச் ரீச்சர் மிஸ்.நாகேந்திரராசாவுக்கும் அவன் மீது நல்ல கெட்டிக்காரன் என்ற அபிப்பிராயம் ஏற்பட்டதுடன் அவன் மீது மிக்க அக்கறை செலுத்தினார்கள்.


இதனால் வசந்தா ரீச்சர் தனது மகள் தாரணிக்கு எல்லாத்துக்கும் கார்த்திக்கையே  உதாரணம் காட்டி ,

" அவனைப் பார்......
அவன் ஒரு கூலித்தொழிலாளியின்ர மகன்.
ஆனால் அவன் வீட்டை போய் புத்தகம் திறந்து படிக்க வீட்டில் விளக்குக்கு எண்ணை இருக்குமோ தெரியாது.
ஆனால் பள்ளிக்கூடத்தில கெட்டிக்காரனாக இருக்கிறான்.
ஆனா உனக்கு எல்லா வசதிகள் இருந்த போதும்,
கேட்டுப்படிக்க ஆட்களிருந்தும்,
நீ ஒரு ரியூப் லைட் மாதிரி இருக்கிறாய்..."

என்று எப்போதும் திட்டுவார். கணக்கில் பிழை விட்டால் சில வேளை நல்ல பூசையும் கொடுத்து விடுவார்.


இப்படி தாயரிடம் திட்டு வாங்கும் தாரணி இனி அம்மாவிடம் திட்டு வாங்கக் கூடாது என்று நினைத்து தீவிரமாகப் படிக்கத் தொடங்கினாள். ஆனாலும் அவளால் முடியவில்லை. "பானையில் இருப்பது தானே அகப்பையில் வரும் " என்று தனக்குத் தானே சமாதானம் சொல்லிக்கொண்டாலும் தாயாரின் "படி படி " என்ற நச்சரிப்பை தடுக்க என்ன வழி என்று யோசித்து கடைசியில் தெரியாதவற்றை  கார்த்திக்கிடமே  கேட்டுப் படிப்பது என்ற முடிவுக்கு வந்தாள்.


இதனால் கார்த்திக்குடன் தேவையின்றிக் கதைக்காத தாரணி, சேர்ந்து பழகிக் கதைக்கத் தொடங்கினாள். கதைக்கும் போது தனக்கு தாயாரால் விழும் பேச்சுக்களையும் காரணத்தையும் சொல்லி கவலைப்படுவாள். ஒரு நாள் அவன் முன்னால் அழுதும் விட்டாள்.


என்ன செய்வதென்று தெரியாது தவித்த கார்த்திக்

" இஞ்சருமப்பா தாரணி,
நீர் அழாதையும்...
நீர் குறை நினைக்கேல்லையெண்டா,
உமக்கு ஏதாவது டவுட் இருந்தால் என்னைக் கேளும்......
எனக்குத் தெரிஞ்சவரையில் சொல்லித் தாறேன். ….
ஒவ்வொரு அம்மாவுக்கும்,
தன் பிள்ளை நல்லா படிக்க வேணும் என்று தானே விரும்புவா .....
நீர் ஒன்றுக்கும் கவலைப்படாதையும்....
எல்லாம் நல்லதே நடக்கும் என்று நம்பிக்கையோடு இரும்......."

என்று ஆறுதல் சொன்னான்.


இந்த ஆறுதல் வார்த்தைகள் தாரணிக்கு எப்போதும் எங்கும் கிடைத்ததில்லை. தனது வாழ்க்கை ஆறுதலற்ற ஒரு இயந்திர ரீதியாகவே அமைந்திருக்கிறது என்று பெருமூச்சு விட்டபடி தனது சட்டைக் கொலரினால் இரண்டு கண்களையும் துடைத்துவிட்டு அவனுக்கு முன்னால் அழுது விட்டதை நினைத்துவெட்கத்தில் அவனைப் பார்க்காமலேயே
 
" வகுப்புக்குப் போவம் வாரும்....."

என்று இருவரும் சேர்ந்து வகுப்புக்குச் சென்றார்கள்.


இதன் பின்னர் தாரணி தனது சந்தேகங்களை கார்த்திக்கிடம் கேட்கத் தொடங்கினாள். அவனும் அவற்றை எவ்வளவு சுலபமாக விளங்கப்படுத்த முடியுமோ அவ்வளவு சுலபமாக விளங்கப்படுத்தினான். அவன் மீதிருந்த அன்போ அல்லது அவன் விளங்கப்படுத்திய முறையோ என்னவோ தெரியவில்லை. தாரணிக்கு அவன் விளங்கப்படுத்தியது ஒவ்வொன்றும் பசுமரத்தில் ஆணியடித்தது போல் நன்றாகவே பதிந்தது. பரீட்சைகளிலும் வழமையை விட கூடுதல் புள்ளிகள் வாங்கத் தொடங்கினாள்.


இதனால் வசந்தா ரீச்சரும் தாரணியையும் கார்த்திக்கையும் வகுப்பில் பாராட்டிப் பேசத் தொடங்கினார். எல்லோருக்கும் முன்னால் இருவரையும் அழைத்து
 
"இவ்விருவரது திறமைகளையும், கொள்கைகளையும், ஆர்வத்தையும்,
 நீங்களும் பின்பற்றி முன்னுக்கு வர வேணும்.....
இது தான் உங்கள் வகுப்பாசிரியர் என்ற முறையில் உங்களிடம் இருந்து நான் எதிர்பார்ப்பது.......
இது தான் நீங்கள் படிப்பிக்கும் ஆசிரியருக்கு கொடுக்கும் மதிப்பு......,
மரியாதை.......,
தட்சணை எல்லாம்...."

என்று மனமுருகிப் பேசினார்.


இப்படி அவர் பேசும் போது வகுப்பிலுள்ளவர்கள் தாரணி, கார்த்திக்கின் மீது பொறாமைப்பட்டு, அவர்களைக் குழி பறிப்பதற்காக நேரத்தைச் செலவு செய்தார்களேயொழிய, தம்மை முன்னேற்றுவதற்கான முயற்சிகள் எதிலும் ஈடுபடவில்லை. ஆனால் வகுப்பறையில், எல்லோர் முன்னிலையிலும், தன்னை அம்மா பாராட்டும் போது, தாரணிக்கு, கார்த்திக் மீது மதிப்பும், ஒருவித எல்லை கடந்த பாசத்தையும் ஏற்படுத்தியது.


" நான் ஒரு மொக்காகத் தானே இருந்தேன்.
கார்த்திக்குடன் சேர்ந்து கதைத்து அவன் விளங்கப்படுத்தியதால் தானே என்னையும் அம்மா பாராட்டுகிறார்...
திடீர் திடீரென்று கட்டியணைத்துக் கொஞ்சுகிறார்.
முதலில் என்றால் வீட்டுக்குப் போனவுடன் படி படி என்று நச்சரிப்புத்தான்.
ஆனா இப்போ எங்க போனாலும் என்னைப் பற்றித் தான் கதைப்பார்.....
இதுக்கெல்லாம் காரணம் கார்த்திக்தானே....? "

என்று தனது மனதினுள் நினைத்து,
தனக்குக் கிடைத்த பெருமைக்கும், மதிப்புக்கும்,
கார்த்திக்கே காரணமென்று நம்பினாள்.


இதேபோல் தாரணி தன்னிடம் வந்து தனது துன்பங்களைச் சொல்லி அழுதது கார்த்திக்கும் அவள்மீது ஒரு அனுதாபத்தையும் போகப்போக ஒருவித பாசத்தையும் ஏற்படுத்தியிருந்தது.


இதுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பது போல் வசந்தா ரீச்சருக்கு தலைநகரில் உள்ள பள்ளிக்கூடத்திற்கு மாற்றலாகிச் செல்வதற்கான வாய்ப்புக் கிடைத்தது. அந்தப் பிரிவு நாளும் வந்தது. பிரியாவிடை என்ற பெயரில் ஒரு இழவு வீடு தான் நடந்தது என்று சொல்லலாம். ஏனெனில் 16 வருடமாக படிப்பிச்ச ரீச்சர் மாற்றலாகிப் போகிறார் என்று மாணவர்கள் ஆசிரியர்கள் மத்தியில் ஒரு விதமான பாச விடுப்பை ஏற்றுக் கொள்ள முடியாததால் ஆசிரியர் மாணவர் என்ற வேறுபாடின்றி அழுது கொண்டிருந்தார்கள்.


ஆனால் கார்த்திக்கும் தாரணியும் ஒருவருடைய கையை ஒருவர் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு அழுது கொண்டே இருந்தார்கள். பின்னர் தமது வகுப்படைக்குப் போய் தமது மேசைகளில் இருந்து பார்த்தார்கள். பின்னர் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து பலமாக அழுதார்கள். பின்னர் தாரணி சொன்னாள்,

" கார்த்தி,
அம்மா பள்ளிக்கூடம் மாறும் போது என்னையும் சேர்த்து மாத்துவா என்று நினைக்கேல்ல...
ஆனால் பள்ளிக்கூடம் மாறினாலும் எனது மனசு மாறாது......
எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு...
நாங்க வளந்தாப்பிறகு ரெண்டு பேரும் தான் கலியாணம் செய்ய வேணும். ….
நான் உன்னைத் தான் கலியணம் பண்ணுவேன்......
உனக்கு என்னை பிடிச்சிருக்கா......?”

என்று கேட்டாள்.

" எனக்கும் உன்னைத் தான் பிடிச்சிருக்கு......
ரெண்டு பேரும் கலியாணம் செய்வோம்...."

என்று சொல்லி தாரணியை மீண்டும் இறுகக் கட்டிப்பிடித்து அழுதவாறே
அவளது கன்னத்திலும் நெற்றியிலும் முத்தமிட்டான்.
பதிலுக்கு அவளும் முத்தமிட்டாள்.

பின் கதிரைகளில் இருந்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்கும் போது

 
" தாரணி..... தாரணி....."

என்று தாயார் கூப்பிடுவது கேட்டு இருவரும் வகுப்பறையில் இருந்து வெளிவந்தார்கள்.


" ... நீங்கள் ரெண்டு பேரும் இஞ்சையோ இருக்கிறியள்....?
வாங்கோ...."

என்று அழைத்த ரீச்சர்,


" கார்த்தி... ,
கவனமாகப்படி ....
நீ நல்ல கெட்டிக்காரன்...
நல்லாப்படிச்சு பெரியாளா வந்தா,
உனது வீட்டில் உள்ள கஷ்டங்கள் எல்லாம் நீங்கினது மாதிரித்தான்....
உன்ரை படிப்பையும், முயற்சியையும் பொறுத்துத் தான்,
உன்னுடைய எதிர்காலமும்,
உன் வீட்டின் எதிர்காலமும் இருக்கிறது......
அதனால் எந்தக் கஷ்டம் வந்தாலும் படிப்பைக் கைவிடாமல் படி.....
சரி நான் போட்டு வாறன்...
நான் தலைநகருக்குப் போனாலும்,
உங்களைப்பற்றியெல்லாம் நினைத்துக்கொண்டு தானிருப்பேன். ...."

என்று சொல்லி கண்கலங்கியவாறே,
தாரணியையும் கூட்டிக்கொண்டு சென்று விட்டார் ரீச்சர்.


அப்படியே அவர்கள் போவதையே பார்த்துக் கொண்டிருந்து தானும் கண்கலங்கி நின்றதை நினைத்த போது இப்போதும் கண்கலங்கியது அவனுக்கு.


கடையும் கிட்ட வரவே கைகளால் கண்களைத் துடைத்தபடி சைக்கிளை கடை வேலியோரம் சாத்திப் பூட்டி விட்டு கடைக்குள் சென்றான்.


கடையைச் சுற்றிப் பார்த்தான்.
முதலாளி வந்ததற்கான அறிகுறிகள் தென்படவில்லை.
அதனால் ஆசுவாசப்பெருமூச்சு விட்டுக்கொண்டு தனது வேலையைத் தொடங்கினான்.

அப்போது முதலாளி வந்து மோட்டார்ச்சைக்கிளை நிறுத்திவிட்டு கடைக்கு உள்வரும் போதே

" கார்த்தி...."

என்று கூப்பிட்டுக்கொண்டே வந்தவர், கார்த்தியைப் பார்த்து, அலுவலகத்துக்கு வரும்படி கையால் சைகை காட்டிவிட்டுச் சென்றார்.

அவனும், அவரைப் பின் தொடர்ந்து சென்றான்.


அலுவலகத்தினுள் சென்றதும்...,

" 16 வயதில் உனக்கு லவ்வு தவ்வுதோ...?
உன்னை நான் ஏன் வேலைக்கு வைச்சு 3500ரூபா சம்பளம் குடுக்கிறனெண்டு தெரியுமோ...?
உன்ரை கொப்பர் தான், எனக்கு இந்த ரிங்கர் வேலையைப் பழக்கினவரெண்டதால தான்.
கொப்பர் படுத்த படுக்கையாக் கிடக்கேக்க,
உனக்கு லவ்வு வேண்டிக் கிடக்கோ லவ்வு...?
ஆரெடா அந்தப் பெட்டை....?
உன்னை, வீட்டை தேடி வந்தது மட்டுமில்லாமல்,
கார்த்திக்கை தான் கட்டிப்பன் என்று வேற சொல்லிப்போட்டு போனாளாம்...?

என்று தாறுமாறாகத் திட்டினார்.


முதலாளி அப்படி உரிமையோட திட்டினதுக்கு காரணமிருக்கத் தான் செய்தது. ஏனென்றால் அவர் அவனுடைய தூரத்து முறையில சித்தப்பா முறை தான். அந்த வகையில் அக்கறைப்பட்டுத் திட்டுகிறார் என்று நினைத்தாலும்,


" ஆர் அந்தப் பெட்டை....?"
என்று தன் மனதினுள் கேட்டுக்கொண்டே,

" தாரணி கொழும்பு போய் 3 வருடம் ஆகி விட்டது.
இவள் இன்னும் இஞ்சை வரவில்லை....
அப்படி வந்தாலும் என்னைத் தேடி வருவாளோ..
சரி வந்தாலும் வீட்டில் அப்படிச் சொல்லிப் பொட்டுப் போவாளோ...?
அதை விட சின்ன வயசில நடந்ததை இப்ப அவள் நினைச்சிருப்பாளோ...?
அவள் பணக்காரி, நான் பரம ஏழை ...
ஏதோ அப்போது ஒருவித ஆர்வக் கோளாறினால்,
ஏதேதோ கதைத்திருந்தோம் ...."

என்று மனதினுள் எண்ணியவாறே,

" எனக்கு யாரையும் தெரியாது சித்தப்பா....."

என்று சொன்னான்.


" என்னடா தெரியாதெண்டுகிறாய்...
ரீச்சரின்ர பிள்ளையெண்டா தெரியுமெண்டு சொல்லி,
பின்னேரம் வாறதாகச் சொல்லிப் போட்டுப் போனவளாம்....
இப்ப கொப்பரைப் போய்ப் பார்த்துப்போட்டுத் தான் வாறன்.
உன்னை, அந்த மனிசன் எவ்வளவு நம்பிக்கையோட, என்னட்டை வேலைக்கு அனுப்பியிருக்கிறார்.
ஆனா நீயென்னடா எண்டா,
இந்த வயதிலயே, ஊதாரியாத் திரிய வெளிக்கிடுகிறாய்.....
இனியும் நான் உப்பிடிக் கதையேதும் கேள்விப்பட்டனெண்டால்,
கால் அடிச்சு முறிச்சு, கொப்பரோட படுக்கையில போட்டுட்டு
3500 ரூபாவை சும்மா குடுத்துக் கொண்டிருப்பன் பாத்துக்கொள்....
நிக்காதே...
போய் வேலைப்பார்...."

என்று புத்திகூறி திட்டி அனுப்பிவிட்டார்.


திரும்ப பட்டறைக்கு வந்து சுட்டியலை எடுத்து வேலையைத் தொடங்கினாலும்,

"ரீச்சரின் பிள்ளை என்றால் நிச்சயமாக தாரணியாகத் தான் இருக்க வேணும்.
அவள் இஞ்சை வந்திருக்கிறாளோ...?
உவ்வளவு துணிச்சலாகச் சொல்லிப் போட்டுப் போயிருக்கிறாளே..."

என்று நினைத்துச் சந்தோசப்பட்டாலும்,

" தனது குடும்ப நிலையால் தான் வேலை செய்வதைப் பார்த்த பின்னரும் என்னை விரும்புவாளோ...?"

என்று நினைத்தவாறே தகரத்தைத் தண்டவாள இரும்பில் வைத்து நெளிவு எடுத்துக் கொண்டிருந்தான்.

இப்படியே நேரம் ஓடி, வேலை முடிந்து, வீடு சென்று குளித்து விட்டு வந்து, முற்றத்தில் தாயாருடன் உட்கார்ந்து தேநீர் குடிக்துக் கொண்டிருந்தான் கார்த்திக்.

அந்த நேரத்தில் தான், லேடீஸ் சைக்கிளில் வந்து இறங்கினாள் தாரணி.

அவளது பருவ வளர்ச்சிகளெல்லாம், அவளது அழகையும் கவற்சியையும் கூட்டியிருந்தது.

அவளது குழலை, இரட்டைப் பின்னலாகப் பின்னி தோள் மேலெடுத்து முன்பக்கமாகப் போட்டிருந்தாள்.
மாம்பழக் கலரில் இருந்த அவள், அதற்கேற்றது போல் றோஸ் கலரில் சட்டையும் சிவப்புக்கலரில் வெள்ளைப் பொட்டு வைத்த பாவாடையும் அணிந்திருந்தாள். வரையப்பட்டது போல் புருவங்கள் கண்ணின் மேல் வளைந்து காணப்பட்டது. எல்லோரையும் மயக்கி விடுவது போல் கண்கள் துருதுருவென்று சுற்றிக்கொண்டிருந்தது.
எல்லோரையும் மயக்கிவிடும் தோற்றம் அவளில் காணப்பட்டது.


அம்மா தாரணியைப் பார்த்ததும்,

" உந்தப்பிள்ளை தான் காலையில வீட்டை வந்து போனது.
யாரடா அது...?
உன்னைத் தான் கலியாணம் கட்டுவனெண்டு போட்டுப் போனவள், இப்ப திரும்ப வந்திருக்கிறாள்....?

என்று கேட்டார்.


" எனக்குத் தெரிஞ்சபிள்ளை தான்.
வசந்தா ரீச்சரின் பிள்ளை ...
நான் எல்லாத்தையும் பிறகு சொல்லுகிறேன்...."

என்ற கார்த்திக்,


" வாங்கோ.... தாரணி.....
காலையில் வந்தனீங்களாம்...
நான் வீட்டில் இருக்கவில்லை...
வாங்கோ...
இருங்கோ....."


என்று வழமைக்கு மாறாக, மரியாதையாகக் கதைத்து,
வீட்டினுள் அழைத்து கதிரை ஒன்றைக் காட்டி இருக்கச் சொன்னான்.

தாயார் சாரதா எழுந்து அவளை வரவேற்று இருக்கச் சொல்லி விட்டு,

" கதைச்சுக்கொண்டிருங்கோ....
தேத்தண்ணி போட்டுக்கொண்டு வாறன் "

என்று கூறிவிட்டு குசுனிப்பக்கம் போனாள்.


தாரணி இருந்த கதிரையும், அவனது வீடும், கார்த்திக்கினது குடும்பத்தின் வறுமையைக் காட்டிக்கொண்டிருந்தது.
முன்கோலில் 4 கதிரைகள் போடப்பட்டிருந்தது.
அதற்குப் பக்கத்தில், கட்டில் போட்டு தந்தை தணிகாசலம் படுத்திருந்தார்.
சுற்றி களிமண்ணால் கட்டப்பட்டு வெள்ளைக் கலர் அடிக்கப்பட்டிருந்தது.
கீழ் நிலம் மட்டும் சீமெந்தினால் போடப்பட்டு இருந்தது.
மேல் கூரை பனை ஓலையால் வேயப்பட்டிருந்தது.


அவன் காட்டிய கதிரையில், உட்கார்ந்த தாரணி

" என்ன வழமைக்கு மாறா,
'நீங்கள்'
போட்டுக் கதைக்கிறீங்கள்"

என்று கார்த்திக்கைக் கிண்டல் பண்ணினாள்.

" நீங்களும் தான்
'நீங்கள்'
போடுகிறீங்கள்.."

என்றான் கார்த்திக்.

" ஓமோம்..
உங்களைத் தான் கட்டிக்கப்போறேன் என்றால்,
அப்படித் தானே சொல்ல வேணும் "
என்றாள் தாரணி.

சற்று யோசித்த ராகவன் பெரிதாக பெருமூச்சொன்றை விட்டு விட்டு,

"தாரணி நீ நினைப்பது போல் இப்போ நானில்லை.
இந்த வயதிலையே என் தலை மீது குடும்பச் சுடை சுமத்தப்பட்டுள்ளது.
அப்பா, அம்மா உட்பட ஒரு தம்பியும் 2 தங்கச்சியும் இருக்கிறார்கள்.
அவர்களை காப்பாற்றி, ஆளாக்க வேண்டிய பொறுப்பும் இருக்கிறது. ...
நீ இப்போ ரீயைக் குடி. ...
பிறகு எல்லாம் கதைப்பம்...."

என்று கார்த்திக் சொல்லவும், சாரதா, ரீ கொண்டு வரவும் சரியாக இருந்தது. இருவரும் ரீயைக் குடித்தவாறே சுக நலன்களை விசாரித்துக்கொண்டார்கள்.

" ஒருக்கா வாறீங்களோ... ,
போய் எங்கட பள்ளிக் கூடத்தைப் பார்த்து விட்டு வருவோம்...."

என்று கார்த்திக்கைக் கேட்டாள் தாரணி.


" இந்த நேரத்தில ஏன்...?
நாளைக்கு சனிக்கிழமை என்பதால் எனக்கும் லீவு...
காலை 9 மணிக்கு பள்ளிக்கூடத்துக்கு வா...
நானும் வருகிறேன்"

என்ற கார்த்திக்,

" அது சரி ரீச்சர் எப்படி இருக்கிறா...?
எப்ப வந்தனீங்கள்...
படிப்பெல்லாம் எப்படி போகிறது...?

என்றான்.


" அம்மா சுகமாக இருக்கிறா...
அம்மாவும் வந்திருக்கிறா...
முந்தநாள் தான் வந்தனாங்கள்..."

என்றாள் தாரணி.

" ரீச்சரைச் சுகம் கேட்டதாகச் சொல்லு..."

என்றான் கார்த்திக்.


" அவ உங்களைப் பற்றித்தான் அடிக்கடி கதைப்பா...
நீங்கள் சுகம் கேட்டதாக,
அம்மாவுக்கு என்னால் சொல்லேலாது.
நீங்க வேணுமெண்டா வந்து அவவைப் பார்த்துச் சொல்லுங்கோ..."


என்று அவனைத் தனது வீட்டுக்கு வரவழைக்கும் நோக்கத்தில் சொன்னாள்.

" சரி நான் ரீச்சரை நேரில் பார்த்தே கேட்கிறேன். ..."

என்றான் கார்த்திக்.

" சரி அப்போ சுகமாக இருங்கோ..
நான் போட்டு வாறன்.
நாளைக்குச் சந்திப்போம்...
9 மணிக்கு.... மறந்திடாதையுங்கோ...."


என்ற தாரணி சைக்கிளை எடுத்துக்கொண்டு,
கார்த்திக்கின் பழைய நினைவுகளுடன்,
தனது வீடு நோக்கிப் புறப்பட்டாள்.

கார்த்திக்கும்,
அவளது சின்ன வயது நினைவுகளை மீட்டியவாறே,
அன்றிரவு சாப்பிடாமலேயே படுக்கையில் விழுந்தான்.


Print this post

No comments: