" இதை ஏனணை வாங்கினியள்...?
எனக்கு தேவையானதை நான் வாங்குவன் தானே...?
ஏன் உங்களுக்கு உந்த தேவையில்லாத வேலை...?
உங்களுக்கு இந்தக் கால நாகரீகத்தைப் பற்றித் தெரியுமோ...?
இவ்வளவு காச சிலவழிச்சு வாங்கியந்திருக்கிறியள்...
இது எனக்குப் பிடிக்வேல்ல...
எனக்கு வேண்ணடாம்......
உங்கட அடுத்த பிள்ளையளுக்குக் குடுங்கோ...
இனி எனக்கொண்டும் வாங்க வெண்டாம். சொல்லிப்போட்டன்...."
என்று அம்மாவைத் திட்டிக்கொண்டு பாடசாலைக்குப் புறப்பட்டான் சிவாகரன்.
அன்னம்மாவோ எவ்வளவு ஆசையாக தான் உழைத்த பணத்தில் அவனுக்கென ஒரு சேட் எடுத்துக்கொடுக்க அவன் தாயாரைத் திட்டியதோடல்லாமல் அவளின் மனதையும் நோகடிக்கச் செய்து விட்டான். .
"உந்த வயலில, வெய்யில்ல, காஞ்சு, கூலிக்கு அரிவி வெட்டி, சூடடிச்சு ஆம்பிளை மாதிரி 40 பரப்பு வயல் விதைச்சு இப்படியெல்லாம் சேத்த காசில தான இவனப் படிப்பிச்சனான்.
படிப்பிக்கேக்க, அதுக்கு காசு, இதுக்கு காசு எண்டு 300/400 எண்டு கேக்கேக்க இந்த நாகரீகமெல்லாம் எங்க போனது...?
இப்பவும் அவன்ர உழைப்பில நான் வாங்கிக் குடுத்தனானோ...?
3 நாள் அரிவி வெட்டி, கூலி கிடைச்சாப் போல, பெரியவனுக்கு ஒரு சேட்டெடுப்பம் எண்டு எடுத்தன். அது பிழையோ...?
உவன் உந்தத் திட்டு திட்டிப் போட்டுப் போறான்...."