என்று அவளது வீட்டுக்குப் பக்கத்திலிருந்த சனசமூக நிலையத்துக்கு தனது மகன் பாலாவை போகவிடாது வெருட்டிக் கொண்டிருந்தாள் கண்ணம்மா.
பாலாவுக்கு அப்போது தான் 2 வயது ஆகிக் கொண்டிருந்தது. அவனுக்கு 8 வயதில் அக்காவும் 5 வயதில் அண்ணாவும் இருந்தனர். பாலன் சரியான சுட்டிப் பயல். அவனுடைய சில வேடிக்கையான நடவடிக்கைகளை கண்ணம்மா அயலவர்களிடமும் காண்பவர்களுக்கும் சொல்லி மகிழ்வாள்.
யாராவது அவனது வீட்டுக்கு வந்திருந்தால் அவர்களுடன் பாலா ஒட்டிவிடுவான். அவர்கள் மீது பாசமழை பொழிந்து தன்னை அவர்கள் மறக்க முடியாத அளவுக்குச் செய்து விடுவான்.
பாலாவின் அக்காவும் அண்ணாவும் பள்ளிக்குச் சென்றபின் இவன் தான் வீட்டில் தனிமையில் இருப்பான். அப்பா வேலைக்குச் சென்று விடுவார். அம்மா வீட்டினில்...
பிள்ளைகளையும் கணவரையும் காலையில் பள்ளிக்கும் வேலைக்கும் அனுப்பிவிட்டு அவள் தனது சமையல் வேலைகளைக் கவனிக்கத் தொடங்கி விடுவாள். அச்சமயங்களில் பாலா செய்யும் குழப்படிகளுக்கு கண்ணம்மா சில பொருட்களைக் காட்டி வெருட்டி வைத்திருந்தாள்.
ஒரு நாள் கண்ணம்மா சமைத்துக் கொண்டிருந்த போது, பாலா சமையலறை அலுமாரியினைத் திறந்து அதற்குள் இருந்த பாத்திரங்கள் எல்லாவற்றையும் எடுத்துப் வெளியில் போட்டு விட்டான். அப்போது அதற்குள் இருந்த அகப்பையை எடுத்து அதன் காம்பினால் பாலாவுக்கு சின்னத் தட்டுத் தட்டி இனி இப்படிச் செய்தாய் என்றால் இப்படித் தான் அடிவிழும் என்று வெருட்டி விட்டு பாத்திரம் எல்லாவற்றையும் எடுத்து அடுக்கி விட்டாள்.
சில நாட்களின் பின்னர் பாலா எதேச்சையாக அந்த அலுமாரியைத் திறந்த போது பாத்திரங்களில் சில தானாகவே வெளியில் விழுந்து விட்டது. உடனே அவன் தாயைப் பார்த்தான். தாய் அவனை கோபத்துடன் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். இதனால், தாயாரைச் சமாளிப்பதற்காக அதில் இருந்த அகப்பையை எடுத்த பாலா
"அம்மா...... கசஞ்சி....எக்கு அச்சி...." என்று தாயாரிடம் அகப்பையை நீட்டி தன் பின்பக்கத்தைத் தொட்டுக் காட்டினான்.
கோபமாகப் பார்த்த கண்ணம்மாவுக்கு தன் மகன், எவ்வாறு சாமர்த்தியமாக தன்னைச் சமாளித்து விட்டான் என்று நினைத்து, உள்ளம் பூரித்து அப்படியே அவனைக் கட்டி அனைத்து உச்சி முகர்ந்து முத்தமழை பொழிந்தாள். பின்
" இனி இப்படிச் செய்யக் கூடாது... செய்தால், அம்மா பிள்ளைக்கு அடிப்பன்...பிறகு பிள்ளைக்குத் தானே வலிக்கும்...? "
என்று செல்லமாக அறிவுரை சொன்னாள்.
அவனும் ஏதோ விளங்கியது போல் "ம்" என்று சொல்லிக் கொண்டிருப்பான்.
அடுத்து அவனுக்கு சமையலறைக்குப் போனால், அங்கு ஏதாவது பொருட்களைத் தொட்டு அம்மாவிடம் அடி வாங்க வேண்டும் என்று தெரிந்து விட்டது.
பாலா யார் என்ன செய்தாலும் அதைத் தானும் செய்ய வேண்டும் என்று அடம் பிடிப்பான். தமையன் படித்தால் தானும் படிக்க வேண்டும் என்று புத்தகம் ஒன்றை எடுத்து வைத்துக் கொண்டு அவனைப் படிக்க விடாது ரகளை பண்ணுவான்.
தமையனோ, தமக்கையோ, சத்தமாகப் படித்தால் அவனும் சத்தமாக ஏதாவது சொல்லி படிப்பது போல் பாசாங்கு செய்வான். அப்போ அவர்கள் தந்தையாரை அழைத்து
" அப்பா ... பாலாவை ஒருக்கா என்னண்டு கேளுங்கோ... எங்களைப் படிக்க விடுகிறான் இல்லை" என்று முறைப்பாடு செய்வார்கள்.
அப்போ அப்பா பாலாவை உறுக்கியோ அல்லது அடிபோட்டோ அழவைத்து நித்திரை ஆக்கி விடுவார்.
பின்னர் மறுநாளும் இவ்வாறே ஏதாவது கூத்துக்கள் பண்ணி தகப்பனாரிடம் அடியோ, காதில் முறுக்கோ வாங்கி அழுது நித்திரைக்குச் செல்வான்.
இப்படி அவனது குழப்படிகள் பல....
தாயார் வோசிங் மிசினில் உடுப்பைப் போட்டு விட்டு சமையலறையில் வேலை பார்ப்பாள். அங்கு செல்லும் பாலன் அந்த பட்டனில் லைற்றைக் கண்டு அதை அழுத்தி நிறுத்தி விடுவான்....
பின்னர் கண்ணம்மா உடுப்பை எடுத்து வெயிலில் உலர்த்துவதற்காக எடுக்கச் சென்றால் மிசின் நிறுத்தப்பட்டு உடுப்பு துவைக்கப்படாது அரைவாசியில் இருக்கும். பின்னர் அதை திரும்ப ஸ்ரார்ட் பண்ணி துவைத்து முடிப்பதற்கிடையில் வெயில் போய்விடும்.
ரீவி றிமோட்டை எடுத்து அதிலுள்ள பட்டன்கள் எதையாவது அழுத்தி ஏதாவது சிஸ்ரங்களை மாற்றிவிடுவான். பின்னர் செய்தியைப் பார்ப்பதற்கு என்று யாராவது ரீவியைப் போடும் போது அது சிஸ்ரம் மாற்றப்பட்டிருக்கும். மீள சணல் வைன் பண்ணி பார்ப்பதற்கிடையில் பிரதான செய்திகள் முடிந்து விடும்.
இவ்வாறான குழப்படிகளால் பாலனுக்கு எதைத் தொட்டாலும், எதைச் செய்தாலும் அடியோ, காதில் முறுக்கோ தான் கிடைத்தது.
அவன் ஒருநாள் வக்கியூம் கிளீனரை தூக்க முடியாது இழுத்து வந்து பெரியவர்கள் கிளீன் பண்ணுவது போல் தானும் செய்து கொண்டிருந்தான். இதைப் பார்த்த கண்ணம்மா, அவனுக்கு அகப்பைக் காம்பினால் கொஞ்சம் பெரிதாகவே அடித்து விட்டாள். அன்று முழுதும் அழுது நித்திரையாகி விட்டான் பாலன்.
இவையனைத்தும் அவனது மனதினுள் ஒரு படிப்பினையைக் கொடுத்திருக்க வேண்டும். என்னவென்றால் தான் தொடுவதற்கெல்லாம், செய்வதற்கெல்லாம் அடியும் காதில் முறுக்கும் தான் கிடைக்கிறது என்று. இவற்றைச் செய்யக்கூடாது என்று நினைத்தானோ என்னவோ.. சில நாட்கள் ஒன்றுமே செய்யாது இருந்து விட்டான்.
பாலன் சில நாட்களாக எந்த குழப்படியும் இன்றி ஓரிடத்திலேயே அமர்ந்திருந்ததைப் பார்த்த கண்ணம்மாவோ, 'துடியாட்டமாகத் திரிந்த பிள்ளை ஒன்றுமே செய்யாமல் சோர்ந்து போய் இருக்கிறானே' என்று துடித்துப் போய், பிள்ளைக்கு காய்ச்சல் காய்கிறதா என்று நெற்றியைத் தொட்டுப் பார்ப்பாள். இன்னும் ஏதேதோவெல்லாம் பரீட்சித்துப் பார்த்து தன் தாய்மை உணர்வுகளை பாசமாகக் கொட்டினாள்.
பொம்மைகளைக் கொடுத்து விளையாட்டுக் காட்டினாள். அவ்வப்போது சிரித்து மகிழ்வான். ஆனால் அடுத்தகணமே சோர்ந்து விடுவான். தாயார் அவனுடன் சேர்ந்திருக்கும் வரை சந்தோசமாக இருப்பான். தாயார் தன் வேலைகளைச் செய்வதற்காக சற்று நகர்ந்ததும் சோர்ந்து விடுவான்.
அவ்வாறான காலப்பகுதியில் தான் அன்பு அவர்கள் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள வீட்டில் வாடகைக்குக் குடியேறினான். அவன் எக்கவுண்டன்ற் படிப்பதற்காக தனது கிராமத்திலிருந்து தலைநகருக்கு வந்திருந்தான்.
அயல் வீடுகளுடன் நல்லுறவைப் பேணுவது நல்லது என்ற நோக்கத்தில் பக்கத்து வீட்டுக்குச் சென்று அவர்களுக்கு தன்னை அறிமுகம் செய்தான். அப்போது அவர்களும் தமிழர்களாக இருந்ததால் சொந்த மொழியிலேயே கதைத்துக் கொள்வதற்கு ஒரு நட்புக் கிடைத்ததால் இருவீட்டாரும் அடிக்கடி சந்தித்துக் கொண்டார்கள். அவரவர் வீடுகளுக்குச் சென்று சுகம் விசாரித்துக் கொண்டார்கள். வீட்டில் சமைக்கும் உணவுகளைப் பகிர்ந்து பரிமாறினார்கள்.
அன்புவின் வீட்டுக்குச் செல்லும் நேரங்களில் அங்கு பாலனும் சேர்ந்து செல்வான். அங்கு ரீவியை ஒன் பண்ணுவான். வேறு ஏதாவது குழப்படி செய்வான். ஆனால் யாரும் ஏதும் சொல்வதில்லை. பாலனின் தாயாரோ தகப்பனாரோ, நாகரீகம் கருதி அவனுக்கு அன்பு வீட்டில் வைத்தே தண்டனை வழங்குவதில்லை.
இவை அவனுக்கு ஒரு தெளிவை ஏற்படுத்தியிருக்கலாம். அதாவது வீட்டில் செய்யும் ஒவ்வொரு விடயத்துக்கும் அடியோ அல்லது காதில் முறுக்கோ கிடைக்கிறது. ஆனால் அன்பு வீட்டில் ஒன்றுமே நடக்கவில்லை.
அதனாலோ என்னவோ பாலனுக்கு அன்பு வீடு ரொம்பவே பிடித்திருந்தது.
வீட்டினில் சோர்ந்திருக்கும் பிள்ளை அன்புவின் வீட்டுக்குச் சென்ற பின்னர் சந்தோசமாக இருப்பதை அவதானித்த கண்ணம்மா, பாலன் சோர்ந்திருக்கும் நேரங்களில் அன்பு வீட்டுக்கு அழைத்துச செல்வாள். அங்கு அன்புவுடன் கூட இருந்த மற்றவர்களும் அவனைத் தூக்குவார்கள். அவனுடன் சேர்ந்து விளையாடுவார்கள். அவன் சொல்வதை ஒவ்வொன்றாகக் கேட்டு ரசிப்பார்கள். ஒருவர் வேலையாக இருந்தால் மற்றவர்கள், பாலனுடன் சேர்ந்திருப்பார்கள்.
இவை ஒவ்வொன்றும் அவனுக்கு, தன்னுடன், தனது வீட்டிலுள்ளவர்களை விட அன்பு வீட்டில் உள்ளவர்கள் சந்தோசமாக இருக்கிறார்கள், தன்னை மதித்து தன்னுடன் விளையாடுகிறார்கள், தான் செய்யும் ஒவ்வொன்றுக்கும் ஒன்றுமே சொல்லாது ஏற்றுக்கொள்கிறார்கள் என்று ஆச்சரியமாக இருந்திருக்கலாம்.
பாலன் சில வேளைகளில் செய்யும் குழப்படிகளுக்கு அன்புவுடன் இருந்த இனியன் "அதைத் தொடக் கூடாது, தொட்டால் அடிப்பேன் " என்று வெருட்டுவான். ஆனால் பாலனோ 'மாமா' என்று கூப்பிடுவதை மாற்றி 'மாமாச்சி' என்று பாசமாக அழைத்து அனைவரையும் சமாளித்து, தான் என்ன செய்ய வேண்டுமோ அனைத்தையும் செய்து முடித்து அனைவரது மனங்களிலும் இடம் பிடித்து விடுவான்.
வீட்டில் ஏதாவது குழப்படி செய்தால், தாயினால் அல்லது தந்தையினால் உறுக்கியோ அடியோ வாங்கினால் உடனே அழுது கொண்டு அன்பு வீட்டுக்கு வந்து, அங்குள்ளவர்களிடம், தனக்குத் தெரிந்த முறையில் ஏதேதோ சொல்லி முறையிடுவான் பாலன். அவர்களும் அவனது முறைப்பாட்டை கூர்ந்து கேட்பது போல் பாசாங்கு செய்து, அவனை அணைத்துத் தூக்கி ஏதாவது விளையாட்டுக் காட்டி சிரிக்க வைப்பார்கள்.
பின்னர் பெற்றோர் வந்து அவனைச் சமாதானப்படுத்தி அழைத்தச்செலவார்கள்.
இவ்வாறு இருந்த காலப்பகுதியில் தான், அன்புவைத் தவிர மற்றையவர்கள் எல்லோரும் விடுமுறையில் தமது கிராமங்களுக்ச் சென்று விட்டனர்.
இப்போ பாலன் தினமும் அன்பு வீட்டுக்கு வந்து பார்ப்பான். அங்கு யாரும் இருக்க மாட்டார்கள். அன்பு மட்டுமே வீட்டில் இருப்பான்.பாலனுக்கு மற்றவர்கள் எங்கே என்று கேட்கத் தெரியாது. ஆனால் ஒருவர் மட்டுமே இருக்கிறார். இவரும் போய் விட்டால் தனது சுதந்திரங்கள் எல்லாம் கெட்டு விடும் என்று நினைத்தோ என்னவோ அன்புவை எங்கு கண்டாலும் ஓடிவந்து தொற்றிக் கொள்வான்.
இரவு நித்திரையில் இருக்கும் போதும் "அன்பு" என்று வாய் உளறியதாக கண்ணம்மா அன்புவுக்குச் சொல்லிக் கவலைப் பட்டால் பாலன் மீதுஅன்பு பாசமாக இருந்தாள்.
பாலன் அன்பு வீட்டுக்கு வந்தால் அவன் என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும் அவற்றையெல்லாம் விட்டுவிட்டு பாலனுடன் வந்து விளையாடுவான்.
வெளியில் போகும் போது பாலனைக் கண்டால் பூங்காவுக்கு அழைத்துச் சென்று தானும் சேர்ந்து பாலனுடன் விளையாடுவான்.
காலையில் எழுந்தவுடன் தனது உடுப்புக்களை எடுத்து வந்து தாயரிடம் கொடுத்து " அம்மா....அன்பு...." என்று சொல்லி தனது உடுப்புக்களை அணிவிக்கச் சொல்லி அடம் பிடிப்பானாம் பாலன் என்று கண்ணம்மா அன்புவைக் காணும் போது சொல்லுவாள்.
இவ்வாறே காலையில் எழுந்துஅன்பு வீட்டுக்கு வந்து விடுவான். மற்றும் பெற்றோர் ஏதாவது சொன்னாலும் அன்பு வீட்டுக்கு ஓடி விடுவான்.
இது சில சமயங்களில் பெற்றோர்களான அவர்களால் பாலனை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியவில்லை, பாலனது குழப்படிகளை கட்டுப்படுத்த முடியவில்லை என்ற ஏக்கத்தினால் பாலனது தகப்பனார் அன்புவிடம் கதைத்தார்.
" அன்பு தயவு செய்து பாலன் ஏதாவது உங்களிடம் கேட்டாலோ அல்லது கூப்பிட்டாலோ நீங்கள் கருத்தில் எடுக்க வேண்டாம். " என வேண்டிக் கொண்டார்.
இது கண்ணம்மாவுக்குத் தெரியாது. ஆனாலும் அன்புவுக்கு இவ்விடயத்தில் சங்கடமாக இருந்தாலும், பாலன் அவர்களது பிள்ளை என்பதால், பாலனது நன்மை கருதி சில நாட்கள் பாலனைப் பார்ப்பது பேசுவதைத் தவிர்த்தான் அன்பு.
ஆனால் இதனைப் பிழையாக விளங்கிக் கொண்ட கண்ணம்மா, தனது பிள்ளையின் சோர்வுத்தன்மையைக் கண்டு வேதனைப் பட்டு, அன்பு இப்போது பாலனுடன் சேர்ந்து விளையாடுவதில்லை என்று தனக்குள்ளே நினைத்து அவளும் ஒரு சில நாட்கள் அன்புவுடன் கதைப்பதைத் தவிர்த்துக் கொண்டாள்.
பாலனைக் கருத்திலெடுக்க வேண்டாம் என்று தகப்பனார் சொன்னது யாருக்கும் தெரியாது, பாலனுக்கும் தெரியாது. கண்ணம்மாவுக்கும் தெரியாது. இவ்விடயத்தை பாலனின் தகப்பனார் சொன்னார் என்று கண்ணம்மாவுக்குச் சொல்லவும் முடியாது. சொன்னால் குடும்பத்துக்குள்ளே சண்டை வந்துவிடும். அதை விட பாலனுக்கு விளங்கப் படுத்தவும் முடியாது. அவனுக்குப் புரியாத வயது.
ஆனால் அன்பு அனைத்தையும் தன் தலையிலும், மனதிலும் போட்டுக் குழப்பி என்ன செய்வதென்று தெரியாது பித்துப் பிடித்தது போல் நித்திரையின்றி அல்லல்ப்பட்டான் அன்பு.
No comments:
Post a Comment