அன்புள்ள என் துணைக்கு,
நம்முள்ளத்தின் இணைப்பிற்கு,
உன்னுள்ளத்தின் வெளிப்பாடு தான்
என்னுள்ளத்தை ஈர்த்திழுத்தது....!
பார்த்துள்ள உன் கண்களுக்கு,
முன்னுள்ள நான் - தூண்களுக்குப்
பின்னுள்ள மறைவில், ஒளிகிறேன்
உன்னுள்ள, ஊடுருவல் பார்வையினால்...!
முகம் பார்த்து, முழுமையும் பேசி,
அகம் அறிந்து, அன்பினால் கூடி,
சதம் வருடங்கள் ஒன்று கூடி,
விதம் விதமாய், வாழ்ந்திடணும்....!
மிருதுவான உன், அணைப்பினால்,
சாதுவான நான், கட்டுண்டேன்.
பாதுகாக்க, நீ உள்ளாய் என்பதால்
சூது இன்றி தந்தேன், உன்னிடம்...!
பூராவும் நான், உனக்குத் தான்,
வேராக இருந்து, காத்திடு எனை,
நாராக கட்டுவேன், உனை என் அன்பினால்,
பாராளும் மன்னனும், வியக்கும் வகையில்...!
வேரோடி, உலகெல்லாம், விழுதெறிந்து,
பாராளும் வகையில், இரு மன்னர்கள் பெற்று ,
தாலாட்டி, சீராட்டி, அன்போடு வளர்த்து - அவர்கள்
பேயோட்ட வேண்டும், எம்மக்கள் துன்பம் தீர...!
கொடுத்திடு, விடை எனக்கு..,
தகர்த்திடு, தடை உனக்கு...,
தடுத்திடு, தனிமையை எனக்கு....,
வளர்த்திடு, அன்பு உறவினை எமக்குள்....!!!
Friday, July 4, 2008
Thursday, July 3, 2008
உனக்காக உயிர் வாழ்வேன்....!!!
புரிந்து கொள்கிறேன் நான் - என்மீது
எரிந்து விழும் உன்மீது தவறு இல்லை என்பதை,
சரிந்து விடுவேன் நான் என்ற பரிதாபத்தில்
பரிந்து பேசிய உன்னை வெறுக்கவில்லை நான்...!
எதையும் விட்டுக் கொடுக்கும் பெண் - தன்
"அதையும்" விட்டுக் கொடுக்க வருவாளோ சொல்..
சதையும் கதையும் தான் வாழ்க்கையா?
அசையா நம்பிக்கையும், அன்பும், பாசமும் தானே...!
இதை நீ சொல்லி - என்னிடம்
பதை பதைத்து பேசிய போது - நான் ஒரு
கதை கதைக்கவில்லை. அத்தனையும் எனக்கு நீ
விதைக்கும் விதை என்று ஏற்றுக்கொண்டேன்...!
நொந்து நீ சலித்து விடாதே..
வெந்து வெந்து நான் கருகி விடுவேன்.
பந்து போல் நாம் உலகெலாம் உருண்டோடி
வந்து காட்டுவோம், எமது வெற்றிக் கனிகளை...!
அன்று நான் உன்னிடம் சொன்னது போல்
இன்றும் உன்னிடம் திரும்பவும் சொல்கிறேன்,
என்றும் உனக்காக உயிர் வாழ்வேன் - வாழ்விலே
வென்றும் காட்டுவேன் உன் இலட்சியப் படி...!!!
Wednesday, July 2, 2008
உன்னைச் சரணடைந்தேன்...!!
புலர்ந்த காலைப் பொழுதினிலே,
உலர்ந்த வண்ண ஆடை அணிந்து,
மலர்ந்த செந்தாமரை போல்,
எழுந்து வந்த என் மங்கையே...!
பரந்த உன் வட்ட, முகத்தினிலே,
அரைத்த கஸ்தூரி மஞ்சள் பூசி,
சிறுத்த உன் நெற்றி நடுவில்,
கறுத்த நிறப்பொட்டு, வைத்தவளே...!
கண்ணிமைக்கு மையிட்டு,
உதட்டுக்கு சாயம் பூசி,
அதட்டும் உன்னிரு கண்களாலே,
மிரட்டி விடும் அழகரசியே...!
வாரி இழுத்து, பின்னலிட்டு,
கொத்தாக மல்லிகைப் பூச்சூடி,
தங்கக் கலரில், பட்டுச்சேலை கட்டி,
காட்சியளிக்கும் லட்சுமி தேவியே...!
பொன் நகை தவிர்த்து,
புன்னகை புரிந்து,
அன்பினால் ஆட்கொண்டிடும்,
புன்னகை அரசியே...!
வீட்டுக்கு வந்தோரை,
விருந்தோம்பி உபசரித்து,
வருந்தாமல் வழியனுப்பும்
அருந்ததி, வடிவுக்கரசியே.....!
சுட்டுவிரல் காட்டி, உன்னிடம்
மட்டுமே சொல்கின்றேன்..
சரணடைந்தேன் நான் - எனது
மரணம் வரை உன்னிடம்...!!!
வேசம் போடும் உறவுகள்....!!!

பாசம் போல நடித்து
வேசம் போடும் உறவுகள்
காயம் ஆன பின்னர் தான்
மாயம் ஆவர் அதிலிருந்து..!
வாசம் பிடித்து வந்து
நாசம் ஆக்குவர் நண்பரை,
தோஷம் பிடித்தது போல
சுற்றுவர் எமையெல்லாம்....!
நியாயம் பேசிப் பேசி
அநியாயம் செய்வர் கூடி,
தாடி வைத்து தம்மை
விடிவெள்ளி தாம்தான் என்பர்...!
பற்றி எரியுது பட்டினியில் வயிறு
பெற்றவன் மனசும் கல்லாய் ஆகுது,
தொற்றி இருப்பவன் தொண்டை வரை போட்டு
தொந்தி பெருத்து வதந்தி பரப்புறான்..!
சாபம் என்பது சும்மா இல்லை.
சோகம் அத்தனையையும் - நீ பெறப்போகும்,
பாவம் என்பதை அறியாதவனா சொல்..?
காலன் வந்து உன்னை கட்டையில் ஏற்ற...!
திட்டித் திட்டி தீயிலடித்து செய்கிறோம் சத்தியம்,
கட்டிய வேட்டியுமின்றி தூள் தூளாவாய் நிச்சயம்,
பட்டி தொட்டி எங்கும் பதுங்கியுள்ள படைகள்
வட்டி போட்டு கொடுப்பர் முதலுடன் சேர்த்து...!
கதறி அழும் சின்னஞ் சிறார்களை நினைத்துப் பாரும்,
நிச்சயமாய் அத்தனையும் நீர் செய்த கொடுமைகள்,
அவர்களின் கண்ணீரில் திரண்டு வந்த சுனாமி,
சுழற்றியடித்து சுக்கு நூறாக்கியிருக்கிறது பாரும்...!
கதை கதையாய் உலகெல்லாம் அளந்து,
பதை பதைக்க வைத்த, பதர்கள் நீங்கள்..,
விதையாய் விதைக்கப்பட்ட வித்துக்கள் - எம்மால்
சதை சதையாய்ப் போனீர் நீர் - ஒரு நொடியில்.....!!!
Saturday, June 28, 2008
பகைத்திடு வேண்டாச் செலவுகளை.....!!!
கஞ்சி குடித்தாலும்
வஞ்சி உன் மடியில்
தஞ்சமடைந்து படுத்திருந்தால்
பஞ்சமாகி விடும் கவலைகள்...!
கவலை என்பது மாரியில் கத்தும்
தவளை போல, மாதக் கடைசியில்
மடலைப் பார்க்கையில் வருத்தும்
விடலைக் குடும்பங்களுக்கு...!
படலை வரை வந்து தந்திடும் பொருட்கள்
தடையையும் மீறிய விலையாக இருக்கும்.
காலையில் எழுந்து சந்தை வரை போய் வந்தால்
கடைசியில் குறையும் எந்தையின் செலவு...!
வீண் பேச்சுப் பேசாது, அளந்து பேசிட்டால்,
வானளவு செலவு குறைத்து காலடியில் போட்டிடலாம்.
தேவையற்ற நேரங்களில் மின்னை தவிர்த்திட்டால்,
சேமிப்புக் கணக்கினிலே மீதியினை சேர்த்திடலாம்...!
பொதுப் போக்குவரத்தினை, தினமும் நீ பாவித்தால்
பாதிப் பணம் மீதியாகி, விஞ்சிவிடும் உன் சேமிப்பு.
சாதி மதம் பாராது அன்புடனே பழகிட்டால்
வீதியெல்லாம் சந்தோசத்தில், திளைத்துப் போய் வரலாம்...!
முயற்சி எடுத்து நீ - காலயில் சின்ன
பயிற்சி செய்திட்டால், ஒழிந்திடும் உன்
அழற்சி மற்றும் அனைத்துக் கொடிய நோய்களும்
பெயற்சி ஆகிவிடும் உனது மருத்துவச் செலவுகள்...!
கடையிலே சாப்பிட்டு உன்
உடை பெருத்துக் கொள்வதால்
வருகிறது இரட்டைச் செலவு.
தருகிறது வேதனையும் சோதனையும்....!
தவிர்த்திடு கடையினில் சாப்பாட்டினை,
சமைத்திடு வீட்டினில் சுவையோடு,
வளர்த்திடு உனது சேமிப்பினை,
பகைத்திடு வேண்டாச் செலவுகளை.....!!!
வாழ்க தமிழ்......!!!

வாசமுள்ள எம்மவர் தமிழைக் காக்க,
பாசமுள்ள தமிழர் துள்ளி எழுந்து,
வேசமின்றி வரவேண்டும் முன்னுக்கு - இல்லையேல்
நாசமாகிப் போகும் நாம் கட்டிக் காத்த தமிழ்..
தோசமாகிவிடும் தமிழருக்கு.. வாழ்நாள் முழுதும்...!
காக்கவென, இப்போதே எழுந்து வராவிட்டால்
தாக்கப்பட்டு, சுக்கு நூறாகி விடும் எம் தமிழ்.
பார்க்கப் பார்க்க எரிச்சலாகும் - எம்
தாக்கப்பட்ட தமிழின் கலப்பை பார்க்கும் போதெல்லாம்...!
மறைவு தான், தமிழுக்கு விதியென்றால்
குறைவு தான் புத்தி, தமிழனுக்கு - விரைவில்
நிறைவு காண்பது அரிதாகும் தெரியுமோ?
பறைவதும் குறைந்து விடும் எம் தங்கத்தமிழில்..!
தரையில் ஊன்றிய காலைத் தூக்கி - உன்
கூரையில் வைத்து, உரக்கக் சொல்..,
பறையடித்துச் சொல், காக்க வா, தமிழை என்று,
விரைவில் சொல் தமிழ், வீழும் முன்னர்...!
மொழியின் முதன் மொழி, தமிழ் மொழி என்று,
வளிக்கு வளி, வாய் கிழியக் கத்தினால் போதாது,
அழிக்கத் துடிக்கும் அரக்கர் கூட்டங்களுக்கு,
பழியைத் தீர்த்து காப்பாற்று, எம்முயிர்த் தமிழை...!
உயிரினும் மேலான எம்முயிர்த் தமிழே...
பயிராய் நினைத்து வளர்க்கிறோம் உனை,
மயிராய் நினைத்து, யாரும் பிடுங்க நினைத்தால்
கயிறாய் ஆகி தூக்குவோம் அவர்களை...!
வாழ்க தமிழ்...! வளர்க தமிழ்...!
முதன் மொழியாக தமிழர்களுக்கு......,
பொது மொழியாக உலகத்தாருக்கு....!!!