Tuesday, January 29, 2013

அவர்கள் பயங்கரமானவர்கள்



அது ஒரு அகதிகள் தடுப்பு முகாம். அங்கு குழந்தைகள், குடும்பங்கள்,

தனிநபர்-ஆண்கள், பெண்கள் என பல நாடுகளில் இரந்து வந்தவர்களும்

தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.


சில நாடுகளைச் சேர்ந்தவர்கள், அங்கு வருவார்கள் . அவர்களுக்கு

அனைவரையும் போன்று குடிவரவுத் துறையால் வழங்கப்படும் சேவைகள்

அனைத்தும் வழங்கப்படும். அதாவது அவர்களை உண்மையான அகதிகளா

என்பதை சட்ட ரீதியாக உறுதி செய்வதற்காக சட்ட ஆலோசகர் சேவை

இலவசமாக வழங்கப்படும்.


குடிவரவுத் துறையினரது விசாரணைகள் நடைபெற்று ஒரு சில

மாதங்களில் அந்த நாட்டில் வசிப்பதற்கான நிரந்தர வதிவிட

உரிமைக்கான விசாவோ அல்லது தற்காலிகமாக தங்குவதற்கான

விசாவோ பெற்று தடுப்பு முகாம்களில் இருந்து வெளியில் சென்று

விடுவார்கள்.


ஆனால் இலங்கைத் தமிழர்களுக்குரிய விசா வழங்கும் காலம் நீண்டதாக

இருக்கும். அவர்கள் பலவகையான நேர்முக விசாரணைகளுக்கு முகம்

கொடுக்க வேண்டியிருக்கும். அனைத்து அகதிகளுக்கும் உள்ள நேர்முக

விசாரணைகளை விட அந்நாட்டின் புலனாய்வுத்துறையினருடைய

விசாரணைகள் இவர்களுக்கு நடைபெறும்.


இது இலங்கையில் நடந்த சுதந்திரப் போரின் திடீர் முடிவும் இலங்கை

அரசாங்கத்தினது பொய்ப்பரப்புரையும் பெரும் தாக்கத்தைச்

செலுத்தியிருந்தன. சில தமிழர்களின் வாக்குமூலங்கள் அவர்கள் அங்கு

இலங்கை இராணுவத்தினால் பட்ட அவலங்களை வெளிப்படுத்தியிருந்தன.


இவற்றை புலனாய்வுத்துறையினருக்கேயுரிய சந்தேகக் கண்களுக்கு

அவையெல்லாம் பெரும் தகவலாகவும், விஞ்ஞானி ஒருவரின் புதிய

கண்டுபிடிப்புப் போன்று பெருமையாகவும் நினைத்து அவர்கள் மீது

அபாண்டமான பெருங் குற்றங்களைச் சுமத்தி 3 வருடங்களின் மேல்

தமிழ்க் குழந்தைகள் முதற்கொண்டு தடுத்து வைத்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் சட்டரீதியாக அகதிகளாக அங்கீகரிக்கப்பட்டு

இருந்தும் கூட, ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் சாசனத்

திற்கு முரணாக, நீண்ட காலமாக காலவரையறையின்றி தடுத்து

வைக்கப்பட்டுள்ளனர்.


இத்தடுப்பு முகாம்களுக்கு சில மனிதநல ஆர்வலர்கள் வழமையாக

கிழமையில் ஒருதடவை சென்று அனைத்து அகதிகளையும் பார்த்து நலம்

விசாரித்து விட்டுச் செல்வார்கள்.


சில தடவைகளில் அங்கு புதிய முகங்கள் இருப்பதைக் காண்பார்கள். சில

மாதங்களில் அவர்கள் அங்கிருந்து வெளியேறி விடுவார்கள்.

சிலர் அங்கு வருவதும் சில மாதங்களில் வெளியேறி விடுவதும், ஆனால்

தமிழர்கள் மட்டும் தொடர்ச்சியாகவே தடுப்பில் இருப்பதும் அவர்களுக்கு

ஆச்சரியத்தையும் பெரிய கேள்விக் குறியையும் அவர்களின் மனதில்

ஏற்படுத்தியது.


இவ்வாறே 3 வருடங்களுக்கு மேலாக வருகை தந்து செல்பவர்கள்

ஒருநாள் அங்கிருந்த அலுவலகர் ஒருவரிடம்

" ஏன் இலங்கைத் தமிழர்கள் நீண்ட காலமாக தடுப்பில்

வைக்கப்பட்டுள்ளார்கள்...? "

என்று கேட்டார்


அதற்கு அவர்

" அவர்கள் பயங்கரமானவர்கள்... அதற்காகத் தான் அவர்கள் தடுப்பில்

வைக்கப்பட்டுள்ளார்கள். கவனமாகப் பழகுங்கள்...."

என்று சொல்லி விட்டார்.


அதன் பின்னர் அவர்கள் தமிழ் அகதிகளுடன் பழகுவதைக் குறைத்துக்

கொண்டதோடு மட்டுமன்றி, அவர்களுக்குத் தெரிந்த வழமையாக பார்க்க

செல்வோருக்கும்  சொல்லி அவர்களும் தமிழர்களுடன் பழகுவதைக்

குறைத்துக் கொண்டார்கள்.


ஆனால் தொடர்ச்சியாக வருகை தந்து பார்த்து விட்டுச் செல்லும் சிலர்

மட்டும், தடுப்பில் உள்ள தமிழ் அகதிகள் அப்பாவிகள் என்பதனை

உறுதியாக நம்பி தொடர்ந்தும் சென்று பார்த்துவிட்டுச் செல்கின்றனர்.


ஆனால் உண்மையில் அந்தத் தமிழர்கள் அப்பாவிகள். அரசியல்

காரணங்களுக்காக எந்தவிதமான மனிதாபிமானங்களுமின்றி 2

குழந்தைகளுடன் 6 மாதக் கர்ப்பிணித்தாய் கணவரிடமிருந்து பிரித்து

தடுத்து வைக்கப்பட்டுள்ளார.


ஒரு குழந்தை தடுப்பு முகாமிலேயே பிறந்து 2 வயது முடிந்த நிலையில்

பெற்றோருடன் 7 வயதில் சகோதரி, 5 வயதில் சகோதரனுடன் தடுத்து

வைக்கப்பட்டுள்ளார்.


6 வயதில் ஒரு குழந்தையுடன் ஒரு விதவைத்தாய் தடுத்து

வைக்கப்பட்டுள்ளார்.


மற்றும் சிலர், அவர்களது குடும்பங்கள் இலங்கையில் இருக்க கணவன்,

மகள், மகன் என்ற வேறுபட்ட உறவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் குழந்தைகளும், கர்ப்பிணித்தாயும், விதவையும் தான் அந்த

நாட்டுக்குப் பயங்கரமானவர்களா...?

அழுத்தம் எங்கே உள்ளதோ - அங்கே

புரட்சி வெடிக்கும்.

Print this post

No comments: