Sunday, February 24, 2013

ஆபத்தாக மாறிவிடும் அனுதாபங்கள்.



" கண்ணய்யா... நீங்கள் நாளைக்கு அதிகாலை 4 மணிக்கு வேலைக்கு வரவேண்டி இருக்கும். ஏனென்றால் 3000 இடியப்பம் ஓடர் வந்திருக்கிறது. காலை 7.30க்கு அவர்களுக்கு கொடுக்க வேண்டும். "

என்று கண்ணய்யாவுக்கு மறுநாளுக்கான வேலையை சொல்லிக் கொண்டிருந்தாள் கஸ்தூரி.


அது ஒரு பெரிய உணவு உற்பத்திக் கம்பனி. அதில் உடனடி இடியப்பம் தான் அவர்கள் உற்பத்தி செய்யும் உணவுகளில் ஸ்பெஷல். பல உணவகங்கள், திருமண வைபவங்கள், கோவில்கள், மற்றும் என்ன நிகழ்வுகள் எல்லாம் மதிய உணவு நேரம் தவிர்ந்த காலை , மாலை உணவு நேரங்களில் நடக்கின்றனவோ அவையெல்லாம் இவர்களிடம் தான் ஓடர் கொடுக்க வருவார்கள்.


ஒரு மணி நேரத்தில் 1000 இடியப்பங்களைப் பிழிந்து அவித்து விடக் கூடிய மெசினறியைக் கொண்டிருந்தது அந்தக் கம்பனி. இடியப்பத்தைக் கொடுக்கும் போது அதற்குரிய சாம்பார், சட்னியையும் கொடுக்கும் பொறுப்பும் இந்தக் கம்பனியுடையதே.


அதனால் தான் கஸ்தூரி அங்கு வேலை பார்ப்பவர்களுக்கு, மறுநாள் செய்ய வேண்டிய வேலைகளைச் சொல்லிக் கொண்டிருந்தாள்.


கஸ்தூரி அந்த உணவுக்கம்பனியில் முகாமையாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தாள். அவளது திறமையும் வேலையில் இருந்த பற்றும் அவளது முதலாளிக்கு பிடித்து விடவே அவளிடமே அனைத்து வேலைகளையும் ஒப்படைத்து விட்டிருந்தார் முதலாளி.


முதலாளி தனது அலுவலகத்தில் இருந்து கஸ்தூரியை அழைத்து அனைத்து விடயங்களையும் தெரிந்து கொள்வார். முதலாளி எவ்விதத்திலும், சம்பளம் வழங்கும் விடயத்தில் கூட தொழிலாளர்களுடன் தொடர்பை வைத்துக் கொள்ளவில்லை.


இதனால் அனைவரும் அனைத்து வேலைகளுக்கும் கஸ்தூரியையே நாடினார்கள். அதேபோல் கஸ்தூரியும் தன் சொந்த வேலை போன்று ஒவ்வொரு வேலையையும் கவனத்திலெடுத்துச் செய்து கொண்டிருந்தாள்.


கஸ்தூரி ஒரு முகாமையாளராக இருந்த போதும், அவளுடைய வேலை ஓடர்கள் எடுத்து அவற்றை சரியான முறையில் கொடுப்பதே அவளது பிரதான வேலை. ஆனாலும் அவளது வேலை ஆர்வம் மேலும் சில வேலைகளைச் செய்யத் தூண்டியது.


அதாவது தனக்கு நேரம் கிடைக்கும் நேரங்களில் தனது அலுவலகத்திலிருந்து சமையலறைக்குச் சென்று வேலைகளை விரைவாகச் செய்யுமாறு கட்டளையிடுவது... அவர்கள் செய்யும் வேலைகளில் திருத்தங்கள் செய்வது … சொல்வது..... வேலையின்றி இருப்பவர்களுக்கு துப்பரவு செய்யுமாறு வேலைகளைக் கொடுப்பது... போன்று ஏதாவது வேலைகளைச் சொல்லிவிட்டு வருவாள்.


இவை அங்கு வேலை செய்தவர்களில் சிலருக்குப் பிடிக்கவில்லை.


" கஸ்தூரி என்ன முதலாளியோ... அவர் ஏன் எமக்கு வந்து கட்டளையிடுகிறார் ..." என்று ஒருவர் சொல்ல அதற்கு ஆமா போடுவதற்கு சிலர் இருந்தார்கள்.


இவர்களில் கஸ்தூரிக்கு விசுவாசமானவர்களும் இருக்கத் தான் செய்தார்கள். அவர்கள் வந்து கஸ்தூரியிடம் மற்றையோர் கதைக்கும் விடையங்களைப் புட்டுப் புட்டு வைத்தார்கள்.


கஸ்தூரியும் " அவர்களை நான் பார்த்துக் கொள்கிறேன் " என்று சொல்லி அனுப்பி விடுவாள்.


அன்றொரு நாள் இவ்வாறு சமயலறையில், கஸ்தூரி அவர்களுக்கு வேலை சொல்லிக் கொண்டிருந்த போது அவர்களில் ஒருவர்

" ஏன் பிள்ளை.....

நீ ஏன் எங்களுக்கு வேலை சொல்கிறாய்...?

நீ என்ன முதலாளியோ...?

நீயும் எங்களை மாதிரித் தானே இங்கு வேலை செய்கின்றாய்...?

நீ வெள்ளுடுப்புப் போட்டு ஒபிசில வேலை செய்கிறாய்.. நாங்கள் வெள்ளுடுப்புப் போட்டு கிச்சினில வேலை செய்கிறோம். ....

மற்றும்படி நாங்கள் எல்லாம் ஒரே தொழிலாளிகள் தானே...."

என்று நேரடியாகவே சொல்லி விட்டார் சின்ராசு.


இதனால் ஆத்திரமடைந்த கஸ்தூரி அழுது கொண்டு போய் முதலாளியிடம் நடந்த அனைத்தையும் சொல்லி விட்டாள்.


உடனடியாக சமயலறைக்கு வந்த முதலாளி, அந்தத் தொழிலாளர்கள் அனைவருக்கும் வாய்க்கு வந்தபடி திட்டி விட்டார். அத்தோடு

"கஸ்தூரி என்ன சொல்கிறாளோ அதைச் செய்யுங்கோ.... நான் சொன்ன வேலைகளைத் தான் கஸ்தூரி உங்களுக்குச் செய்யச் சொல்கிறாள்... அப்படி உங்களுக்குச் செய்ய விருப்பமில்லையெனில் நீங்கள் இந்த வேலையை விட்டுவிட்டுப் போகலாம்..." என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.


அன்று வீட்டுக்கு வந்த கஸ்தூரி, வழமை போன்று இல்லாது படபடப்பாக இருந்தாள். கணவன் கார்த்திகேயன் வேலைக்குச் சென்று அப்போது தான் திரும்பியிருந்தான்.


கஸ்தூரி படபடப்பாக இருப்பதைக் கண்டு கம்பனியில் ஏதோ நடந்திருக்கிறது என்று தனக்குள்ளே நினைத்துக் கொண்டு, அதனை வெளிக்காட்டாமல் அவளுடன் பரிவாகப் பேசினான்.


" அம்மாடி மதியம் சாப்பிட்டீங்களா....?

என்ன சாப்பிட்டீங்கள்....?"

என்று கேட்டாள் கார்த்திகேயன்.


அதற்கு அவளும் ஒப்புக்குப் பதிலளித்துக் கொண்டிருந்தாள். அவளது பதிலில் விரக்தி இருப்பதைக் கார்த்திகேயன் கவனிக்கத் தவறவில்லை.


அதனால் கார்த்திகேயனும் கம்பனிகள் தொடர்பற்ற பலவிதமான கதைகளைக் கதைத்துக் கொண்டு இருந்தான். அவற்குக்கெல்லாம் அவள் ஏதும் பதில்கள் சொல்லாது " ம் " மட்டும் கொட்டிக் கொண்டு இருந்தாள்.


பின்னர் "கம்பனி வேலைகள் எல்லாம் எப்படி போகிறது ...?" என்று ஒரு கேள்வி தான் கேட்டான் கார்த்திகேயன். அவனது கேள்வியைக் கேட்டதும், கம்பனியில் நடந்த வற்றைச் சொல்லத் தொடங்கினாள் கஸ்தூரி.


" நீயும் என்னை மாதிரி ஒரு வேலைக்காரி தானே என்று சின்ராசு சொல்லிவிட்டார்" என்று கம்பனியில் நடந்த அனைத்தையும் ஒன்றும் விடாது கணவனிடம் ஒப்புவித்து விக்கி விக்கி அழுதாள்.


இதனால் பெரிதும் கவலையடைந்த கார்த்திகேயன், அவளது தலையைத் தடவி ஆறுதல் சொன்னான். அத்தோடு சில கேள்விகளையும் அவளிடம் கேட்டான்.


"முதலாளி சொன்னது போல் ஏன் நீங்கள் வேண்டாதவர்களை வேலையில் இருந்து நீக்கிவிடக் கூடாது...?”
என்றான் கார்த்திகேயன்.


" அவர்கள் எங்களிடம் கடன் வாங்கியிருக்கிறார்கள். அவர்களை வேலையிலிருந்து நிறுத்திவிட்டால் அக்கடனை யார் அடைப்பார்கள்....?"

என்றாள் கஸ்தூரி


"நீங்கள் அவர்களை வைத்துக் கொண்டு கஸ்ரப்படுவதை விட அவர்களை நிறுத்திவிட்டு வேறு ஆட்களைச் சேர்த்துக் கொள்ளலாம். அத்தோடு அவர்களிடம் இருந்து கடனைப் பெற்றுக்கொள்ளலாம் இதற்கு நூறு வழிகள் இருக்கின்றன..." என்று கூறிய கார்த்திகேயன்,


"நீங்கள் தலைமைத்துவப் பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டும். …..

அதாவது வேலைகளைப் பகிர்ந்து கொடுத்து வேலைகளைச் செய்யச் சொல்ல வேண்டும். …...

அவர்களை எந்நேரமும் வேலைகளைச் செய் என்று சொல்லிக்கொண்டிருக்கக் கூடாது. …..

அப்போது தான் நீங்கள் ஒரு பிஷ்னசில் ஜெயிக்க முடியும் ......"

என்று சில அறிவுரைகளையும் கூறினான்.


இது அவளுக்குப் பிடிக்கவேயில்லை.


பெண்களுக்கான உளவியலின் படி, பெண்கள் தமது பிரச்சனைகளை ஒருவருடன் பகிர்ந்து கொள்ளும் போது அவற்றை ஆழமாகக் கேட்டு அவற்றுக்கு ஆறுதல் வார்த்தைகள் கூற வேண்டுமே தவிர தீர்வுகள் கூற வேண்டிய அவசியமில்லை.


மற்றவர்களால் கூறப்படும் ஆறுதல் வார்த்தைகள் அவளது துன்பங்களினால் ஏற்பட்ட வலிகளுக்கு ஒத்தடங்களாக இருக்க வேண்டுமே தவிர கட்டளைகளாக இருக்கக் கூடாது என்பது தான்.


ஆனால் கார்த்திகேயன் தன் மனைவி மீது இருந்த அதீத அன்பினாலும், அக்கறையினாலும், கஸ்தூரிக்குக் கூறிய அறிவுரைகள்; கட்டளைகளாக; வெந்த புண்ணின் மேல் வேல் பாய்ச்சுவதாகவே இருந்தது.


இன்றைய நவீன காலத்திலே ஆண்கள் மட்டுமே வேலை செய்து ஒரு குடும்பத்தை வாழ வைக்க முடியாத நிலையில் பெண்களும் வேலை செய்தே ஒரு குடும்பத்தின் அன்றாட, அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு இந்த நவீன யுகம் அனைவரையும் தள்ளி விட்டுள்ளது.


வேலைக்குப் போகும் பெண்கள், தாம் வேலை செய்யும் இடங்களில் முகம் கொடுக்கும் பிரச்சனைகள் ஆயிரம் . தமது கணவரிடமே அவற்றைப் பகிர்ந்து தமது வலிகளுக்கு தீர்வு காண முயற்சி செய்கின்றனர்.


கணவர் மார்களும், மற்றவர்கள் போன்றே பிரச்சனைகளுக்கு ஆறுதல் சொல்வதை விடுத்து அவர்கள் மீதுள்ள அக்கறையால் அறிவுரைகளைக் கூற முற்படும் போது அங்கும் சில பிரச்சனைகள் வந்து விடுகின்றன.


அதனால் அவளது துன்ப வடுக்களை இறக்கி வைக்கக் கூடிய ஒரு இடம் கிடைக்கும் வரை அவள் தடுமாறிக் கொண்டே இருப்பாள். இவை போன்ற சில சிறிய காரணங்கள் பெரிதாகி எத்தனையோ குடும்பங்கள் பிரிந்து சின்னாபின்னமாகி இருக்கின்றன.


ஆகவே பெண்களது விருப்பு வெறுப்புக்களை புரிந்து அவர்களது வெளியில் தெரியாத துன்பக் காயங்களுக்கு ஒத்தடங்களாக இருந்து, கணவன் மனைவியினிடையே சரியான புரிந்துணர்வைக் கொண்டு வாழ முயற்சி செய்ய வேண்டும்.


எப்போதும் மனைவி மேல் உள்ள அக்கறையினாலும் அன்பினாலும், தாம் தமது மனைவிக்கு ஆதரவாக இருப்பதாக் கருதி வீணான எதிர்ப்பையே சம்பாதித்து விடுகின்றனர்.


ஆண்கள் அனைவரும் பெண்களுக்கான உளவியலைப் புரிந்து கொண்டு செயற்பட்டால் அவர்களது குடும்ப வாழ்கை சிறப்பாக அமையும் என்பதில் எந்த விதமான ஐயமுமில்லை

Print this post

No comments: