Wednesday, September 5, 2012

நீ என் பக்கத்தில் இருந்து விட்டால்...!


காலையிலே கண்விழித்து - உன்

கயல் விழிகளைப் பார்க்கையிலே

அணை பிரித்துப் பாய்கிறது

பெரு வெள்ளமாய் உற்சாகம்



சோர்ந்து போய் நானும் தொடர்ந்து படுத்திருக்கையிலே

உந்தனது கண்கள் எனக்குத் மட்டும் துணையாக, 

கட்டளை இடுகின்றன, எழுந்து பணி செய்வதற்கு,

உற்சாகத்துடன் விரைவாய் தொடர்கின்றேன் வேலைகளை.



சோகத்தில், கோபத்தில் சோர்ந்து போய் நானும்

படுக்கையில் விழுந்து துடித்திருக்கும் போது

உந்தனது புன்னகை வடிகாலாய் அமைந்து

எந்தனது உணர்வுகளுக்குத் தெளிவினைத் தருகின்றது.



உன் புருவங்களின் இடையினிலே அழகாக வீற்றிருக்கும்

வட்டமாக ஒட்டியுள்ள கருமை நிறப் பொட்டினிலே

குவிக்கின்றேன் ஒன்றாக்க, எந்தனது மனத்தினையும்

குவிப்பதற்கு எம்வாழ்வில் நன்நான்கு செல்வங்களையும்.



என்றுமே நீ எந்தன் பக்கத்தில் இருந்து விட்டால்

சோகமோ கோபமோ நெருங்கிவிட அஞ்சிவிடும்

காலத்தின் ஆசியுடன் உன்னை நான் கைபிடித்து

என்றும் உன்னை ஆக்கிடுவேன் இவ்வுலகின் ராணியாக.

Saturday, September 1, 2012

முட்டி நாமும் முயற்சி செய்வோம்




தாழ்வு மனப் பான்மை கொண்டு

தரணியில் சும்மா இருந்து விடாது

தொட்டாச் சிணுங்கி போல நாமும்

பட்டதற்கெல்லாம் சுருங்கி விடாது

தன் நகத்தை உடைத்து பட்டை தீட்டி

தன்னைத் தயார்படுத்தும் கழுகு போலே

முன்னுக்கு நாமும் வரவேண்டும்

விந்தைகள் பல படைத்திட வேண்டும்



வாய்ப்புக்களுக்காகக் காத்திருந்து - எம்

வழ்க்கைக் காலத்தைக் கரைத்து விடாது

வாய்ப்புக்களைத் தேடிச் சென்று

வரலாறு உலகில் எழுதிட வேண்டும்



"முடியாது" என்று உங்கள் மனதில்

மந்திரம் போல் உச்சரித்திருந்தால்

முடியால் தான் போய் விடும் - உங்கள்

முயற்சிகள் எல்லாம் முடிவினிலே.



"முடியும்' என்று நினைத்து நீங்கள்

முடிந்தவரை முயற்சி செய்தால்

கனியும் அந்த வேலை - உமக்கு

பாலில் பழம் நழுவியது போல்



எம்மை நாமே தாழ்த்திக் கொண்டு

எட்டி நாங்கள் இருந்து விடாது

முட்டி நாமும் முயற்சி செய்வோம்

தொட்டு விட அந்த வெற்றிக் கனிகளை

Sunday, August 26, 2012

ஐ லவ் யூ....





உலகமே கொண்டாடும்

ஓரோவியமாய் மோனாலிசா- ஆனால்

என் மன உலகில் வலம் வரும்

உயிரோவியமாய் நீ.





இலங்கையில் போற்றப்படும்

அழகோவியமாய் சிகிரியா - ஆனால்

என் மனதில் வீற்றிருக்கும்

அழகோவியமாய் நீ.



உன்னை நான் பார்க்கையிலே

சொல்லாமலேயே குவிகிறது என்னிதழ்கள்

முத்தமொன்று கொடுப்பதற்கும்

பதிலுக்குப் பல பெற்றுக் கொள்வதற்கும்


உன் விழிகளைப் பார்க்கையிலே

தன்னாலே அசைகிறது என் உதடுகள்

அப்போது ஒலிக்கிறது மெல்லிய நாதமாய்

ஐ லவ் யூ.... ஐ லவ் யூ என்று

Saturday, August 18, 2012

எப்போது நீ வருவாய்..?

எப்போது நீ வருவாய்..?



கண்களினால் கதை சொல்லி - என்

சிந்தையிலே புதைந்து விட்டாய்

பண்பல சேர்த்து பாடலொன்று பாடினாலும்

விந்தையாக மாட்டாது உந்தனது கண்கதை


பூச்சரம் தொடுத்து நீ குழலிலே சூடினாலும் - உன்

புன்னகை விஞ்சுகிறது பூமலரின் அழகினையும்

பொன்நகை தேட நாம் விண்ணுயரச் சென்றாலும் - உன்

புன்னகைக்கு ஈடாக இவ்வுலகினிலே ஏதுமில்லை.


பொட்டொன்று நெற்றியிலே வைத்து நீ - என்னை

சட்டென்று வீழ்த்திவிட்டாய் உன்வசமாய்

கட்டு ஒன்றைப் போட்டு விட்டேன் நிரந்தரமாய் - அது

என்றென்றும் தளர்ந்து அவிழ்ந்து விடாத படி


உந்தன் கண்பார்த்துக் கதைபேசி நாள் முழுதும்

எந்தன்தலை உந்தன் மடியில் வைத்துறங்கி

சொந்தமாக ஆக்கியுன்னை தூக்கிக் கொண்டு

சொர்க்கம் வரை காட்டுவேன் நிச்சயமாய்


இன்றும் எந்தன் கண்முன்னால்

நிழல் போலே இருக்கின்றாய்

நிஜமாக என் முன்னால்

எப்போது நீ வருவாய்....?

Sunday, August 12, 2012

மனித மனங்களின் சிந்தனை தான் எத்தனை வகை?




உங்களது சிந்தனைகள் எப்போதும்

உள்ளதை மட்டும் பார்த்துக் கொண்டால்

நீங்கள் எப்போதும் சந்தோசமாக இருக்கலாம்.


உங்களது சிந்தனைகள் எப்போதும்

இல்லாததைச் சிந்தித்துக் கொண்டிருந்தால்

நீங்கள் எப்போதும் ஒரு விடயத்தில்

உங்களது மனதைச் செலுத்தி வெற்றி பெற முடியாது


உங்களது சிந்தனைகள் எப்போதும்

இடக்கு முடக்காக சிந்தித்துக் கொண்டிருந்தால்

நீங்கள் எப்போதும் நிம்மதியாக வாழ முடியாது.


இதில் நீங்கள் எந்த வகை ?????