நான் கடவுளிடம் மண்டியிட்டேன்
என் துன்பங்களுக்கு ஒரு முடிவைத் தருவதற்கு
ஆட்கடத்தல் காரரிடம் மண்டியிட்டேன்
அனுப்பும் கூலி பெருந்தொகையானதால், குறைப்பதற்கு
படகோட்டியிடம் மண்டியிட்டேன்
உயிருடன் ஏதோவொரு கரை சேர்ப்பதற்கு
கடற்கொள்ளையரிடம் மண்டியிட்டேன்
என்மைக் கொன்றுவிடாது உயிரோடு விடுவதற்கு
கடற்படைச் சிப்பாய்களிடம் மண்டியிட்டேன்
நாம் குற்றங்கள் செய்யாத அப்பாவிகள் என்று
குடிவரவுத்துறையிடம் மண்டியிட்டேன்
நாம் அகதிகள் என்பதை உறுதி செய்வதற்கு
குடிவரவுத்துறை மந்திரியிடம் மண்டியிட்டேன்
ஆனால்,
அலுவலகத்தின் கதவுகளுடன்
அவரது மனக்கதவுகளும்
பலமாகவே பூட்டப்பட்டிருக்கின்றன.
இப்போது நான்
சிறகிழந்த பறவையாக;
உறவிழந்த அநாதையாக;
கூடு இழந்து;
உற்ற மனை பிரிந்து;
என்னிளமை எல்லாம் தனிமையிலே;
சூனியமாக;
அழிந்து கொண்டிருக்கின்றன.
இன்னும் நான் யாரிடம் தான் மண்டியிட
என் வாழ்வில்
இனிவரும் துன்பங்களிலிருந்து
விடுதலை பெறுவதற்கு...?????
No comments:
Post a Comment