டும் ..டும் ...டும் என்று எங்கு பார்த்தாலும் செல் சத்தங்களும் விமானக்குண்டு வீச்சுக்களும் டட் டட் டட் டட்.......என்று துப்பாக்கிச் சத்தங்களும் ஓயாமல் கேட்டுக் கொண்டே இருந்தன.
சனங்களும் ஒவ்வொரு ஊர்களாக, ஒவ்வொரு இடமாக இடம் பெயர்ந்து கொண்டிருந்தனர். ஆனாலும் இராணுவ அணிகள் தொடர்ந்து மக்களது உயிர்களையும் பாராது குடியிருப்புக்கள் பாடசாலைகள், வைத்தியசாலைகள் என அனைத்தின் மீதும் குண்டுகளை வீசி மக்களைக் கொன்றதோடல்லதமல் அவர்களை அவ்விடங்களில் இருந்து துரத்தியும் அடித்தன.
இராணுவத்தின் குண்டுத்தாக்குதல்களில் செத்தவர்கள் சாக, மற்றவர்கள் அஞ்சி ஓடி ஓய்ந்து ஓதங்கிய இடம் தான் முள்ளிவாய்க்கால். ஏலக்கூடியவர்கள் தொடர்ந்து ஓடுவதற்கு இடமிருந்தால் ஓடியிருப்பார்கள். ஆனால் அங்கு அவர்களை ஆர்ப்பரித்து வழிமறித்தது இந்து சமுத்திரம்.
சனம் எல்லாம் தங்களால் இயன்றவரை அந்த கடற்கரை மண்ணில் பங்கர் வெட்டி, கொழுத்தும் வெயிலில் இருந்து தம்மைக் காக்க அதன்
மேல் பிளாஸ்ரிக் ரெண்டினாலும், இல்லாதவர்கள் சேலைகளினால் கூரை போட்டு, தங்களால் இயன்றவரை செல்ரரை அமைத்து தங்கினார்கள். ஒவ்வொரு இரண்டடிக்கும் ஒவ்வொரு ரெண்ட். மூன்று லட்சம் பேர் மூன்று கிலோ மீற்றர் நீளமான கடங்கரையில் தங்கவேண்டுமென்றால் யோசித்துப் பாருங்களேன்.
மூன்று லட்சம் பேரும் காலைக்கடன்களை முடிப்பது அந்த மூன்று கிலோ மீற்றர் கடற்கரை தான். அங்கிருந்த மக்களுக்கு இயற்கை ஒரு உதவி செய்தது. அதாவது அனைவரும் ஏதோ சுத்தமாக இருப்பதற்கு கடலில் குளித்தார்கள். இயற்கையான உப்புக் காற்று இலையான்களை நெருங்க விடாது தடுத்தது.
இதனால் அனைத்து உயிர்களும் கொடும் அரக்கர்களின் குண்டுகளில் பாதிக்கப் பட்டார்களே தவிர இயற்கையின் தொற்று நோய்களால் அவதிப்படவில்லை. கொடியவர்கள் மக்களின் குடியிருப்புக்கள் என்று பாராமல் குண்டு வீசிக் கொண் இருந்தார்கள்.
அங்கிருந்தவர்கள் ஒவ்வொரு செல்லுக்கும், கடவுளே என்னைக் காப்பாத்து என்று கூறிக்கொண்டு அந்த அந்த இடங்களில் படுத்துக் கொள்வார்கள். அதிஷ்டம் இல்லாதவர்கள் அந்தச் செல்லுக்கு பலியாகுவார்கள். சிலர் காயப்பட்டு பேச்சு மூச்சின்றி கிடப்பார்கள்.
குடும்பத்தில் தாயும் தகப்பனும் செத்திருப்பார்கள், பிள்ளைகள் அநாதையாக தவிப்பார்கள். தாய் செத்திருப்பாள், பயிற்றில் பிள்ளை உயிருடன் இருக்கும். சில மணிகளில் அதுவும் சாகும். அதைவிட கொடுமை என்ன வென்றால் தாய் செத்தது தெரியாமல் பிள்ளை அவள் முலையில் பால் குடித்துக் கொண்டிருக்கும்.
அனைவரது பிரார்த்தனையும் செத்தால் குடும்பத்தோட செத்திட வேணும், அதைவிட காயப்பட்டு இழுபடாமல் ஒரே தடவையில் போய்ச் சேந்திட வேணும் என்பதாகத் தான் இருந்தது.
கலாவும் அப்படித்தான். தனது மூன்று வயதேயான கண்ணனுடனும் கணவர் ஜெனாவுடனும் அங்கிருக்கும் போது செத்தால் ஒன்றாகச் செத்து விட வேண்டும் என்று தினமும் கடவுளிடம் அழுது வேண்டுவாள்.
ஆனால் நடந்தது வேறாக இருந்தது. அன்று கண்ணன் வழமைக்கு மாறாக ஓயாமல் அழுது கொண்டே இருந்தான். அவனுக்கு பசியாக இருக்க வேண்டும். அவளும் அவனுக்கு தாய்ப்பார் கொடுத்துக் கொண்டு தான்இருந்தாள். ஆனாலும் பிள்ளை பாலை உறிஞ்சிக் குடிக்க அவளும் சாப்பிட்டால் தானே பால் ஊறும்.
கண்ணனது அழுகை ஓயாததால் அவனையும் தூக்கிக் கொண்டு பக்கத்தில் இருந்த கடைக்கு ஏதாவது சாப்பிட வாங்குவதற்காகச் சென்றாள்.
அந்த நேரத்தில் அரக்கர்களின் செல் ஒன்று அவர்கள் இருந்த ரெண்டின் மீது விழுந்ததால் அங்கு ஜெனார்த்தனன் நித்திரையில் இருந்தார்.
கடைக்குச் சென்றவள் செல் வந்து விழுந்தது பக்கத்தில் என்பதால் நெஞ்சில் உயிரைப் பிடித்தபடி பதறியடித்துக் கத்திக் கொண்டு ஓடி வந்தவளுக்கு விஷயம் புரிந்து விட்டது. அந்த அரக்கர்களின் செல் கடைசியாக வந்து வீழ்ந்தது, தனது ரெண்டின் மேல் என்று.
ஓடிவந்து கண்ணனை இறக்கிவிட்டு ரெண்டை கிளறி எடுத்துப் பார்த்த போது ஜெனா அப்படியே தூங்கிக் கொண்டே இருப்பது போலவே கிடந்தாள். அவள், அவர் மேல் விழுந்து " அப்பா எழும்புங்கோ என்று கதறினாள்.. எப்படித்தான் எழும்புவார்..? அவரது உயிரைத் தான், அந்த அரக்கர்களின் செல் குடித்து விட்டதே...! கத்திக் குழறியவள், கடவுளைத் தான் திட்டினாள்.
ஆனால் எதுவுமே அறியாத கண்ணன்
"அப்பா... அப்பா... " என்று ஜெனாவின் மேல் விழுந்து அழுது கொண்டிருந்தான்.
ஆனால் என்ன செய்வது...? பக்கத்தில் இருந்தவர்கள், கலாவைச் சமாதானப்படுத்தி வெளியில் கூட்டிக் கொண்டு வந்தார்கள்.
கண்ணனுக்கும் " அப்பா சாமியிடம் போய் விட்டார் ... வாய்யா...." என்று சொல்லி கூட்டிக் கொண்டு வந்து விட்டார்கள். அவனுக்கு என்ன விளங்கியதோ தெரியவில்லை. அப்போது சொன்னது அவனது மனதில் பசுமரத்தில் ஆணியடித்தது போல் பதிந்து விட்டது.
ஜெனாவை அவர்கள் தங்கியிருந்த அந்த பங்கருக்குள்ளேயே வைத்து புதைத்து விட்டு வேறு இடத்துக்கு கண்ணனும் கலாவும் இடம் பெயர்ந்து விட்டார்கள். பின்னர் சில நல்ல உள்ளங்களின் உதவியுடன் அங்கிருந்து தப்பி கடல்வழியாக அவுஸ்ரேலியாவுக்கு சென்று விட்டார்கள்.
அந்நாட்டு அரசாங்கத்தின் உதவியுடன் கண்ணனை ஒரு நல்ல பாடசாலையில் சேர்த்து படிப்பிக்கின்றாள். அவனுக்கு இப்போ 6 வயதாகின்றது. அவளும் கைத்தொழில் நிறுவனம் ஒன்றில் கணக்காளராகப் பணியாற்றி தனது குடும்பச் சுமைகளைத் தாங்கி வருகின்றாள்.
ஆனால் கண்ணன் பாடசாலை சென்று வந்ததும் கலாவிடம் கேட்கும் முதல் கேள்வி அப்பா எங்கே என்பது தான். அதற்கு அப்போதிருந்து இப்போது வரைக்கும் அவனுக்கு "அப்பா சாமியிடம் போய்விட்டார்" என்று சொல்லி சமாளித்து விடுவாள்.
சில வேளைகளில் கண்ணன் எங்கே என்று காணாததால் கூப்பிட்டு தேடிப் பார்த்தால் எங்காவது ஒரு மேசையின் கீழ் குந்தி இருந்து கொண்டு இரு கைகளையும் நாடியில் வைத்து யோசித்துக்கொண்டிருப்பான். அப்போது அவனது கண்கள் கலங்கியிருக்கும்.
அவனைக் கண்டதும் அந்தத் தாயினது கண்களும் பனித்துக் குளமாகி விடும். கண்ணனை இழுத்துக் கட்டி அணைத்து கண்ணீர் சிந்த " என்னய்யா... அம்மா கூப்பிடேக்க ஏன் ஓமென்று சொல்லவில்லை...?" என்று கேட்பாள்.
"அம்மா நான் இப்போ வளந்து விட்டேன் தானே... ஏன் இன்னும் அப்பா வந்து என்னைப் பாக்கவில்லை...?" என்று கேட்பான்.
பிறகென்ன கலா அவனை மேலும் இறுகக் கட்டியணைத்து ஓவென்று கதறுவாள். தாய் அழுவதைக் கண்டு அவளைக் கட்டிப்பிடித்துக் கொஞ்சி சமாளித்து விடுவான் கண்ணன்.
இப்படி இன்னொரு நாள் கலாவின் மடியில் படுத்திருந்த கண்ணன், திடீரென கலாவிடம் கேட்டான்.
"அம்மா... அப்பா எப்போது வருவார்...?" என்று .
அதற்கு "அப்பா சாமியிடம் போய் விட்டார். அவர் திரும்பி வர கன நாளாகும். .." என்று சொன்னாள் கலா.
அதற்கு கண்ணன் "ஏனம்மா சாமிக்கு அப்பா இல்லையா...? ஏன் என்ரை அப்பாவைக் கூப்பிட்டு வைச்சிருக்கிறார்...? அப்பாவுக்கு லீவு குடுக்க மாட்டாரா....?" என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனான்.
'நான் எப்படி இந்தப் பிஞ்சுக்கு புரிய வைப்பேன்...? எப்படி விளங்கப்படுத்துவேன்...? எப்படி நான் அவனது ஏக்கத்துக்கு விடை கொடுப்பேன்....? என்று கண்கலங்கியவாறு
மன நம்பிக்கைகளில் மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கும் கடவுளைத் தான் மறுபடியும் அழைத்தாள் அந்தத் தாய்.
3 comments:
kathaiyai vaasekkum pothu kankalil thannir perukkedukkirathu. appo antha thaayin valiyai sollavaa mudiyum? kadavul irukkiraara enra kelvi manathinul eluvathil niyaayam itukkath thaan seykirathu...!
இது கதை அல்ல... உண்மை சம்பவங்கள் இப்படித்தான் இருக்கின்றன...
நன்றி குழலி உங்களது வருகைக்கும் கருத்துக்கும். ஆனாலும் உலகில் இதனை ஏற்றுக் கொள்பவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்?
Post a Comment