Sunday, July 20, 2008

நான் கொடுத்து வைத்தவள்.....!!!

கனக்க அன்பு காட்டும் கணவன் கிடைத்தது,
எனக்கு நிறையவே சந்தோசம்
மனத்தின் இறுக்கங்கள் குறைய,
அனைத்தும் சொல்கிறேன் அவனிடம்...!

வேசம் போடும் உறவுகள் மத்தியில் - குன்றாத
பாசம் காட்டும் என் குடும்பம், நண்பர்கள்....! - என்
தேசம் போய் தெருவோரம் நடந்தால்
தாகம் தீருமாப்போல் பறக்குது வேதனைகள்...!

குளித்து வந்ததும் என் முகத்தில்
பனித்து துளித்த தண்ணீர் சொட்டுக்களை,
களித்துப் பார்த்து, தலை துவட்டி,
அணைத்துக் கொடுக்கும் முத்தம் - எத்தனை
பணத்துக்கும் கிடைக்காது யாருக்கும்.....!

அண்ணி, அண்ணி என்று, வாய் நிறைய அழைத்து,
தண்ணி அருவியில் ஓடுமாப்போல், பாசம் கொட்டி - முழு
வெண்ணிலவு போல் என் மனதில் பதிந்து விட்ட
மண்ணின் மைந்தர்கள் என் மைத்துனர்கள்.....!

ஏங்கிய என், மனத்தின் பாசங்களுக்கு,
தாங்கிய ஒத்தடங்கள் போல் - கணவரிடம்
வாங்கிய முத்தங்களும், அணைப்புக்களும்,
தேங்கியே விட்டன, அகலாமல் மனத்திலே....!

கொடுத்து வைத்தவள் நான்..,
எடுத்து வைக்கிறேன், விளக்கு உனக்கு - முருகா
கரும்பு போல் இனிக்கிறது வாழ்க்கை,
வாழ்த்திடு எம்மை, என்றும் சீத்தாராமனாக வாழ்ந்திட...!!!

எழுதியவர் ; ஜெய்

Wednesday, July 16, 2008

மறக்க முடியவில்லை இன்னும்....!!!

தட்டித் தட்டி, தடுக்குப் பாயில் இருந்து,
சிட்டுச் சிட்டாய், நடக்கப் பழகி,
பட்டுப் பட்டாய் அம்மா சொல்லி,
சொட்டுச் சொட்டாய் வளர்ந்து வந்ததை
மறக்க முடியவில்லை இன்னும்...!

நேசறி போய் நேசம் பிடித்து,
'அ' 'ஆ' படித்து, முத்துமாரி ரீச்சரிடம்,
அன்புப் பரிசு வாங்கி - அவர்
உச்சி மோந்து, கொஞ்சி வாழ்த்தியதை,
மறக்க முடியவில்லை இன்னும்....!

ஆரம்ப பாடசாலையிலே,
அதிக மார்க் வாங்கியதால்,
பரிசளிப்பு விழாவில்,
பரிசு வாங்கி பாராட்டுப் பெற்றதை,
மறக்க முடியவில்லை இன்னும்.....!

எல்லாப் பாடத்திலும், நல்ல மார்க் எடுத்து,
சங்கீதத்தில், குறைந்த மார்க் எடுத்து,
யோகராணி ரீச்சரிடம் - மூங்கில்
பிரம்பால், வாங்கிக் கட்டிக் கொண்டதை
மறக்க முடியவில்லை இன்னும்.....!

விஞ்ஞானத்தில், இனப்பெருக்கத்தொகுதி பாடத்தை
படிப்பிக்க வெட்கப்பட்ட, சுபத்திரா ரீச்சரையும்,
தடியெடுத்து வந்து படிப்பித்த, ராதா ரீச்சரையும்,
படி, படி என்று ஆர்வமூட்டும், சபாபதி ரீச்சரையும்
மறக்க முடியவில்லை இன்னும்.....!

கல்லூரி சென்று, கணித பாடம் படித்து,
யோகானந்தா வாத்தியாரின்
விவேகமான விளக்கங்களால்,
படிப்பிலே மேலெழுந்து வந்ததை,
மறக்க முடியவில்லை இன்னும்....!

என் வகுப்பு தோழர்களே - என்னை,
என் பெயர் தவிர்த்து, சின்னவன் என்றழைத்து,
இன்ரவலில் எப்போதும், எனக்காக ஓசியில்
ரீயும், வடையும், வாங்கித்தந்து சாப்பிட்டதை
மறக்க முடியவில்லை இன்னும்....!

படை நடவடிக்கையால் - எம் படிப்பை
இடைநிறுத்தி, ஊரெல்லாம் இழந்து
நடையாக நடந்து, தண்ணீர் குடிப்பதற்காக
கடைக்கோடி வரை, தேடி அலைந்ததை.
மறக்க முடியவில்லை இன்னும்....!

இன்னும் எத்தனை, எத்தனையோ
சுகமான சுமைகளை, தாங்கி நிற்கும்,
என் ஆழ்மனச் சுகங்களை,
தினம் தினம் நினைத்து மகிழ்கிறேன்...!
எதையும் மறக்கவில்லை இன்னும்....!!!

Tuesday, July 15, 2008

மலரட்டும் சமாதானம்......!




வசந்த காலங்கள் இழந்து - இரு
தசாப்த காலங்களாக
பறக்கத் துடிக்கும் - தமிழ்
இதயத் துடிப்புக்கள் ஏராளம்....!

வதைக்கும் சிங்கள அரசு,
சிதைக்கும் தமிழர் ஓர்மத்தை.
சதைக்கு அலையும் துரோகிகள்,
விதைக்கும் நஞ்சை, இள நெஞ்சுகளில்...1

வேரோடு பிடுங்கியெறி, உன் கௌரவத்தை,
ஊரோடு பதுங்கியெழு, பட்டாளமாக,
காரோடு வந்த கயவன், காற்றோடு போவான்.
பாரோடு பேசு, உன் விடுதலையின் வீரத்தை.....!

நார் நாராக, தும்பு பறந்தது போதும்.
சேர் ஒன்றாக, தும்பெல்லாம் சேர்ந்து கயிறாக,
பார்.. விடுதலைக்காக, சுதந்திர இலக்கை,
பேர் சொல்லும் தமிழன் வீரத்தின் வெற்றியை...!

மறப்போம், எம்முள் பழையவற்றை,
பறப்போம், உலகினில் சுதந்திரமாக,
வெறுப்போம், பொறாமையால் புழுங்குவதை,
அறுப்போம், எதிரியின் கருந் திட்டங்களை..!

அன்னதானம் செய்வோம், ஏழை பசி அடங்க..
கண்தானம் செய்வோம், குருடன் பார்வை கிடைக்க..
ரத்ததானம் செய்வோம், தவிக்கும் உயிர் காக்க..
சமாதனம் செய்வோம், தமிழன் சுதந்திரம் அனுபவிக்க...!

புலரட்டும் புதிய பொழுது,
வளரட்டும் மக்களிடை ஒற்றுமை,
ஒளிரட்டும் சுதந்திர ஒளிக் கீற்று,
மலரட்டும் உலகினில் சமாதானம்...!!!

Sunday, July 13, 2008

சாந்திக்காக மண்டியிடு....!!!

பொங்கி வரும் கோபங்கள்,

தங்கிவிடும் நெஞ்சினிலே,
நெஞ்சினிலே தங்கி விட்டால்,
விஞ்சி விடும் விரக்திகள்...!

விரக்திகள் மிஞ்சி விட்டால்,
வெறுப்புக்கள் வந்து விடும்.
பொறுப்புகள், குறைந்து,
மறுப்புகள் கூடி விடும்....!

தேவையற்ற விடயங்களுக்கு,
கோபத்தை காட்டி விட்டால்,
தேவையான விடயங்களில் - அது
பயனற்றுப் போய் விடும்....!

உனது விடயங்களில் தலையிட்டால்,
அதில் நீ கோபப் பட்டால்,
சரியிலும் சரி.. தேவயும் கூட...,
தேவையற்ற விடயங்களில், விட்டு விடு..!

பாசம் காட்டி, பரவசமாய் வாழ்,
நாசம் செய்து, துவம்சமாய் ஆக்கிடாதே,
பாசத்தை நீ ,துவம்சம் செய்து விட்டால்,
வேசமாய் போய்விடும், வாழ்க்கையின் முழுவதும்....!

தேவையோ இந்த, வீணான பழியெல்லாம்..?
பாதை தெளிவாக, சுத்தமாக உள்ளது,
கரடு முரடையே, தேர்ந்தெடுக்கின்றாய்....,
விளைவு நிச்சயம், விபரீதமாகத்தான் இருக்கும்...!

பதற்றப் படாதே, பரவசப் படாதே..,
ஓரிடத்தில் நின்று, நிதானமாக யோசி,
எது சரி , எது பிழை என்பதை ...,
பாதி வெற்றி, அடைந்து விடுவாய் நிச்சயமாக....!

அனல் பறக்கும் - உன் கோபக்
கனல்களை, தாங்க முடியவில்லை..,
புனல் கொண்டு அழித்திடு - அது
தணல் ஆகுமுன் , உன் மனத்தில் இருந்து...!

கொட்டிவிடு, உனது துன்பங்களை வெளியில்,
கட்டிவிடு பந்தயம், மறக்க உன் கோபங்களை,
வெட்டிவிடு, துன்பங்களின் வருகையின் தொடக்கத்திலேயே.
மண்டியிடு மனத்திடம், என்றும் உன் மனச் சாந்திக்காக...!!!

Thursday, July 10, 2008

கனவாகவே போய்விட்ட கனவு.....!!!


முரளி ஒரு படித்த குடும்பத்தை சேர்ந்தவன்.
வீட்டில் ஐந்து சகோதரர்களுள் இவன் நடுப்பிள்ளை.
மூன்று ஆண்கள், இரண்டு பெண்கள். இவனுக்கு,
அக்கா, அண்ணா, தம்பி, தங்கை என எல்லா உறவு
முறைகளும் இருந்தன.

சிதம்பரப்பிள்ளை, முரளியின் அப்பா. சிறிய பாடசாலை
ஒன்றில் அதிபராக இருக்கிறார். அம்மா வீட்டுப்பணி,
அதனால் அம்மாவின் கட்டுப்பாட்டில் பிள்ளைகள் வளர்ந்தனர்.

சிதம்பரத்தாரின் மாதச்சம்பளமான பதினையாயிரம்
ரூபாவினை நம்பியே, அந்த குடும்பத்தின் ஏழு ஜீவன்களும்,
உணவு, உடை, படிப்புச் செலவு என அனைத்துத்
தேவைகளையும் நிறைவு செய்து வந்தார்கள்.

வீட்டில் மூத்தவன் எனும் வகையில் தர்சனும்,
மூத்தவள் எனும் வகையில் தர்சினியும்,
கடைக்குட்டி எனும் வகையில் சுதனும்,
இளையள் எனும் வகையில் சுதாவும்,
செல்லப்பிள்ளைகளாக இருந்தனர்.
முரளி மட்டும் நடுவில் பிறந்ததால், எடுபிடிப்
பிள்ளையாகப் போய் விட்டான்.

Wednesday, July 9, 2008

தேற்றிக்கொள் மனதை....!!!




மெய் மறைத்து, உன்மீது
பொய்ப் புகார்கள் செய்வார்கள்.
வாய் தவறியேனும் அவர்கள் மீது- நீ
நாய் போல் பாய்ந்து குதறி விடாதே...!

இல்லாத பொல்லாதவை எல்லாம் - எந்த
தள்ளாத வயதிலும், தளராது,
பல்லெல்லாம் இளித்துக் காட்டி,
சொல்லால் அடிப்பர், உனைப்பற்றி...!

இவையெல்லா, வற்றையும் பார்த்து,
அவையில் தளர்வாக இருந்து விடாதே.
கயவர் வீசும், ஒவ்வொரு சொல்லும் - உனை
உயர்த்தும் அத்திவாரக் கற்கள், நினைவிற்கொள்...!

காய்க்கிற மரத்துக்கு தான், கல்லெறி விழும் - அவரிடமிருந்து
பாய்கிற சொற்கள் உன் திறமைகளின் எண்ணிக்கைக்கு சமம்.
சாய்க்கிற நோக்கம் தான் உன் திறமைகளை..,
வேய்ந்த வீட்டுக்குள், நெல்மணி போல் பத்திரமாக காத்திடு...!

தற்காலிக பின்னடைவு தான் இது என்பதை
பிற்காலத்தில் புரிந்து கொள்வாய்.
முற்காலத்தில் நடந்தை யோசித்துப் பார்,
எக்காலத்திலும் வெற்றி உனக்குத் தான்....!

தேற்றிக் கொள் மனதை, பின்னடைவுகளில் இருந்து,
போற்றிக்கொள் தமிழ்த்தெய்வம், முருகனை என்றும்,
தொற்றிக்கொள் உன் மன வலிமையை மேலும் - பறை
சாற்றிக்கொள் வெற்றிகள் என்றென்றும் உனதென்று....!!!