Sunday, June 8, 2014

பிஞ்சு நெஞ்சுக் காதல் - 3.


வீடு வந்ததும் சைக்கிலை ஸ்ராண்டில் விட்டு விட்டு, அவனை உள்ளுக்கு வருமாறு சொல்லி விட்டு, 'கார்த்திக் வீட்டுக்கு வந்திருக்கிறான்' என்ற சந்தோசத்தில் துள்ளிக்கொண்டு


" அம்மா....
அம்மா.... யார் வந்திருக்கிறதெண்டு ஒருக்கா வந்து பாருங்கோவன்...."
 
என்று வீட்டுக்குள் ஓடினாள்.


" என்னடி யார் தான் வந்திருக்கிறது....."

என்று குசுனியில் இருந்து வெளியில் வந்தார் வசந்தா ரீச்சர்.


" .... ராகவனா......
வாடா.....
நல்லா இருக்கிறியாடா.... ?
நல்லா வளர்ந்து, மீசையும் அரும்புது..... !
இனி ரோட்டால போற பெட்டையள், உன்னைத் தாண்டிப் போறது கஸ்ரம் தான் ....."

என்று தமாசாகப் பேசிக்கொண்டு வந்தார்.


ரீச்சர் வரவும் கதிரையில் இருந்து எழுந்து நின்ற கார்த்திக்

" வணக்கம் ரீச்சர் ...
நீங்கள் எப்படி இருக்கிறீங்கள்...."

என்று பௌவியமாகக் கேட்டான்.


" நாங்கள் நல்லா இருக்கிறோம்.....
இது பள்ளிக்கூடம் இல்லை.... எங்கட வீடு ....
இரு......”

என்று அவனை கதிரையில் இருக்கச்சொல்லிவிட்டு, தானும் அவன் பக்கத்தில் அமர்ந்தார் ரீச்சர்.


" உன்னைப்பற்றிக் கதைக்காத நாளே இல்லை...
தாரணி தான் உன்னை மறக்கேல்லை....
தான் கணிதத்திலயும் மற்ற பாடங்களிலையும் நல்ல மாக்ஸ் எடுக்கக்க காரணம் நீ தான் எண்டு வாய் ஓயாமல் சொல்லிக்கொண்டே இருப்பாள்.
நீ என்னட்டையும் படிச்சனி எண்டு சொல்லப் பெருமையாகத் தான் கிடக்கு...."

என்று சொன்ன ரீச்சர்

" தாரணி.... இஞ்சை வந்து ராகவனோட கதைச்சுக் கொண்டிரு...
நான் தேத்தண்ணி பொட்டுக் கொண்டு வாறன்...."

என்று எழுந்தார்.


" நீங்கள் கதைச்சுக் கொண்டிருங்கோ....
நான் தேத்தண்ணி போட்டுக்கொண்டு வாறன் ..."

என்று ஆர்வம் பொங்கச் சொல்லி , தேநீர் தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டாள் தாரணி.


" என்னடா இது புதுமையாகக் கிடக்கு...
அப்படியெண்டா கார்த்திக்கை நெடுகலும் வரச்சொன்னா, நீயும் தேத்தண்ணி போட்டுப் பழகி விடுவாய்... "

என்று நக்கலாகச் சொல்லி கொக்கட்டம் போட்டுச் சிரிக்கவும், கார்த்திக்கும் சிரிக்க குசுனிக்குள் இருந்து தாரணியும் சிரிச்சுக்கொண்டே,


" அப்போ அவரை வரச்சொல்லுங்கோ...
நான் தேத்தண்ணி மட்டுமில்ல சமையலையும் பழகி விடுகிறேன்."

என்று தனது மனதிலுள்ள ஆதங்கத்தை சூசகமாகச் சொன்னாள்.

இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த கார்த்திக்கு தலையே சுற்றியது.

தாயும் மகளும் எவ்வளவு இயல்பாகத் தன்னை வைத்து நக்கலடிக்கிறார்கள் என்றும், முதலே பேசி வைத்தது போன்று கதைப்பதையும் நினைத்து வியப்படைந்தான்.


பிறகு ரீச்சர்

" உனது படிப்புகளெல்லாம் எப்படியப்பா போகுது கார்த்தி....?. "

என்று கேட்டார்.

 
" நான் படிப்பை விட்டுட்டு வேலை செய்யறன் ரீச்சர்...
அதெல்லாம் ஒரு பெரிய கதை....
அதை விடுங்க ரீச்சர்....."

என்றான் கார்த்திக் சலிப்புடன்.


அந்த நேரத்தில் தேத்தண்ணியுடன் வந்த தாரணி,


" சரியா... பாரதக் கதை சொல்லத் தொடங்கியாச்சோ....
என்ன தான் ரெண்டு பேரும் கதைப்பியளோ தெரியாது....
திரும்பியும் அவரை அழ வைக்கப் போறியளோ.....?
அதை விடுங்கோம்மா....."

என்று சொல்லி கதையை நிறுத்திவிட்டு, இருவருக்கும் தேநீரைக் கொடுத்தாள்.

" சரி கார்த்தி, இன்னும் கொஞ்ச நேரத்தில் சமையல் முடிஞ்சிடும். இருந்து சாப்பிட்டுட்டுப் போ...
உனக்குப் பிடிச்ச கீரையும், பைத்தங்காயும் தான் கறி...."

என்று சொல்லி விட்டு குசுனிப்பக்கம் போனார் ரீச்சர்.


இதைக் கேட்டுக் கொண்டிருந்த கார்த்திக், தாரணி தன் திறமையால் தாயாரின் கதையை நிறுத்தியதையும், தாயும் அதைக் கேட்டு பணிவாக இருக்கிறதையும் நினைத்து அவ்வீட்டில் தாரணிக்கு இருந்த செல்வாக்கை எண்ணி வியந்து எப்படியும் தாரணி தன் கலியாணத்துக்கு சம்மதம் பெற்று விடுவாள் என்று தன்னுள் புழகாங்கிதமடைந்தான்.


பின் தாரணியும் கார்த்திக்கும் தமது பள்ளிக்கால நினைவுகளை நினைத்து கதைச்சுச் சிரித்துக் கொண்டிருந்தார்கள். பின்னர் சாப்பாடு ஆயத்தமாகி விட்டது என்று ரீச்சர் சாப்பிடக் கூப்பிட்டதும் மூவரும் சேர்ந்து சாப்பிட்டார்கள்.


ரீச்சரும் மிகத் திறமையாக வாசனைத் திரவியங்கள் எல்லாம் சேர்த்து கம கமவென்று மணம் கமள சமைத்திருந்தார். இதற்கு தனது கருத்தைச் சொல்ல வேணுமென்பதற்காக,


" ரீச்சர் நல்ல மணம் குணமாகச் சமைச்சிருக்கிறியள்.
நான் ஒரு நாளும் இப்படி ரேஸ்ரா சாப்பிடவில்லை...."

என்று சொன்னான் கார்த்திக். இந்தப் பாராட்டினால் சந்தோசமடைந்த ரீச்சர்,

" நாளைக்கும் வீட்டுக்கு வா....
ஞாயிற்றுக் கிழமை கோழி காச்சுறதாக முடிவு செய்திருக்கிறம். …...
அதையும் சாப்பிட்டுட்டுச் சொல்லு.....என்ரை சமையலைப் பற்றி...."

என்றார்.


" ஓமோம் ....
உங்களுக்குத் தெரியாது.... அம்மா அப்படித் தான் சமைப்பார்....
நாளைக்கும் வாங்கோ.... "

என்று கார்த்திக்கை இன்னொரு முறை வீட்டுக்கு கூப்பிட அம்மாவே சந்தர்ப்பம் தந்ததால் தன் அம்மாவுக்கு வக்காளத்து வாங்கினாள் தாரணி.

அத்தோடு

" நாளைக்கும் வந்தால் அப்பாவும் இருப்பார். அவரையும் பார்த்துக் கதைச்ச மாதிரி இருக்கும்."

என்று சொன்னாள் தாரணி.

இப்படியே பகிடியாகவும் சந்தோசமாகவும் கதைத்துச் சாப்பிட்டு முடித்து மீண்டும் கதிரையில் வந்து உட்கார்ந்தார்கள்.

" கார்த்திக் வந்து கதைச்சுக் கொண்டிருந்ததில நேரம் போனதே தெரியேல்லை..."

என்று ரீச்சர் கதையைத் தொடக்க,

" ஓமம்மா...
நீங்க கொழும்பில எத்தின பேரைப்பார்த்து அவனைப் பார்த்தா சரியா கார்த்திக்கைப் போலவே இருக்கிறான். என்று சொல்லியிருப்பியள்....
உங்களுக்கு கார்த்திக்கை ரொம்பப் பிடிக்குமாம்மா....?"

என்று தாயாரின் நிலையை கார்த்திக் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக கேட்டாள் தாரணி.

"ஏனெடி கார்த்திக்கு என்ன குறைச்சல் யாருக்கும் பிடிக்காமல் போறதுக்கு...?
நல்ல கெட்டிக்காரன் ...
வடிவான பெடியன்...."


என்று அடுக்கினார் ரீச்சர்.

" அது சரி....
நீங்கள் உங்கட மாணவனை விட்டுக்கொடுக்க மாட்டியள் என்று எனக்குத் தெரியும்......
இருந்தாலும் கேட்டுப் பார்த்தன். ..."

என்றாள் தாரணி.


தாயும் மகளும் சுற்றிச் சுற்றி தன்னைப் பற்றியே கதைச்சுக் கொண்டிருந்ததில் சங்கடமடைந்த கார்த்திக்,

" சரி ரீச்சர் நான் காலையில் வெளிக்கிட்டனான்.
வீட்டுக்கு போகாமல் விட்டால் அம்மா என்னைத் தேடுவா.
நான் இஞ்ச வாறதாகச் சொல்லிப் போட்டும் வரேல்லை.
நான் போட்டு வாறன் ரீச்சர்...."

என்று சொல்லி எழுந்தான்

" உங்கடை அம்மா தேட மாட்டா....
பிந்திப் போனால் வீட்டை அடி விழுமோ...?
அப்படியென்றால் நானும் உங்களோட வந்து, எங்கட வீட்ட தான் நீங்க இருந்தனீங்கள் என்று அவாவுக்குச் சொல்லிவிட்டு வாறன்..."

என்று கிண்டலடித்தாள் தாரணி. தாரணி.

" ஏனெடி அவனுக்கு அடி வாங்கிக் குடுக்க வேணுமெண்டு உனக்கு ஆசையோ...? சரி கார்த்தி... நீ போட்டு வா.....
இவளின்ரை கதையை விடு..."

என்று தாரணியைத் தடுத்து, கார்த்திக்கு விடைகொடுத்தார் ரீச்சர்.


" ஓம் ரீச்சர்.. நான் போட்டு வாறன்...
தாரணி போட்டு வாறன்..."

என்று சொல்லி விட்டு தனது சைக்கிளை நோக்கி நடந்தான் கார்த்திக்.

" நானும் படலை வரைக்கும் வாறன்..."

என்று கார்த்திக்குடன் படலை வரைக்கும் வந்தவள்,

" பாத்தீங்களோ...
அம்மாவுக்கும் உங்களை ரொம்பவே பிடிக்கும்.....
இண்டைக்குத் தான் அம்மாவே உவ்வளவு சிரிச்சுப் பாத்திருக்கிறேன்...
எங்கடை எல்லாற்றை சந்தோசமும் உங்கட கையில தான் இருக்கு..."

என்று விட்டு, அவனையே உற்றுப் பார்த்தாள் தாரணி.

கார்த்திக்கும்,

  " சரி .... ஒன்றும் யோசிக்காதே....
நான் போட்டு வாறன்...."

என்று சைக்கிளில் ஏறி ஓடத் தொடங்கினான்.

கார்த்திக் ' ஒன்றும் யோசிக்காதே' என்று சொன்ன ஆறுதல் வார்த்தையில் இருந்து அவன் தனக்குத் தான் என்று தனக்குள் நம்பிக்கையை ஏற்படுத்திக் கொண்டாள்.

ஏனென்றால் 3 வருடத்தின் முன் அவள் சோகமாகஅவனிடம் தனது கவலையைச் சொன்ன போதும் இதே வார்த்தையைத் தான் கார்த்திக் அவளுக்குச் சொல்லியிருந்தான்.

அந்த நம்பிக்கையுடன் வீட்டினுள் நுழைந்தாள் தாரணி.

தாரணி வந்ததும் வாராததுமாக இருக்கும் போதே,

" ஏனெடி கார்த்திக் படிப்பை விட்டுட்டு வேலை செய்யுறானாம்....? "

என்று கேட்டார் ரீச்சர்.

 
" அது தான் நான் அவரிட்டைக் கேட்டனான்.
அவர் தகப்பன் அக்சிடன்ரில காயப்பட்டு படுத்த படுக்கையானாப் பிறகு,
தான் தான் வீட்டைப் பார்க்க வேணுமெண்டு உழைக்க வெளிக்கிட்டதெண்டு சொன்னார்.
ஆனால் உண்மை அதில்லை..."

என்றாள் தாரணி.

" அப்படியெண்டா என்ன தான் உண்மையாக நடந்தது. ...? "

என்று ஆவலுடன் கேட்டார் ரீச்சர்.


" அவரின்ரை தேப்பன் சரியான குடிகாரராம்...
நெடுகலும் குடிச்சிட்டு வந்து தாய்க்கு ஒரே அடிக்கிறவராம்...
அல்லது பக்கத்து வீட்டுக் காரரோட வம்பளந்து வீண்சண்டையை விலைக்கு வாங்குவாராம்...
இப்படி ஒரு சண்டையில பக்கத்து வீட்டுக் காரனுக்கு, தேப்பன் அடிச்சு கால் முறிஞ்சு, அந்தச் செலவுக்கெண்டு 3000ரூபா குடுத்ததாம்....
இது வரைக்கும் தேப்பன் காரன் வேலையளுக்கும் போறதில்லையாம்.....
தாய் வயலுக்குப் போய் புல்லுப் பிடுங்கி, அருவி வெட்டி என்று கூலி வேலை செய்து சம்பளம் வாங்கி வந்தால், அந்தக்காசை வாங்கிக் கொண்டு போய் குடிச்சுப் போட்டு வந்து தாய்க்கு அடிக்கிறதாம். ....
இப்படி ஒரு நாள் தாய்க்கு தலையில் அடித்து விட்டாராம்....
அந்த அடியில் மண்டை உடைஞ்சு ரத்தம் ஓடியிருக்கு.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த கார்த்திக்,
இதுக்கெல்லாம் ஒரு முடிவு கட்டுறன் எண்டு சொல்லி காத்தடிக்கிற பம்மை எடுத்துக் கொண்டுபோய் தேப்பனுக்கு கால்ல முதுகில எண்டு நல்ல அடியாம்.

" நீ இருந்து அம்மாவுக்கென்ன பலன்.... எங்களுக்கென்ன பலன்.....
அம்மா வெயில் மழை பாராது உழைச்சுக் கொண்டு வாற காசில குடிச்சுப் போட்டு வந்து அம்மாவுக்கே அடிக்கிறாய்...
உனக்கு கால் ஒழுங்கா இருந்தால் தானே கோப்பிறேசன் போவாய்...?
இவ்வளவு நாளும் அம்மா உழைச்சுத் தானே வீட்டில எல்லோருக்கும் சாப்பாடு போட்டவா....
அதேபோல இனியும் எல்லோரையும் பார்ப்பா....
நீ வீட்டுக்கையே இரு......"

என்று சொல்லி காலில் அடிச்ச அடியில் கால் எலும்பு நொருங்கிப் போச்சுதாம். பிறகு பக்கத்து வீட்டுக் காரர் தான் வந்து கார்த்திக்கை தகப்பனுக்கு அடிக்காமல் தடுத்து நிறுத்தினதாம்.

அதோட தேப்பன் கால் முறிஞ்சு படுத்த படுக்கையாயிட்டாராம்.
அன்றையில இருந்து தானாம்,

" இனி நீயும் வேலைக்குப் போக வேண்டாம்.....
நானே உழைக்கிறன்.......
நான் தானே வீட்டுக்கு மூத்த பிள்ளை.... "

என்று தாயைப் பார்த்து கார்த்திக் சொன்னாராம்.


அதுக்குப் பிறகு படிப்பெல்லாத்தையும் விட்டுப் போட்டு
ஒரு தூரத்து உறவு முறையான ஒருத்தரிட்ட ரிங்கர் வேலை பழகி அவரிடமே வேலை செய்யிறாராம்.
மாதம் 13500 ரூபா சம்பளம் வாங்கிறாராம்.....
அடுத்த வருசத்திலிருந்து 15000 ரூபா தருவதாக முதலாளி சொல்லியிருக்கிறாராம்....
பாத்தீங்களாம்மா... கார்த்திக்எவ்வளவு நல்லவன் என்று...."

என்றுகவலையாக சொல்லி முடித்தாள்


" ஓமடி எனக்குத் தெரியும், அந்தப்பிள்ளை நல்ல பிள்ளை என்று...
ஏனென்டா 16 வயசானாப் பிறகும், அம்மா தேடுவா எண்டு சொல்லிப் போட்டுப் போறான்...
இதிலிருந்தே அவன் தாயில எவ்வளவு பாசம் வைச்சிருக்கிறான் என்று தெரியுது.... அவனைக் கட்டப் போறவள் நிச்சயமாக குடுத்து வைச்சவளாகத் தான் இருக்க வேணும்.....
தாய்க்கு ஒரு குறையுமில்லாமல் வடிவாகப் பார்க்கிறவன், கட்டாயம் தாரத்தையும் வடிவாக ஒரு குறையுமில்லாமல் பார்ப்பான்.....
கெட்டிக்காரப் பிள்ளை ....
கடவுளும் நல்லவர்களைத் தானே சோதிக்கிறார். ....
ம்...... என்ன செய்வது ..
அந்தப் பிள்ளையின் விதி....."

என்று பெருமூச்செறிந்தார் ரீச்சர்.

" இந்த விடயங்கள் கார்த்திக் வீட்டுப் பக்கத்து வீட்டு அன்ரி தான் சொன்னவா... நான் கார்த்திக்வீட்டுக்குப் போக வழி கேட்டுப் போனபோது தான் சொன்னவா....
அது தான் நான் அவரை ஒன்றும் கேட்கவில்லை....
நீங்களும் தெரிஞ்ச மாதிரிக் காட்டிக் கொள்ளாதையுங்கோம்மா.... ப்ளீஸ்......"

என்று தாயை வேண்டினாள் தாரணி.

" ஓமடி எனக்குத் தெரியும் தானே....
எங்களோட சந்தோசமாகப் பழகுற பிள்ளை இந்த விடயம் எங்களுக்குத் தெரியுமெண்டு தெரிஞ்சா கூச்சப்பட்டு வீட்டுக்கும் வாராமல் போயிடுவான்....
நான் சொல்ல மாட்டனடி...."

என்று உறுதி கொடுத்தார் ரீச்சர்.


" அச்சா அம்மா.... "

என்று கட்டிப் பிடித்து அவள் கன்னத்தில் முத்தமிட தாயும் மகளுக்கு முத்தமிட்டாள்.


கார்த்திக் மீது தாயாருக்குள்ள பாசத்தாலும்,
இப்போது ஏற்பட்ட அனுதாபத்தாலும்,
கார்த்திக்கை தான் விரும்புவதை தாயாரிடம் சொல்லி
எப்படியும் சம்மதம் வாங்கி விடலாம் என்ற நம்பிக்கையுடன்
மீண்டுமொருமுறை கட்டியணைத்து முத்தமிட்டாள்
தாரணி.

Print this post

No comments: