"நீங்கள் தான் வேலை வேலை என்று போய் மாதக்கணக்கில இருந்து விட்டு வாறீங்கள். ஆனால் நான் இஞ்சை இருந்து இந்த ரெண்டு பிள்ளையளோடையும் என்ன பாடு படுகிறேன் என்று எனக்குத் தான் தெரியும்......"
என்று அஞ்சலி புலம்பிக் கொண்டிருந்தாள் தன் கணவர் ராசனிடம்.
சந்திரன் சூரியன் என இரு ஆண்குழந்தைகள். மூத்தவனுக்கு 4 அடுத்தவனுக்கு 2 வயது.
ராசன் அரச சுரங்கத் திணைக்களத்தில் வேலை செய்து கொண்டிருந்தான். வேறிடங்களில் வேலை செய்யக் கூடிய வாய்ப்புக்கள் கிடைத்தாலும் கூடிய சம்பளத்திற்காக இலில் வேலைக்குச் சேர்ந்து சனி ஞாயிறு - இரவு பகல் என்று பாராமல் வேலை செய்து கொண்டிருந்தார்.
தான் ஒரு சொந்தமாக அழகான ஒரு வீடு அவர்களது ஊராருக்கு இணையாகக் கட்டி மற்றவர்களின் குத்தல் கதைகளுக்கும் குசும்புகளுக்கும் முற்றுப் புள்ளி வைத்து விட வேண்டும் என்பதே அவரது குறிக்கோளாக இருந்தது.
ஏனென்றால், அஞ்சலியும் ராசனும் காதலித்துத் திருமணம் செய்தவர்கள். இருவர் வீட்டிலும் சரியான எதிர்ப்பு. இதனால் ஆரம்பத்தில் யாருடைய உதவிகளும் இன்றி ரொம்பவே கஸ்ரப்பட்டு ஒரு நிலம் வாங்கி கொட்டில் ஒன்றைப் போட்டாலும் நிம்மதியாக சந்தோசமாக வாழ்ந்து வருகிறார்கள்.
அஞ்சலி ராசனிடம் சொல்லி அழுது கொண்டிருந்ததை, சந்திரனும் சூரியனும் அவதானமாகப் பார்த்துக் கேட்டுக்கொண்டு இருந்தார்கள்.
ராசனும், அஞ்சலியிடம்
" எனக்குத்தெரியும் அஞ்சலி கெட்டிக்காரி...
எல்லாத்தையும் சமாளிப்பாள்.....
நான் கொஞ்சக் காசு உழைச்கு சொந்தமாக வீடு ஒன்றைக் கட்டி, நாங்களும் மற்றவர்கள் நிமிர்ந்து பாக்கிற மாதிரி நடந்து காட்ட வேணும். இன்னும் கொஞ்ச நாளைக்கு சமாளியுங்கோம்மா...."
என்று சொல்லிக்கொண்டிருந்தார்.
ஆனால் அதில் ஆறுதலடையாத அஞ்சலி எழுந்து நிற்க, ராசனும் எழுந்து அவளைக் கட்டியணைக்க முற்பட்ட போது, அஞ்சலியின் காலில் இருந்த புண்ணை ராசனின் கால் தெரியாமல் பட்டு விடவே, வீரிட்டுக் கத்தினாள் அஞ்சலி.
முன்னரே கவலையில் இருந்த அஞ்சலிக்கு, புண்ணில் ஏற்பட்ட வலி அவளது அழுகைக்கு பிரதான காரணமாக இருந்தது. ராசனும் என்னவென்று தெரியாமல் அஞ்சலியின் அழுகையை கட்டுப்படுத்த முயற்சித்தான்.
இதனைக் பார்த்துக்கொண்டிருந்த மூத்தவன் சந்திரன், அம்மா அஞ்சலிக்கு தகப்பன் ராசன், அடித்து விட்டதாக நினைத்து குசுனிக்குள் ஓடிச் சென்று கத்தி ஒன்றை எடுத்து வந்து
"டேய் அப்பா ....
நான் உன்னை வெட்டுவன்ரா......"
என்று கத்திக்கொண்டு ஓடி வந்தான்.
இதனைப் பார்த்த அஞ்சலியும் ராசனும் திகைத்துக் போய் சந்திரனைப் பார்த்தார்கள்.
அப்போது அவனது முகத்தில் இருந்த கோபமும், கண்ணில் வழிந்து ஓடிய கண்ணீரின் காய்ந்த கோடுகளும் இருவரையும் மேலும் திகைப்புறச் செய்தது.
ஓடி வந்த சந்திரனை பிடித்து மறித்து கட்டியணைத்த அஞ்சலி, அப்பா எனக்கு ஒன்றும் செய்யவில்லை. என் காலில் இருந்த புண்ணில் தாக்குப்பட்டு விட்டது. அது தான் அம்மா அழுதனான் என்று சொல்லி சந்திரனை ஆறுதல்ப்படுத்தினாள்.
ராசன் சந்திரனை கட்டி அணைத்தபடி அஞ்சலிக்கு,
" அம்மா நீங்கள் ஒன்றும் யோசிக்காதையுங்கோ....
நான் இல்லை என்றாலும் பிள்ளையள் உங்களைப் பாதுகாத்துக் காப்பாற்றுவார்கள். ..."
என்று ஆறுதல் சொன்னார்.
"அப்பா அச்சு...உக்கு.... ?
நா அப்பா அக்கன் "
( அப்பா அடிச்சு உனக்கு... நான் அப்பாக்கு அடிக்கிறேன் )
சூரியன் வந்து தாயரின் கண்களைத்துடைத்துக் கொண்டு கேட்டு தன் பங்குக்கு ராசனை தனது பிஞ்சுக் கைகளால் ராசனுக்கு அடிக்க, ராசனும் அஞ்சலியும் வாய்விட்டுச் சிரித்து பிள்ளைகள் இருவரையும் கட்டி அணைத்தார்கள்.
No comments:
Post a Comment