Saturday, June 8, 2013

நொந்து போன பிஞ்சு



காலையில் பள்ளிக்கூடத்துக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்த பூங்கா, கவலையாகவே காணப்பட்டாள். இதனைக் கவனித்துக் கொண்டிருந்த கண்ணம்மாவுக்கோ, பிள்ளை ஏன் கவலைப் படுகின்றாள் என்று தெரியாது தவித்துக் போனாள்.

பூங்காவைக் கட்டியணைத்து உச்சி முகர்ந்து முத்தமிட்ட கண்ணம்மா,

"ஏனம்மா கவலையாயிருக்கிறீங்கள்...?
உங்களுக்கு என்ன பிரச்சனை என்றாலும் அம்மா அப்பாவுக்குச் சொன்னால் தானே தெரியும்...?
பிள்ளை கவலையாயிருந்தால் அம்மாவுக்கும் தானே கவலையாயிருக்கும்...."
என்று கண் கலங்கினாள்.

அவளது கண் கலங்கியதும் அந்த எட்டு வயதேயான பிஞ்சு பூங்காவின் கண்கலங்கி கண்ணீர் வழிந்தோடியது. தாயின் கண் கலங்கக் கூடாது என்பதற்காக தனது கவலையைச் சொல்லத் தொடங்கினாள்.

" நான் நப்பிளான்ட் ரெஸ்ற் எழுத மாட்டேன் அம்மா..."
 என்றாள் பூங்கா

" ஏன் பிள்ளை எழுத மாட்டீங்கள்.....?
நீங்கள் எழுதி சித்தியடையாவிட்டாலும் பறவாயில்லை....
எங்களுக்கு அதைப் பற்றிக் கவலையில்லை.
ஆனால் பிள்ளை அந்த ரெஸ்ரை எழுதினால் தானே, அது கஸ்ரமானதா அல்லது சுலபமானதா என்று தெரியும்...?
அப்போ தானே அடுத்த ரெஸ்ருக்கு உங்களை தயார் படுத்திக் கொள்ளலாம்...? "
என்றாள் தாய் கண்ணம்மா.

" அதுக்கு இல்லையம்மா...
நான் வீட்டில செய்யிற கணக்குகள் தான் அந்த ரெஸ்ரிலையும் வருகுதம்மா....
நான் அந்த ரெஸ்ரின்ரை பாஸ்பேப்பர் எல்லாம் செய்து பார்த்தனான். அது சரியான சுகமான ரெஸ்ரம்மா.....
நான் எழுதினால் நிச்சயமாக சித்தியடைவேன் அம்மா..."


" அப்போ ஏனணை ரெஸ்ரை எடுத மாட்டன் என்று சொல்லுறீங்கள்...?
நீங்கள் அந்த ரெஸ்ரை எழுதிப் பாஸ் பண்ணினால் தானே எங்களுக்கும், உங்களைப் படிப்பிக்கிற ஆசிரியர்களுக்கும் சந்தோசமாக இருக்கும்...?"
" இல்லையம்மா.....
நான் எழுதிப் பாஸ் பண்ணினால் என்னை வேற பள்ளிக்கூடத்துக்கு மாற்றுவினமாம்.....
அப்பிடி மாற்றினால் என்னை பிரண்ட்ஸ் ஆக்கள் எல்லாம் என்னை விட்டுப் பிரிஞ்சிடுவினம். .....
எனது ரீச்சராக்களெல்லாம் என்னை விட்டுப் பிரிஞ்சிடுவினம்.....
அது எனக்கு விருப்பமில்லையம்மா......."

என்று கண் கலங்கினாள் பூங்கா.

நப்பிளான்ற் ரெஸ்ற் என்பது ஆண்டு -3, ஆண்டு 5 வகுப்புக்களுக்கு அந்த வகுப்பு பிள்ளைகளின் தராதரங்களை அறிவதற்காக நாடு முழுவதும் ஒரே நாளில் பொதுப்பரீட்சையாக அவுஸ்ரேலியாவினால் நடாத்தப்படும் ஒரு முக்கியமான பரீட்சை ஆகும். இதில் சித்தியடையும் மாணவ, மாணவிகளுக்கு நல்ல பாடசாலையில் சேர்ந்து படிப்பதற்கு இலகுவாக அனுமதி பெற்றுக் கொள்ளலாம். அதேவேளை வேறும் சில சலுகைகள் அரசாங்கத்தாலும் வழங்கப்படும்.


பூங்காவை மேலும் இறுக அணைத்த கண்ணம்மா,

" நீங்கள் பரீட்சையில சித்தியடைந்தாப்பிறகு வேறு பள்ளிக்கூடத்துக்கு மாற வேண்டும் என்று கட்டாயமில்லை....
நீங்கள் இப்ப படிக்கிற பள்ளிக்கூடத்திலேயே கெட்டிக்காரியாக தொடர்ந்து படிக்கலாம்....
நீங்கள் ஒன்றையும் யோசிக்காமல் பரீட்சை எழுதுங்கோ....
நீங்கள் பாஸ்பண்ணினால் பெரிய, காசுக்கார பள்ளிக்கூடம் எல்லாம் உங்களை தங்களது பள்ளிக்கூடத்திலை சேர்த்து உங்கள் மூலமாக தங்களது பள்ளிக்கூடத்துக்கு பெருமை சேர்க்க போட்டி போட்டுக் கொண்டு வந்து கேட்பினம். .....
ஆனாலும் எங்களதோ அல்லது பிள்ளையின் அனுமதி இல்லாமல் படிக்கிற பள்ளிக்கூடத்தை விட்டு மாத்த மாட்டினம். ....
சரியாடா....? "

என்று சொன்னாள்.

"சரியம்மா.......
நான் அந்தப் பரீட்சை எழுதி உங்களுக்கும், எனது ஆசிரியர்களுக்கும் சந்தோசத்தையும், பெருமையையும் தேடித்தருவேன்......"

என்று சொல்லியவாறே புத்தகப்பையைத் தூக்கிக்கொண்டு தந்தையாரை நோக்கி ஓடினாள், அவளைப் பள்ளிக்கூடத்துக்குக் கூட்டிச் செல்வதற்கு.......!!!!

Print this post

No comments: