Saturday, June 15, 2013

மூத்தவன்.




" இதை ஏனணை வாங்கினியள்...?

எனக்கு தேவையானதை நான் வாங்குவன் தானே...?

ஏன் உங்களுக்கு உந்த தேவையில்லாத வேலை...?

உங்களுக்கு இந்தக் கால நாகரீகத்தைப் பற்றித் தெரியுமோ...?

இவ்வளவு காச சிலவழிச்சு வாங்கியந்திருக்கிறியள்...

இது எனக்குப் பிடிக்வேல்ல...

எனக்கு வேண்ணடாம்......

உங்கட அடுத்த பிள்ளையளுக்குக் குடுங்கோ...

இனி எனக்கொண்டும் வாங்க வெண்டாம். சொல்லிப்போட்டன்...."


என்று அம்மாவைத் திட்டிக்கொண்டு பாடசாலைக்குப் புறப்பட்டான் சிவாகரன்.


அன்னம்மாவோ எவ்வளவு ஆசையாக தான் உழைத்த பணத்தில் அவனுக்கென ஒரு சேட் எடுத்துக்கொடுக்க அவன் தாயாரைத் திட்டியதோடல்லாமல் அவளின் மனதையும் நோகடிக்கச் செய்து விட்டான். .


"உந்த வயலில, வெய்யில்ல, காஞ்சு, கூலிக்கு அரிவி வெட்டி, சூடடிச்சு ஆம்பிளை மாதிரி 40 பரப்பு வயல் விதைச்சு இப்படியெல்லாம் சேத்த காசில தான இவனப் படிப்பிச்சனான்.

படிப்பிக்கேக்க, அதுக்கு காசு, இதுக்கு காசு எண்டு 300/400 எண்டு கேக்கேக்க இந்த நாகரீகமெல்லாம் எங்க போனது...?

இப்பவும் அவன்ர உழைப்பில நான் வாங்கிக் குடுத்தனானோ...?

3 நாள் அரிவி வெட்டி, கூலி கிடைச்சாப் போல, பெரியவனுக்கு ஒரு சேட்டெடுப்பம் எண்டு எடுத்தன். அது பிழையோ...?

உவன் உந்தத் திட்டு திட்டிப் போட்டுப் போறான்...."


என்று தனது ஆதங்கத்தை எல்லாம் தனது மாமி திரவியத்திடம் கொட்டித் தீர்த்தாள்.


அவர்கள் பிறந்து வளர்ந்ததெல்லாம் ஒரு சிறிய வளமான கிராமம். புருசன் இறந்த பின்னர் தனது முயற்சியாலும், துணிவாலும் ஒரு பிள்ளையையாவது படிப்பித்து அரசாங்க உத்தியோகமாக்க வேணுமென்று நினைத்ததை, சிவாகரனை வாத்தியாராக்கியதில் சாதிச்சிருந்தாள் அன்னம்மா.

ஆனாலும் அவளது அடுத்த நான்கு பிள்ளைகளையும் அந்த அளவுக்கு படிப்பிக்க முடியாவிட்டாலும் பண்பாக வளர்த்திருந்தாள்.


தமையனின் புறுபுறுப்புக்குப் பின் தாயின் குமுறல் கேட்டு வாழைக்குத் தண்ணீர் விட்டுக்கொண்டிருந்த கருணாகரன் தாய்க்குக் கிட்ட வந்து


" அம்மா ...

நீ ஒண்டுக்கும் யோசிக்காதையெண.....

அண்ணனுக்கு விருப்பமில்லாததை நீ இனி செய்யாதை....

அவன் ஒரு கோபக்கார பேர்வழி......

எல்லாம் நீ குடுத்த செல்லம் தான்.

மூத்த பிள்ளை முன்னுக்கு நிண்டு எல்லாத்தையும் செய்வான் எண்டு பார்த்தால் அவன் சுத்த சுயநலக்காரனாக இருக்கிறான். கவலையெல்லாத்தையும் விட்டெறியெண....

எல்லாத்துக்கும் நான் இருக்கிறன்....."


என்று தாய்க்கு ஆறுதல் சொன்னான்.


" படிச்சுப் பட்டம் பெற்று பதவிகள் வைச்சிருந்தென்னடா பேரா...? பண்பில்லாம பகட்டா இருந்து என்ன பலன்...?

நாலு பேர் வந்து சேர்ந்து வேலை செய்வாங்களோ....?

இஞ்ச தாயோட எரிஞ்சு விழுகிறவன் பள்ளிக்கூடத்தில போய் படிக்கிற பிள்ளையளோடயும் எரிஞ்சு விழத்தானே செய்வான்...?

அன்னம்மா அவனிட்ட ஏதாவது கேட்டவளோ ... இல்லைத்தானே...?

தான் உழைச்ச காசில ஒரு சேட்டு வாங்கியந்து குடுத்தா அதை தனக்கு விருப்பமில்லாட்டியும் தாய் மனசு குளிர அதை வாய்கி விட்டு அன்பா நாலு வார்த்தை சொல்லலாம் தானே...?

உன்ரை கொம்மாவுக்கும் உது வேணும் தான்.

ஏனெண்டா..

அவளுக்கென்ன ஒரு பிள்ளையோ இருக்குது...?

ஐஞ்சு பிள்ளையளைப் பெத்தவள். கொண்ணனுக்கு வாங்கின நேரம், மற்றதுகளில் யாருக்காவது வாங்கியிருக்கலாம் தானே....?


என்று சொல்லிக்கொண்டு போன திரவியம் அம்மாம்மாவை இடை மறித்த கருணாகரன்,


" இல்லையாச்சி.....

நான் தோட்டத்தில வேலை...

மற்றதுகள் படிக்கப் போக வெள்ளை உடுப்பு....

அண்ணன் தான் ஒவ்வொரு நாளும் பள்ளிக்கூடம் போறவர்.

அம்மா அதுக்காகத் தான் அண்ணனுக்குச் சேட்டு வாங்கியிருக்கலாம்...."


என்றான்.


" ஓமடா... போடா...

கொம்மாவைப் பற்றிக் கதைச்சா நீ விட்டுக் குடுக்க மாட்டியே....

உன்னை மாதிரி கொண்ணன் நினைக்கேல்லையே....?

தருமன் செத்தாப் பிறகு,

உன்ர கொம்மா உங்களோட பட்ட பாடு எனக்குத் தான் தெரியும். ... படிப்பிச்சு ஆளாக்கினவுடன் கொண்ணன்ர கதையைப் பாத்தியோ...?

அது தான் திருவள்ளுவர்


" அரம் போல் கூர்மையரேனும் மரம் போல்வர்

மக்கட் பண்பில்லாதவர்"


என்று ரெண்டு வரியில சொல்லிப்போட்டுப் போனவர்.

இது தான்ரா உன்ர கொண்ணனும் என்ன படிச்சுக் கிழிச்சாலும், பண்பில்லாட்டி மரம் தானடா....!!"


என்றார் திரவியம்.

Print this post

No comments: