Friday, April 23, 2010

தினசரி செயலில் காட்டிவிடு.

காலையில் ஐந்துக்கு எழுந்துவிடு
மாலையில் பத்துக்கு படுத்துவிடு
மலத்தை தவறாது கழித்துவிடு
பல்லை தவிர்க்காது துலக்கிவிடு
தினமும் காலையில் குளித்துவிடு
அலம்பிய துணியை அணிந்துவிடு

உற்சாகமாய் நீயும் வாழ்வதற்கு
உடற்பயிற்சி தினமும் செய்துவிடு
உணவினை நேரம் தவறாது
உண்டு தண்ணீரும் குடித்துவிடு
உண்ட உடனே படுத்துவிடாமல்
கொஞ்சத் தூரம் நடந்துவிடு

பெற்றோருக்கு மதிப்பு கொடுத்துவிடு
அவரிடம் ஆசிகள் பெற்றுவிடு
கண்முன் நிற்கும் தெய்வமவர்
கடவுளாய் அவரை வணங்கிவிடு
பற்றின்மேல் பற்று வைத்தும்மை
பக்தராய்ப் போற்றி காத்திடுவர்.

மனங்களில் இலக்கை நினைத்துக்கொண்டு
வணங்கிடு உந்தன் கடவுள்தனை
நினைத்தது கைகூட வேண்டுமென்று
நித்தமும் வணங்கி துதித்துவிடு
நல்லதே எண்ணங்கள் வளர்த்துவிடு
கெட்டதை அடியோடு அழித்துவிடு

மற்றவர்க்கு மதிப்பு கொடுத்துவிடு
உற்றவரை உயர்வாய் மதித்துவிடு
மனைவியை சமமாய் நடாத்திவிடு
வாழ்க்கையை சரியாய் புரிந்துவிடு
அவரவர்க்கு அவருரிமை கொடுத்துவிடு
அடுத்தவரைப் பார்த்துநீ திருந்திவிடு

அளவோடு பணச்செலவு செய்துவிடு
அயராது வேண்டியளவு உழைத்துவிடு
வீட்டிலே சிறுதோட்டம் செய்துவிடு
விளைந்ததைக் கொண்டுநீ சமைத்துக்கொடு
எப்படிச் செய்வதென்று சொல்லிக்கொடு - உன்
பிள்ளைகள் தொடர்ந்து செய்வதற்கு

அடக்கமாய் நீயும் நடந்துவிடு
ஆனந்தமாய் என்றும் இருந்துவிடு
துக்கத்தைக் கண்டு துவளாது
நல்லதற்கு என்றே நினைத்துவிடு
அதற்கான பிழையை அறிந்துவிடு
அடுத்தமுறை அதைநீ திருத்திவிடு

நல்லதாய் வார்த்தைகள் பேசிவிடு
மற்றையோர் மனங்குளிர நடந்துவிடு
கற்றவரக ளோடுநீ சேர்ந்துவிடு
மற்றதெல்லாம் படிக்காமல் வந்துவிடும்
பற்றவை உன்மனதில் இலட்சியத்தை - அது
கொற்றமாய் வீற்றிருக்கும் உன்வாழ்வில்.

Wednesday, April 21, 2010

சமவுரிமை

சமவுரிமை
----------

சாதி மத பேதமின்றி

ஏற்றத் தாழ்வு இன்றி

சிறிது பெரிது இன்றி

ஆண் பெண் வேறுபாடின்றி

அனைவருக்கும் சமவுரிமை
சுடலையில்.


பிறப்பும் இறப்பும்
----------------

அனைத்தையும் அனுபவிக்க பிறப்பது ஒரு முறை

அவற்றையெல்லாம் பொய்யாக்க இறப்பது ஒரு முறை

இயற்கையின் நியதி
------------------

மானம் கற்பு போனால் வராது

மரணம் கழிபெயர் வந்தால் போகாது.

Tuesday, April 20, 2010

விண்ணை முட்டிய எங்கள் துயர்

ஆனைமுகம் கொண்ட ஆண்டவனே கணேசா
சேனைவந்து கொன்றபோது பார்த்தவனே குணேசா
பானையிலே சோறுதந்து காத்தவனே கணேசா
வானைப்பிழந்து குண்டுபோட்டும் மீட்கவில்லை குணேசா.

வாய்ததிறந்த போதினிலே அப்பனே என்றோம்
வாய்திறக்க வில்லையே எப்பவும் நீயும்?
பாய்விரித்து நிம்மதியாய் படுக்கவும் முடியலை
பாய்ந்துவந்து எம்மடியில் விழுகிறது எறிகணை.

கொழுக்கட்டை மோதகம் அவித்துமக்குப் படைத்தோம்
வெளுக்கட்டும் எம்மவர் தீவினைகள் என்று
களுக்கென்று சிரித்து கனைத்துவிட்டு இருந்தாயோ?
அழுக்கென்று எம்மையவர் அலைத்துவிட்டார் பார்த்தாயோ?

உன்னை நாங்கள்நம்பி ஊரினிலே இருந்தோம்
பண்ணை எங்கள்வயலினிலே மகிழ்ச்சியாக கிடந்தோம்.
விண்ணைமுட்டும் எங்கள்துயர் கேட்குமென்று நினைத்தோம்.
மண்ணைமுட்ட வைத்துவிட்டான் என்றுமவன் எதிரி.

விழுந்தவர் மேலெழுந்து வருவாரோ சொல்வேழா
அழிந்தவர் தொகையெழுந்து குவிகிறது ஆல்போல
தொழுதவர் அனைவரையும் அழுத்திவிட்டாய் கணேசா
வழுதவர் செய்ததையும் மழுப்பிவிட்டாய் குணேசா.

வீண்வேலை இவர்களுக்கு என்றுநீ நினைத்தாயோ?
ஆண்காளை அவர்களைநீ அலையவிட்டுக் கனைத்தாயோ?
கணதெய்யோ என்றுஅவர் கையெடுத்துக் கும்பிட்டதும்
கண்தெரியாது போச்சோ உம் கருவறைப் பாவியரை?

நியும் கைவிரித்து ஒதுக்கிவிட்டுப் போனால்
நீரும் எமைவிட்டு ஒதுங்கித்தான் போகும்
பாரும் எம்மவரை கைவிடடுப் போச்சு _ தினம்
தோறும் எம்மவர் படுகின்றார் பாடாய்.

உன்கதை எழுதுவதற்கு உன்தந்தம் முறித்தாய்
எம்கதை எழுதுவதற்கு எதைநீ முறிப்பாய்?
உன்காலில் விழுந்துநாம் வணங்கினோம் களித்து
ஊனர்கள் நாமென்று விட்டுவிட்டாய் கழித்து.

கொழுத்தி எரிக்கிறார் அவர்நெஞ்சினுள்ளே தீயை
வளர்த்து விடுகிறார் தம்பிஞ்சினுள்ளே வினையை _ எம்
கழுத்தினிலே வைக்கிறார் அவர்கையிலிருந்த வாளை
தழுவுதற்கு மரணத்தை சாகும்வரை ஆளை.

விநாயகனே வினையை வேரறுக்க வல்லான்
என்றுஒரு கவிஞனவன் பாரிறுக்கச் சொன்னான்.
உண்டுஅதில் உண்மையென்று தேரிழுத்து வாறோம்.
கண்டுவிடுஎம் அனைவரையும் ஊரிழந்து போறோம்.

பிஞ்சிழந்து காயிழந்து பழமிழந்து போறோம்
வஞ்சியிழந்து ப+விழந்து பொட்டிழந்து போனோம்
மிஞ்சியிருக்கும் மொட்டைக்காக்க கடல்கடந்து போறோம்
தஞ்சமடைந்து ஆசியிலேஎம் உயிரைக்காக்க நாமும்.

கட்டிலிலே படுக்கவைத்து பார்க்கிறார்கள் எம்மை
தட்டினிலே சோறுபோட்டு காக்கிறார்கள் நம்மை
வீட்டினிலே சேர்க்கும்வரை காத்துவிடு ஐயா _ உயிர்
கூட்டினிலே இருக்கும்வரை நினைத்திருப்போம் உம்மை.

Monday, April 19, 2010

வஞ்சியவள் எனக்காக




சனத்திரளின் மத்தியிலே ஏற்றிவைத்த ஒளிபோலே

உனைஎந்தன் புத்தியிலே உறைக்கவைத்து சித்திரமாய்

வரைந்தது முழுநிலவாய் என்வாழ்வின் அனைத்துநாள்

இரவெல்லாம் பகலாக்க எனக்காக உனைப்படைத்து


குதிரையின் வால்போல பின்முட்டிவரை உன்கூந்தல்.

பயிரிட்டு வளர்த்ததுபோல் அதில்மல்லிகைப் பூப்பந்தல்.

அதைப்பார்த்து எனக்குன்மேல் விதவிதமாய் ஒருஉந்தல்

இதயமெல்லாம் ஆகிப்போச்சு ஒருநொடியில் பலகந்தல்.


அம்புபூட்டிய வில்லைப்போல வளைந்தநிற்கும் புருவங்கள்.

மீன்தரையில் துடிப்பதுபோல அடித்துக்கொள்ளும் கண்கள்.

அதைஒளித்து ஒளித்துஎம்மை தேடவைக்கும் இமைகள்.

இமையுள்ளே ஒளிந்துநின்று எட்டிப்பார்க்கும் மணிகள்.


பிடித்துவைத்த பிள்ளையார்போல அதனிடத்தில் மூக்கு

அதற்கழகின் அழகுசேர்க்க வைரத்திலொரு ஊக்கு

கடித்துவிடத் தோன்றுமவள் கொவ்வைப்பழ உதடு

கடைந்தெடுத்த வைரம்போல ஜொலிக்குமவள் பற்கள்.


பாய்ந்துசெல்லும் ஆறுபோல அவள்தலையில் நேருச்சி

வந்துசேரும் கடல்போல பரந்திருந்த பெருநெற்றி.

நெற்றிக்கண் இருப்பிடத்தில் சின்னதாக ஒருபொட்டு

ஒற்றைமணித் தோடுபோட்டு வளைந்திருந்த இருகாது


பஞ்சுமிட்டாய் கலரினிலே அவளுடைய கன்னம்

பஞ்சுபஞ்சாய் ஆக்கிவிடும் எம்மையது திண்ணம்.

கொஞ்சுஅவளை என்றுசொல்லி எம்மனது உன்னும்.

மிஞ்சிவிட்டால் அவள்கையால் எம்கன்னம் மின்னும்


பிரம்மனவன் படைத்துவிட்டான் அழகின் சிகரத்தில்

எண்ணத்திலும் அவளைவைத்தான் வானத்தின் உயரத்தில்

அச்சம்மடம் நாணத்துடன் அவளிருந்தாள் பயிர்ப்பில்

காரிருளில் உள்ளஒரு ஒளிவிளக்கின் வடிவில்


வஞ்சியவளை எனக்காகப் படைத்துவிட்ட முருகா

பஞ்சியின்றி தூதுசென்று என்சுகம்சொல் இறைவா

நெஞ்சினிலே கவலையின்றி காத்திருக்கச்சொல் அவளை

வஞ்சமின்றி உணவுண்டு மகிழ்ந்திருக்கச்சொல் தலைவா.


மன்னித்திடு இறைவா தூதுசெல்லச் சொன்னதற்கு

கன்னியவள் எனைநினைத்து தூக்கமின்றி இருப்பவளை

புண்ணியவான் நீதானே படைத்தவரைக் காக்கவேண்டும்.

அந்நியனாய் நில்லாது சேர்ந்துநின்று காத்திடுவாய்.


எம்மைநீ பிரித்துவைத்து வேடிக்கை பார்க்காமல்

வாழ்க்கையை கரிக்கவைத்து வாடிக்கை ஆக்காமல்

சேர்த்துவிடு இருவரையும் சிறப்பிடத்தில் ஒன்றாக

பார்த்து விடு எங்களையும் பக்குவமாய் சேயாக.

Thursday, April 15, 2010

நா காக்க....!

சிறிது காலம் பழகினாலும் நிறைய நாட்கள்
பழகியது போன்ற புரிந்துணர்வைக் கொண்டிருந்தார்கள்
கவிதாவும் பிரியாவும்.

சாப்பிடுவதற்காக உணவகத்திற்கோ அல்லது
பொருட்கள் வாங்குவதற்காக கடைக்கோ விழையாடுவதற்கோ
எங்கு சென்றாலும் இருவரும் சேர்ந்தே போவார்கள் வருவார்கள்.

எங்காவது ஓரிடத்தில் இருவரில் யாராவது ஒருவரைப்பார்த்தால்
மற்றவரும் அங்கிருப்பார் என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளலாம்.
அந்தளவுக்கு ஆழமான நட்பாக இருந்தார்கள்.

அதைவிட இருவரும் என்ன இரட்டையர்களா என்று சக
நண்பர்களால் கேலி செய்யுமளவிற்கு அவர்களது நட்பு
இருந்தது.

இருவருடைய எண்ணங்களும் செய்கைகளும் தமது துன்பங்களை
பகிர்ந்த போது கிடைத்த ஆறுதல்களும் அவர்களை இரட்டையர்
களாக்கியதென்றால் அதில் எந்த விதமான மாற்றுக்கருத்துக்களும்
இருக்காது.

இந்தக் காலப்பகுதியில் தான் சோபிதாவின் நட்பு பிரியாவுக்கு
கிடைக்கிறது. பிரியாவுக்கு கிடைத்தால் அது கவிதாவுக்கும்
கிடைத்தது போன்றது தானே. இருவருக்கும் நண்பியாகிறாள்
சோபிதா.

கவிதா பிரியா நட்பு சோபிதாவுக்கு எரிச்சலூட்டியது. தனது
சந்தேகங்கள் எல்லாவற்றுக்கும் கவிதாவுடன் கலந்தாலோசித்து
பிரியா பதில் சொன்னது சோபிதாவுக்கு பிடிக்கவேயில்லை.
அதனால் இருவரையும் பிரிக்க சதித்திட்டம் தீட்டினாள்.

பிரியா கவிதா இருவரில் ஒருவர் இல்லாத சந்தர்ப்பங்களில்
மற்றவரைப்பற்றி குறை கூறி அவர்களிருவருக்குமிடையில்
வெறுப்புணர்ச்சியை ஏற்படுத்த கிடைக்கும் சந்தர்ப்பங்களை
எல்லாம் பயன்படுத்தினாள்.

இப்படி இல்லாத பொல்லாத் கதைகளையெல்லாம் ஒருவரைப்
பற்றி ஒருவரிடம் சொல்லி இருவருக்கும் சகுனியாக இருந்தாள்
சோபிதா.

சகுனியின் சதிக்கதைகளால் பிரியாவும் கவிதாவும் ஒருவரை
ஒருவர் சந்திக்கும் சந்தர்ப்பங்களை இயன்றவரை தவிர்த்து;க
கொண்டார்கள். எதிர்பாராத சந்திப்புக்களில் ஏனோ தானோ
என்று நலம் விசாரித்து நழுவினார்கள்.

ஒருநாள் பிரியாவும் சோபிதாவும் சதுரங்கம் விளையாடிக்
கொண்டிருந்தார்கள். இவ்விடத்தில் சோபிதாவிற்கு காய்களை
நகர்த்தும் ஐடியாக்களை சொல்லிக கொடுத்துக கொண்டிருந்தாள்
கவிதா.

இதனால் பிரியாவுக்கு தோல்விநிலையைக் காட்டிக்கொண்டு
இருந்தது. அத்துடன் அவளது ராணியை வெட்டும் சந்தர்ப்பம்
சோபிதாவுக்கு கிடைத்து வெட்டி விட்டாள்.

தனது ராணி வெட்டுப்பட்டதும் பிரியாவுக்கு கோபம் தலைக்கு
ஏறியது. கவிதாவுக்கு தாறுமாறாக என்ன பேசுகிறோம் எனறு
யோசிக்காமலே திட்டி விட்டாள்.

இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்த எண்ணிய சோபிதா
"உனது நண்பி இப்படி உன்னைத் திட்டி விட்டாளே" என்று
சொல்லி எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றினாள்
கவிதாவுக்கு.

Wednesday, April 14, 2010

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அன்பானவர்களுக்கு
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
எம் இனிய உறவுகளே இன்றைய நன்னாளிலே
நல்ல சிந்தனைகளை வளர்த்து, மற்றவர்களின் நல்வாழ்வுக்காகவும்
எமது நல்வாழ்வுக்காகவும் இறைவனைப் பிரார்த்திப்போம்.
இன்றைய நன்னாளிலே தீய வழிகளுக்கு செல்ல மாட்டோம் என்று உறுதியெடுத்து
எமது புதிய வாழ்க்கைப்பாதையில் காலடி வைத்து வீறு நடை போடுவோம்.
மீண்டும் ஒருமுறை புத்தாண்டு வாழ்த்துக்கூறி விடைபெறுகின்றேன்.
என்றும் அன்புடன்
உங்கள்
சிவநாதன்.