"நீங்கள் தான் வேலை வேலை என்று போய் மாதக்கணக்கில இருந்து விட்டு வாறீங்கள். ஆனால் நான் இஞ்சை இருந்து இந்த ரெண்டு பிள்ளையளோடையும் என்ன பாடு படுகிறேன் என்று எனக்குத் தான் தெரியும்......"
என்று அஞ்சலி புலம்பிக் கொண்டிருந்தாள் தன் கணவர் ராசனிடம்.
சந்திரன் சூரியன் என இரு ஆண்குழந்தைகள். மூத்தவனுக்கு 4 அடுத்தவனுக்கு 2 வயது.
ராசன் அரச சுரங்கத் திணைக்களத்தில் வேலை செய்து கொண்டிருந்தான். வேறிடங்களில் வேலை செய்யக் கூடிய வாய்ப்புக்கள் கிடைத்தாலும் கூடிய சம்பளத்திற்காக இலில் வேலைக்குச் சேர்ந்து சனி ஞாயிறு - இரவு பகல் என்று பாராமல் வேலை செய்து கொண்டிருந்தார்.
தான் ஒரு சொந்தமாக அழகான ஒரு வீடு அவர்களது ஊராருக்கு இணையாகக் கட்டி மற்றவர்களின் குத்தல் கதைகளுக்கும் குசும்புகளுக்கும் முற்றுப் புள்ளி வைத்து விட வேண்டும் என்பதே அவரது குறிக்கோளாக இருந்தது.
ஏனென்றால், அஞ்சலியும் ராசனும் காதலித்துத் திருமணம் செய்தவர்கள். இருவர் வீட்டிலும் சரியான எதிர்ப்பு. இதனால் ஆரம்பத்தில் யாருடைய உதவிகளும் இன்றி ரொம்பவே கஸ்ரப்பட்டு ஒரு நிலம் வாங்கி கொட்டில் ஒன்றைப் போட்டாலும் நிம்மதியாக சந்தோசமாக வாழ்ந்து வருகிறார்கள்.
அஞ்சலி ராசனிடம் சொல்லி அழுது கொண்டிருந்ததை, சந்திரனும் சூரியனும் அவதானமாகப் பார்த்துக் கேட்டுக்கொண்டு இருந்தார்கள்.
ராசனும், அஞ்சலியிடம்
" எனக்குத்தெரியும் அஞ்சலி கெட்டிக்காரி...
எல்லாத்தையும் சமாளிப்பாள்.....
நான் கொஞ்சக் காசு உழைச்கு சொந்தமாக வீடு ஒன்றைக் கட்டி, நாங்களும் மற்றவர்கள் நிமிர்ந்து பாக்கிற மாதிரி நடந்து காட்ட வேணும். இன்னும் கொஞ்ச நாளைக்கு சமாளியுங்கோம்மா...."
என்று சொல்லிக்கொண்டிருந்தார்.
ஆனால் அதில் ஆறுதலடையாத அஞ்சலி எழுந்து நிற்க, ராசனும் எழுந்து அவளைக் கட்டியணைக்க முற்பட்ட போது, அஞ்சலியின் காலில் இருந்த புண்ணை ராசனின் கால் தெரியாமல் பட்டு விடவே, வீரிட்டுக் கத்தினாள் அஞ்சலி.
முன்னரே கவலையில் இருந்த அஞ்சலிக்கு, புண்ணில் ஏற்பட்ட வலி அவளது அழுகைக்கு பிரதான காரணமாக இருந்தது. ராசனும் என்னவென்று தெரியாமல் அஞ்சலியின் அழுகையை கட்டுப்படுத்த முயற்சித்தான்.