Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

Tuesday, May 17, 2016

முள்ளிவாய்க்கால்



முள்ளிவாய்க்கால் 
முரண்டு பிடித்து சிங்களவன்
முழு உலகையும் திரட்டி வந்து 
கொத்து கொத்தாய் குண்டு போட்டு 
சின்னஞ் சிறிசு முதல்
பென்னம் பெரிசு வரை
உடல் குதறி
அங்கம் பிளந்து 
கொலை
படுகொலை செய்தான் 
எம் தமிழினத்தை...! 

எக்காளமிட்டு
கொக்கட்டமடித்து
பக்கத்து நாட்டை காக்கா பிடித்து
வக்கணையாக பக்கச் செய்திகளை 
சக்கையாக கசக்கி எறிந்து
மக்களின் கண்களுக்கு மண் தூவி விட்டு
வெட்கமின்றி வெற்றிக் கூத்தாடுகின்றார்
உயிரற்ற எம் உறவுகளின் குவியல்களின் மேல்
தூ......

தெரியவில்லை அவனுக்கு 
வெற்றி பெற்றது தமிழன் என்று...

உயிர் துறந்த ஒவ்வொரு தமிழனும் 
பயிர் அறுத்த விதை நெல்லாய்
காலம் பார்த்து காத்திருக்கின்றனர்
விதை முளைத்து
எம் வீரம் பரப்பி 
தமிழர் 
துயர் துடைப்பர் அவர். 

அதுவரை 
எம் நெஞ்சகலா உறவுகளே
நிம்மதியாய் உறங்குங்கள்
தமிழீழம் பிறக்கும்
தமிழர் கொடி பறக்கும்
எம் தமிழ் தேசத்தில்....!!

Tuesday, December 22, 2015

கோடி உனக்கு வணக்கங்கள்


காலை வேளை எழுந்து வந்து, உனை நான் பார்க்கின்றேன்
சிறிய புன் சிரிப்புடனே, எனையாளும் ஈஸ்வரியே
கறுகறுத்த கண்மணியால், எனையாட்டும் சங்கரியே
கோடி கோடி வணக்கங்கள்.... கோடி உனக்கு முத்தங்கள்.....

நீலச் சேலை தனையுடுத்து..., சிங்காரமாய் சிகை அமைத்து...,
கை நிறைய வளையலிட்டு..., காது கனக்க கடுக்கன் தூக்கி...,
நெற்றி நடுவில் பொட்டு வைத்து..., கண்களை உற்று உருட்டிப்பார்த்து...,
சிலையாட்டம் நின்றுகொண்டு.., சுண்டியிழுத்துக் கொல்கின்றாய்.

உன் வதனம் பார்க்கையிலே.., ஒருகோடி ஆனந்தம்..,
ஊற்றுப் போலே பொங்குகிறது... இதயம் துள்ளிக் குதிக்கிறது...
மயிர்க்கூச்சிட்டு நிற்கிறது... மனதில் ஆர்வம் பொங்குகிறது...
பெரும் பேறு பெற்றேன் என்று, பெருமை கொள்ள வைக்கிறது.

நீலச்சாரி அம்மா என்று.. உனை ஆசையுடன் அழைக்கையிலே..,
சாலச்சிரிப்பை உதட்டிலிட்டு.. தென்றலாய் எனைத் தழுவுகின்றாய்.
வேலவனின் அழைப்புடனே, உனையணைத்துக் கொள்கின்றேன்.
பலகோடி ஆண்டுகள் உன்னுடன் பதினாறும் பெற்று வாழ்ந்திட..!

Wednesday, December 16, 2015

என்னை ஆட்சி செய்


என்னவளே
உன் முகம் பார்த்து
உன் கண்கள் பார்த்து
உன்னை என்னுள் இருத்தி
உறுதி எடுத்துக் கொள்கின்றேன்
என் தேவதையாக
என்றுமே நிரந்தரமாக....!

என்றும் என்  இனியவளே
உன் கண்மணியாடும் திசையில்
நான் ஆடுவேன்
குண்டூலம் போல்
என் இதயத்தின் துடிப்பாகி
என்னை ஆட்சி செய்...!

என் உடலோடு  உடலுரசி
உடம்பெல்லாம் சூடேத்தி
மெய்மறந்து என்னை
இறுக்கி அணைத்து
இம்சை செய்.....!

புன்னகையை முகத்திலிருத்தி
பூரண மலர்ச்சியுடன் - எம்
பெயர் சொல்ல உலகுக்கு
முத்தொன்று கொடுத்திடு
என்றுமே அவன் முதல்வனாக....!

மூன்றெழுத்து மந்திரம்


அம்மா என்ற
மூன்றெழுத்து மந்திரத்தை
மூச்சு முழுக்க சொன்னால்
முழுமையாக அகலும்
மூண்டிருக்கும் துன்பங்கள்.
உன்னைச்சுற்றிச் சுழலும் - நீ
ஏங்கியிருக்கும் இன்பங்கள்.

அம்மாவின் ஆசி –அவள்
அன்புள்ளோர்க்கு இருந்தால்
அகிலத்தையே தூக்கி நிறுத்தும்
வல்லமை பெற்றிருப்பாய்.

ஆண்டவன் யாரென்று
யாருமே பார்த்ததில்லை
தெரியாத ஒன்றை
தெய்வமே என்கின்றனர்.

எமைப்படைத்த ஈஷ்வரி
அம்மா உடனிருக்க
சும்மா சுழல்கின்றார்
வணக்கமே செய்யாமல்.

அம்மாவை வணங்கிட்டால்
அனைத்துமே பெறுவாய்
அவளையே தொழுதெழுதால்
அனைவர் ஆசியும் பெறுவாய்.

Saturday, December 5, 2015

அதன் பெயர் தான் அன்பு

 

கண்களால் கதை சொல்லும் கயல்விழி அழகியே,
கனவோடு நீ சொல்லும் பெருங்கதைதான் என்ன...? - என்
செவிகளுக்கு எட்டவில்லை, கடல் கடந்திருக்கும் எனக்கு..!

தலையணையைக் கட்டியணைத்து, கதை பேசும் கிளியே,
என்ன தான் பேசுவாய், எப்போதும் அதனுடனே....?
முயற்சி செய்தும் முடியவில்லை, நானுமதைக் கேட்பதற்கு…!

உன்னங்க அழகுகளை, கண்ணாடியில் பார்க்கையிலே
என்னதான் சொல்கின்றாய், ஆறுதலாய் அவைகளுக்கு?
முழுதுமாய் யோசிக்கிறேன், முடியவில்லை அறிவதற்கு...!

காதல் படம் பார்க்கையிலே, முகம் சிவந்து போகின்றாய்.
எவற்றையெல்லாம் நினைத்து நீ, வெட்கப்பட்டுக் கொள்கின்றாய்...?
ஒவ்வொரு அனுபவத்தையும், ஒன்றும் விடாது அலசுகிறேன்..
துப்பொன்றும் கிடைக்கவில்லை, அந்த காரணத்தை தெரிவதற்கு...

திருவாய் மலர்ந்து பேசுகையில் “அவருக்கு அவருக்கென்று” சொல்கின்றாய்,
என்னதான் அவருக்கென்றுன் மனதில் பூட்டி வைத்துள்ளாய் ?
படிப்படியாக நானும், பலவற்றை படித்துப் பார்த்தேன்
படியவில்லை என் மனதில், பக்குவமாய் எதுவென்று...!

உங்களுக்கு ஒன்றுமே, புரியாதென்று நீ சொன்ன போது,
பூதமாய் எழுந்து நின்றது  என் மூளையில் பெருங்கேள்வி...!
எனக்கொன்றும் விளங்காதா என்று விறுமாப்பாய் கேட்டது..
“ஓமடா மொக்கா....” என்று திட்டியது என்னை என் மனமே.
வழுவிடாது எந்தனுக்கு, வகுப்பொன்றையும் எடுத்தது.

கற்பனையில், உன்னையவள், சொரூபித்துப் பார்க்கிறாள்.
ஒவ்வொரு நிமிடமும், அவள் உன்னுடனேயே வாழ்கிறாள்.
எதையெல்லாம் பார்த்தாலும், தன் நினைவுகளை மீட்கிறாள்.
மொத்தத்தில் அவள் உன்னுள், ஒன்றியே வாழ்கிறாள்.

அனைத்தையும் உந்தனது, மூளையிடம் கேட்டுப் பார்த்தால்,
அதற்கதன் விளக்கமில்லையேல், அதன் பதில் தெரியாது முழிக்கும் - ஆனால்
அவற்றுக்கெல்லாம் விடையை என்னிடம் நீ கேட்டுப்பார்
உளமார உனக்குப் பெரும் விளக்கமொன்றே தந்திடுவேன்
என்று சொல்லி ஏக்கத்துடன், பெரு மூச்சொன்றை விட்டது.

புரிந்து கொண்டேன் ஒவ்வொன்றின், புதுப்புது அர்த்தங்கள்..
இப்போது தெரிந்து கொண்டேன் அவளாசை எண்ணங்கள்..
அதன் பெயர் தான் அன்பு என்று ஆழமாகக் கண்டுகொண்டேன்..
அவள் அழகுமனதை தெளிவாக தெரிந்து கொண்டேன்.


Wednesday, November 25, 2015

களித்திருக்க ஆசை

 
வில்லங்கமாக உன்னை
வில் போல் வளைத்து
உன் நெற்றிப் பொட்டிலும்
முத்தான முளிக்கண்களிலும்
உப்பியிருக்கும் கன்னங்களிலும்
செக்கச் சிவந்த உதடுகளிலும்
வெண்சங்குக் கழுத்தினிலும்
உருண்டு திரண்டிருக்கும் மாங்கனிகளிலும்
அதன் கீழ் இடையிலும்
தொப்புளிலும்..., தொடையிலும்...,
உச்சி முதல் பாதம் வரை
ஒரு இடமும் தப்பாது
உச்சுக் கொட்டி
உம்மா கொடுத்து
கட்டியணைத்து
இருவரும் களித்திருக்க ஆசை. 

Tuesday, November 17, 2015

என்னுள் சில ஆசைகள்







 

என் இதயத்தில் குடியிருக்கும்,
என்னுயிர் தேவதையே....,
என்னுள் சில ஆசைகள்,
உன்னோடு நான் இருக்கையிலே....!

உந்தனது கை கோர்த்து,
ஒரு பெருந் தெருவினிலே,
அனைவரும பார்த்து ரசிக்க,
உலவி வர ஆசை.....!

உந்தனது மடியினிலே
என் தலை வைத்திருந்து
மணிக்கணக்கில் சிரித்துப் பேசி,
மனமாற ஆசை......!

நீ தூங்கி இருக்ககையிலே,
மங்கிய நிலவொளியினிலே,
உன் வதனம் பார்த்திருந்து,
உன் அழகை ரசிக்க ஆசை......!

தலை குளித்து வரும் உனக்கு,
உன்கேசம் துவட்டி விட்டு,
மண மணக்க அகல் போட்டு,
தலை வாரிப் பின்னி விட ஆசை.....!

நீ கொள்ளும் கோபத்தில்,
உன் கண்களும் உதடுகளும்,
சொல்லத் துடிக்கும் ஒவ்வொரு வரிகளையும்,
தெளிந்தறிய ஆசை......!

உன் கொஞ்சல் கதைகள் கேட்டு,
உன் சிணுங்கல் நுணுக்கம் அறிந்து,
உன் ஆசைகளை நிறைவேற்ற,
எப்போதும் ஆசையோ ஆசை....!

உன் கண்ணோடு கண் சேர்த்து,
உன் இதயம் சொல்லும் வார்த்தைகளை,
அர்த்தம் பிசகாது அறிந்து கொண்டு,
ஓராயிரம் ஆண்டுகள் உன்னோடு வாழ ஆசை.....!


Wednesday, November 4, 2015

நடிப்பா...?


Tuesday, July 2, 2013

திருப்தி கொள்




எதையும் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்.

எந்நேரமும் மகிழ்ச்சியாக இருக்கப் பழகு



இறைவன் உனக்குக் கொடுத்த நேரம் சொற்பமே

அந்த நேரத்தினை பிரயோசனமாகப் பயன்படுத்து.



கடந்த காலத்தை நினைத்து வருந்தாதே

எதிர்காலத்தைப் பார்த்து ஏங்காதே



உனக்காக இறைவன் கொடுத்தது அவ்வளவே

கிடைத்ததை வைத்து திருப்திப் பட்டுக்கொள்



எதையும் தொடர்ந்து முயற்சி செய்

அந்தந்த நேரத்தில் அதன் பயன் கிடைக்கும்.



அனைவரிடமும் ஆலோசனையைப் பெற்றுக் கொள் - ஆனால்

ஆணித்தரமான முடிவை நீயே எடு



எப்போதும் உன்னருகில் நல்லவரை வைத்துக் கொள்

இல்லையேல் உனைச்சுற்றி கெட்டவர்கள் கூடுவர்

Sunday, April 21, 2013

போக்குவீரா என் துன்பம்





காலை வணக்கம் சொல்லி என்னை

கட்டி அணைத்து உச்சி முகர்ந்து

எழுப்பி என்னைத் துாக்க வேண்டும்



குளிக்கும் போது முதுகு தேய்த்து

சோப்புப் போட்டு தண்ணீர் ஊற்றி

கழுவி என்னைத் துடைக்க வேண்டும்

Monday, December 31, 2012

2012



2012

என் வாழ்வின்

துயரங்கள் சுமந்த

சுதந்திரம் இழந்த

இருண்ட பக்கங்கள் நிறைந்த காலம்.


காலனுக்கும் தெரியவில்லை

ஏன் தடுப்பில் உள்ளேன் என்று

காதலிக்கும் புரியவில்லை

சிறையிருந்து ஒன்றும் செய்யலாகாதென்று

Thursday, December 27, 2012

என் உதடுகள் மௌனமாகின்றன.



நான்

வாய் திறந்து சொல்வதெல்லாம்

வால் வைத்து விளங்கிக் கொண்டு

வாரோட்டம் ஓடி வந்து

பாயுதென்மேல் மறுமடியும்


எனக்கொன்றும் விளங்கவில்லை

எப்படித்தான் கதைப்பதென்று

எப்படி நான் கதைத்தாலும்

தப்படியாத்தான் புரிகிறது அனைவருக்கும்

Wednesday, December 5, 2012

இன்னும் நான் யாரிடம் மண்டியிட..???



நான் கடவுளிடம் மண்டியிட்டேன்

என் துன்பங்களுக்கு ஒரு முடிவைத் தருவதற்கு


ஆட்கடத்தல் காரரிடம் மண்டியிட்டேன்

அனுப்பும் கூலி பெருந்தொகையானதால், குறைப்பதற்கு


படகோட்டியிடம் மண்டியிட்டேன்

உயிருடன் ஏதோவொரு கரை சேர்ப்பதற்கு

Saturday, November 10, 2012

வெற்றிக்கனிகள் பறிப்போம்.

எவனொருவன் ஒன்றை விரும்பி விட்டால்

அதனை தடுப்பதற்கு யாராலும் முடியாது - அணு

குண்டுதான் திடீரென வீழ்ந்தங்கு வெடித்தாலும்

தூளாகிப் போகுமது அவன்முயற்சியின் முன்னாலே.



எவற்றையும் மனதார விரும்பிநாம் ஆசைப்பட்டால்

எப்போதும் அவற்றையே உள்ளத்தில் நினைத்திருந்தால்

தானாக வந்துதிக்கும் பெரும்பெரும் ஐடியாக்கள்

தரமாக வடிவமைக்கும் அவ்வனைத்தையும் அடைவதற்கு.

Sunday, November 4, 2012

எமக்கு வாழ்வு கொடுங்கள்



எந்தனது மனைவியுடன் போன் பேசி

காலங்கள் கரைகிறது பல வாட்டி

பாலங்கள் இன்றி நான் தவிக்கின்றேன்

சாலங்கள் போட்டு அவளோடு சேர்ந்திருக்க



பெருங்கடல் ஒன்றெம்மைப் பிரிக்கிறது

சட்டங்கள் நாம்சேரத் தடுக்கிறது.

வருங்காலம் வாவென்று அழைக்கிறது

நேரங்கள் வருடங்களாய் பறக்கிறது.

Friday, October 19, 2012

உன்னால் மட்டும் எப்படி?





உலகினிலே

துன்பத்தில விழுந்த மனிதன்

அதிலிருந்து மீள்வதற்கு கஸ்ரப்படுகிறான்

இன்பத்தில் திளைத்த மனிதன்

மேலும் திளைக்க அவதிப்படுகிறான்.

பாடசாலை மாணவனோ

விரைவில் படித்து முடிக்க ஆசைப்படுகிறான்

வேலை செய்யும் ஆசிரியரோ

விரைவில் நிறைவுபெற வேண்டுகிறார்

வீட்டினிலே பெண்களோ

சுவையாக சமைக்க ஆசைப்படுகிறாள்

அவற்றைச் சாப்பிடுபவர்களோ

குறை கூறிச் சாப்பிடுகிறார்

எழுத்தாளன் எழுத நினைக்கிறான்

உழைப்பாளி உழைக்க நினைக்கிறான்

விவசாயி அறுவடை செய்ய நினைக்கிறான்

எல்லோருமே ஒவ்வொன்றை நினைக்கிறார்கள்

அதனை அடைந்து விட நினைக்கிறார்கள்

சிலர் நேரம் போதவில்லை என்கின்றனர்

பலர் நேரம் போகுதில்லை என்கின்றனர்.

ஆனால்

உன்னால் மட்டும் எப்படி முடிகிறது

எந்தவிதமான சலனமுமின்றி

பளிங்கில் வழிந்தோடும் நீர் போல

அமைதியாக

தெளிவாக

நகரமுடிகிறது....?

கற்றுத் தா எனக்கு

நிம்மதியைக் காண்பதற்கு.....!!!

Sunday, October 7, 2012

அருமையான தீர்ப்பு





ஒக்டோபர் ஐந்து

ஒருதொகுதி மக்களின்

ஒருமித்த விடுதலைக்காய்

உயர்நீதி மன்றத்தில் தொடுத்த வழக்கிற்கு

நீதிபதிகள் ஒன்றுசேர்ந்து கட்டளையிட்ட

ஒரு அருமையான தீர்ப்பு



பொதுவான காரணம் சொல்லி

மதுக்காரன் போலவர் கண்மூடித்தனமாக

கட்டவிழ்த்து விட்ட பொய்க்கதைக்கு

நீதிபதிகள் ஏழுபேர் சேர்ந்து

மீதியின்றி விளக்கமளித்து

முழங்கிய பெரும் தீர்ப்பு



கர்ப்பிணி, சிறு பாலகன்,

குழந்தைகள், விதவைகள்,

குடும்பங்கள், தனிநபர்கள், என

எவரையும் விட்டுவிடாது,

கம்பி வேலிக்குள் அடைப்பதற்கு

வழிவகுத்த சட்டத்தினை

அடித்து நொறுக்கிய ஒரு தீர்ப்பு.



மனைவியை, குழந்தையை,

கணவனை, அண்ணனை,

அம்மாவை, தம்பியை, என

அனைத்து உறவுகளையும்

மனிதாபிமானம் ஏதுமின்றி,

அக்குவேறாகப் பிரித்து

அவர் தம் ஜனநாயக உரிமைகளை மறுத்த

அநியாயச் சட்டத்தின் இரும்புக் கதவினை

சுக்குநூறாக்கிய ஒரு தீர்ப்பு.



தமிழர்களை வைத்து

அரசியல் நாடகம் நடாத்திய

கட்சிகளுக்கும் அமைச்சர்களுக்கும்

அவர்களது காது பிடித்து முறுக்கி

கரவுபிடித்து தடுத்துவைத்த அப்பாவிகளுக்கு

வழிகொடுக்க தறைஞ்சு விட்ட

மாபெரும் தீர்ப்பு.

Thursday, October 4, 2012

தமிழனுக்கோர் காலம்வரும்



உலகெல்லாம் ஒளிகொடுக்கும் பகற்கால சூரியனே

இரவுக்கு அழகளிக்கும் வானத்து சந்திரனே

உயிர்களுக்கு உயிரளிக்கும் உயிர்மூச்சுக் காற்றே

அனைத்தையும் தாங்கிநிற்கும் பூமியின் நிலமே,



பார்த்துக்கொண்டா இருக்கின்றீர் தமிழர்படும் அவஸ்த்தைகளை

தூர்த்துவிடப் பார்க்கிறார்கள் எம்மிளம் பிஞ்சுகளை

வேரிறுக்கி இருக்குமெங்கய் கலாச்சாரப் பண்புகளை

தோலுரித்து துவம்சமாக்க துடிக்கிறார்கள் துஷ்டர்கள்.



பாரிறுக்கப் பரவியிருக்கும் ஈழத்தமிழ் குஞ்சுகளை

கோடிழுத்துப் பெரும்பெரும் சட்டங்களை உருவாக்கி

நூலறுத்துச் சட்டங்களின் வலைகளிலே விழச்செய்து

கழுத்தறுக்கத் துடிக்கிறார்கள் கயவர்கள் எம்நாட்டினிலே



ஐந்துக்கு ஒன்றுஎன்று ஆமியினை நிலைநிறுத்தி

ஜந்துக்கள் போலவர் பெருகிப்போய் இருக்கிறார்கள்

மந்தைகள் போலத்தமிழ் மக்களை மேய்த்துவிட

சந்துக்கள் எங்குமவர் உயிரெடுக்கும் இரும்புடனே



வங்கத்து வழிவந்த காட்டுமிராண்டிக் கூட்டங்கள்

சங்கத்துக் காலம்முதல் வாழ்ந்துவரும் தமிழர்களை

செங்குருதி வடித்துஅவரை கொன்றுவிடத் துடிக்கிறார்கள்.

கங்கையிலே போட்டு கரைத்துவிடத் தவிக்கிறார்கள்.



காலத்தின் சுழற்சியிலே தமிழனுக்கோர் காலம்வரும்

நாளத்தில் சூடேற்றி மானமுள்ள தமிழர்களாய்

வானத்தில் இருந்துநாம் குதித்துநடை போடுவோம்

தமிழனுக்கோர் நாடமைத்து தரணிக்குப்பறை சாற்றுவோம்.

Monday, October 1, 2012

சிறையில் பூத்த மலர்




சிறையினிலே சிக்கிய ஆண்கிளியைத் தேடி

கடலினிலே படகேறி புறப்பட்டது பெண்கிளி

தரையினிலே கால்பட்டதும் கண்டுகொண்டது சோடியினை

கரையில்லாப் பிரிவுக்கு வந்ததொரு பெருவிடிவு



சோடியைக் கண்டதும் துள்ளியது இருமனமும்

ஓடியே சென்றிரண்டும் கட்டியே புரண்டது

தேடிய கிளியிரண்டும் சேர்ந்ததும் சொல்லணுமோ

பாடியே கொஞ்சியிரண்டும் மகிழ்ந்துதான் இருந்ததுவே.



சிப்பிக்குள் முத்தாக கருவாக உருவாகி

கம்பிக்குள் வித்தாக தருவாக வெளியாகி

அம்பறாவில் இருக்குமந்த அம்புபோல் சிறையினிலே

தம்பியாய் அண்ணனுக்கும் அக்காளுக்கும் இருக்கின்றான்



உடும்பு பிரட்டி தவள்ந்து நடந்து

ஓட பழகி ஒன்றாக விழளயாடி

அம்மா சொல்லி கதைக்கப் பழகி

அக்கன்னா வரைக்கும் சரளமாய் சொல்கின்றான்.



வருடங்கள் இரண்டு கடந்துதான் போச்சு

கருடர்கள் இன்னும் இரங்கவே இல்லை

நெருடல்கள் எப்போதும் ஒவ்வொருத்தர் மனதிலும்

எப்போது விடுதலை இம்முடிவில்லாச் சிறையிருந்து.



மனிதாபிமானம் மனிதஉரிமை ஜனநாயகம் என்று

மந்திரமாக சாலவார்த்தைகள் சரளமாகப் பேசி

தந்திரமாக எல்லோரையும் காலவரையறை ஏதுமின்றி

தொந்தரவின்றி அடைத்துள்ளனர் சிங்காரச் சிறையினிலே



தனியான படையொன்று மிருகங்களுக்கு உண்டு

அநியாய தடைகளுக்கு எவையுமே இல்லை

சிறுவர்கள் பெரியோர்கள் கற்பிணிகள் முதற்கொண்டு

சிறையிலே அடைத்துவைத்து சித்தமிழக்கச் செய்கிறார்கள்.



தப்பேதும் அறியாத இச்சிறையில் பூத்தமலருக்கு

எப்போது முடிவில்லாத் தடுப்பிலிருந்து விடுதலை

முப்போதும் கடவுளைத் தொழுகின்ற பக்தர்களே

இப்போது செய்யுங்கள் இம்மலரது விடுதலைக்காய்.

Thursday, September 20, 2012

என் ஆசைகள்




உன் விழியில் என் முகம்பார்த்து

உன் உதட்டில் என் சுவையறிந்து

உன் மார்பில் என் தலையணைத்து

ஒரு கோடி ஆண்டுகள் வாழ்ந்திட வேண்டும்



என் வாழ்நாளில் உனை இந்த

உலகம் சுற்றிக் காட்ட வேண்டும்

உன் ஆசைக் கனவு அறிந்து

அவற்றை நனவாக மாற்றிட வேண்டும்



பொன் போலே உனை நானும்

பண்ணோடு இசை அமைத்து

எப்போதும் என்னுயிர்ச் சுருதி

ஆசையாக மீட்டிட வேண்டும்



உன் மடியில் தலை வைத்து

உன் முகத்தைப் பார்த்துக் கொண்டு

என் உதட்டில் புன்னகையிட்டு - நான்

ஒரு நொடியில் சாக வேண்டும்.



இவ்வாசை என்வாழ்வில்

மாறாமல் நடந்துவிட்டால்

இவ்வுலகில் பாக்கியசாலி

எனையன்றி யாருமில்லை.