Monday, April 19, 2010

வஞ்சியவள் எனக்காக




சனத்திரளின் மத்தியிலே ஏற்றிவைத்த ஒளிபோலே

உனைஎந்தன் புத்தியிலே உறைக்கவைத்து சித்திரமாய்

வரைந்தது முழுநிலவாய் என்வாழ்வின் அனைத்துநாள்

இரவெல்லாம் பகலாக்க எனக்காக உனைப்படைத்து


குதிரையின் வால்போல பின்முட்டிவரை உன்கூந்தல்.

பயிரிட்டு வளர்த்ததுபோல் அதில்மல்லிகைப் பூப்பந்தல்.

அதைப்பார்த்து எனக்குன்மேல் விதவிதமாய் ஒருஉந்தல்

இதயமெல்லாம் ஆகிப்போச்சு ஒருநொடியில் பலகந்தல்.


அம்புபூட்டிய வில்லைப்போல வளைந்தநிற்கும் புருவங்கள்.

மீன்தரையில் துடிப்பதுபோல அடித்துக்கொள்ளும் கண்கள்.

அதைஒளித்து ஒளித்துஎம்மை தேடவைக்கும் இமைகள்.

இமையுள்ளே ஒளிந்துநின்று எட்டிப்பார்க்கும் மணிகள்.


பிடித்துவைத்த பிள்ளையார்போல அதனிடத்தில் மூக்கு

அதற்கழகின் அழகுசேர்க்க வைரத்திலொரு ஊக்கு

கடித்துவிடத் தோன்றுமவள் கொவ்வைப்பழ உதடு

கடைந்தெடுத்த வைரம்போல ஜொலிக்குமவள் பற்கள்.


பாய்ந்துசெல்லும் ஆறுபோல அவள்தலையில் நேருச்சி

வந்துசேரும் கடல்போல பரந்திருந்த பெருநெற்றி.

நெற்றிக்கண் இருப்பிடத்தில் சின்னதாக ஒருபொட்டு

ஒற்றைமணித் தோடுபோட்டு வளைந்திருந்த இருகாது


பஞ்சுமிட்டாய் கலரினிலே அவளுடைய கன்னம்

பஞ்சுபஞ்சாய் ஆக்கிவிடும் எம்மையது திண்ணம்.

கொஞ்சுஅவளை என்றுசொல்லி எம்மனது உன்னும்.

மிஞ்சிவிட்டால் அவள்கையால் எம்கன்னம் மின்னும்


பிரம்மனவன் படைத்துவிட்டான் அழகின் சிகரத்தில்

எண்ணத்திலும் அவளைவைத்தான் வானத்தின் உயரத்தில்

அச்சம்மடம் நாணத்துடன் அவளிருந்தாள் பயிர்ப்பில்

காரிருளில் உள்ளஒரு ஒளிவிளக்கின் வடிவில்


வஞ்சியவளை எனக்காகப் படைத்துவிட்ட முருகா

பஞ்சியின்றி தூதுசென்று என்சுகம்சொல் இறைவா

நெஞ்சினிலே கவலையின்றி காத்திருக்கச்சொல் அவளை

வஞ்சமின்றி உணவுண்டு மகிழ்ந்திருக்கச்சொல் தலைவா.


மன்னித்திடு இறைவா தூதுசெல்லச் சொன்னதற்கு

கன்னியவள் எனைநினைத்து தூக்கமின்றி இருப்பவளை

புண்ணியவான் நீதானே படைத்தவரைக் காக்கவேண்டும்.

அந்நியனாய் நில்லாது சேர்ந்துநின்று காத்திடுவாய்.


எம்மைநீ பிரித்துவைத்து வேடிக்கை பார்க்காமல்

வாழ்க்கையை கரிக்கவைத்து வாடிக்கை ஆக்காமல்

சேர்த்துவிடு இருவரையும் சிறப்பிடத்தில் ஒன்றாக

பார்த்து விடு எங்களையும் பக்குவமாய் சேயாக.

Thursday, April 15, 2010

நா காக்க....!

சிறிது காலம் பழகினாலும் நிறைய நாட்கள்
பழகியது போன்ற புரிந்துணர்வைக் கொண்டிருந்தார்கள்
கவிதாவும் பிரியாவும்.

சாப்பிடுவதற்காக உணவகத்திற்கோ அல்லது
பொருட்கள் வாங்குவதற்காக கடைக்கோ விழையாடுவதற்கோ
எங்கு சென்றாலும் இருவரும் சேர்ந்தே போவார்கள் வருவார்கள்.

எங்காவது ஓரிடத்தில் இருவரில் யாராவது ஒருவரைப்பார்த்தால்
மற்றவரும் அங்கிருப்பார் என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளலாம்.
அந்தளவுக்கு ஆழமான நட்பாக இருந்தார்கள்.

அதைவிட இருவரும் என்ன இரட்டையர்களா என்று சக
நண்பர்களால் கேலி செய்யுமளவிற்கு அவர்களது நட்பு
இருந்தது.

இருவருடைய எண்ணங்களும் செய்கைகளும் தமது துன்பங்களை
பகிர்ந்த போது கிடைத்த ஆறுதல்களும் அவர்களை இரட்டையர்
களாக்கியதென்றால் அதில் எந்த விதமான மாற்றுக்கருத்துக்களும்
இருக்காது.

இந்தக் காலப்பகுதியில் தான் சோபிதாவின் நட்பு பிரியாவுக்கு
கிடைக்கிறது. பிரியாவுக்கு கிடைத்தால் அது கவிதாவுக்கும்
கிடைத்தது போன்றது தானே. இருவருக்கும் நண்பியாகிறாள்
சோபிதா.

கவிதா பிரியா நட்பு சோபிதாவுக்கு எரிச்சலூட்டியது. தனது
சந்தேகங்கள் எல்லாவற்றுக்கும் கவிதாவுடன் கலந்தாலோசித்து
பிரியா பதில் சொன்னது சோபிதாவுக்கு பிடிக்கவேயில்லை.
அதனால் இருவரையும் பிரிக்க சதித்திட்டம் தீட்டினாள்.

பிரியா கவிதா இருவரில் ஒருவர் இல்லாத சந்தர்ப்பங்களில்
மற்றவரைப்பற்றி குறை கூறி அவர்களிருவருக்குமிடையில்
வெறுப்புணர்ச்சியை ஏற்படுத்த கிடைக்கும் சந்தர்ப்பங்களை
எல்லாம் பயன்படுத்தினாள்.

இப்படி இல்லாத பொல்லாத் கதைகளையெல்லாம் ஒருவரைப்
பற்றி ஒருவரிடம் சொல்லி இருவருக்கும் சகுனியாக இருந்தாள்
சோபிதா.

சகுனியின் சதிக்கதைகளால் பிரியாவும் கவிதாவும் ஒருவரை
ஒருவர் சந்திக்கும் சந்தர்ப்பங்களை இயன்றவரை தவிர்த்து;க
கொண்டார்கள். எதிர்பாராத சந்திப்புக்களில் ஏனோ தானோ
என்று நலம் விசாரித்து நழுவினார்கள்.

ஒருநாள் பிரியாவும் சோபிதாவும் சதுரங்கம் விளையாடிக்
கொண்டிருந்தார்கள். இவ்விடத்தில் சோபிதாவிற்கு காய்களை
நகர்த்தும் ஐடியாக்களை சொல்லிக கொடுத்துக கொண்டிருந்தாள்
கவிதா.

இதனால் பிரியாவுக்கு தோல்விநிலையைக் காட்டிக்கொண்டு
இருந்தது. அத்துடன் அவளது ராணியை வெட்டும் சந்தர்ப்பம்
சோபிதாவுக்கு கிடைத்து வெட்டி விட்டாள்.

தனது ராணி வெட்டுப்பட்டதும் பிரியாவுக்கு கோபம் தலைக்கு
ஏறியது. கவிதாவுக்கு தாறுமாறாக என்ன பேசுகிறோம் எனறு
யோசிக்காமலே திட்டி விட்டாள்.

இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்த எண்ணிய சோபிதா
"உனது நண்பி இப்படி உன்னைத் திட்டி விட்டாளே" என்று
சொல்லி எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றினாள்
கவிதாவுக்கு.

Wednesday, April 14, 2010

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அன்பானவர்களுக்கு
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
எம் இனிய உறவுகளே இன்றைய நன்னாளிலே
நல்ல சிந்தனைகளை வளர்த்து, மற்றவர்களின் நல்வாழ்வுக்காகவும்
எமது நல்வாழ்வுக்காகவும் இறைவனைப் பிரார்த்திப்போம்.
இன்றைய நன்னாளிலே தீய வழிகளுக்கு செல்ல மாட்டோம் என்று உறுதியெடுத்து
எமது புதிய வாழ்க்கைப்பாதையில் காலடி வைத்து வீறு நடை போடுவோம்.
மீண்டும் ஒருமுறை புத்தாண்டு வாழ்த்துக்கூறி விடைபெறுகின்றேன்.
என்றும் அன்புடன்
உங்கள்
சிவநாதன்.

உள்ளுக்குள்ளே அழுகின்றேன்.

படுத்த வீடிழந்து
பக்கத்து உறவிழந்து
உடுத்த துணியிழந்து
உள்ளாடை கூட இழந்து
எல்லாத்தையும் இழந்து
ஏங்கியிருக்கிறோம்
நடுத்தெருவினிலே
குந்தி இருக்கிறோம்.

ஆர்ப்பரித்த அலை கடந்து
அகதி என்று நாம் வந்து
கம்பி வேலி முகாமினுள்
தும்பி போல சுறறுகிறேன்

சுரணை ஏதுமின்றி எதிரிசெய்த
மரணக் கொடுமை தாண்டி வந்து
சரண் அடைந்திருக்கிறோம் ஆசியில்
வரம் கொடு எமக்கென்று.

எமக்கிருக்கும் சோகங்கள்
பலகோடி ஆயிரம்.
அவைக்கிருக்கும் ஆழங்கள்
சித்தர்களின் பாயிரம்.
வலைக்கிருக்கும் ஓட்டைகள் போல் எம்
தலையிலிருக்கும் சோகங்கள்
பற்பல கோடிகள்.

எனக்கிருக்கும் வேதனைகள்
இன்னொருவர்க்கு எதற்கென்று
உதட்டிலே புன்னகையிட்டு
உள்ளுக்குள்ளே அழுகின்றேன்.
ஆறுதல் சொல்லி அரவணைத்து
ஆசியே எம்மைக் காத்திடு.

Tuesday, April 13, 2010

ஒருதாய்க்கு கன்றாக
























சான்றாக என்றும் இலக்கணமாய் நட்புக்கு
ஒன்றாக இருந்து ஒருதட்டில் உணவுண்டு
வென்றாக வேண்டும் வேற்றவர் வீம்பிலிருந்து
கன்றாக வேண்டும் ஒருதாய்க்கு உளமாற.

துன்பத்தின் போது துணிவாய் நிமிர்ந்தெழுந்து
இன்பத்தின் போது பணிவாய் மகிழ்ந்திருந்து
இரண்டும் ஒன்றென சமமாய் மதித்திருந்து
துணிவாக வாழணும் வாழ்க்கையின் வழியிருந்து.

நலமாய் எண்ணத்தை நல்லதாய் வளர்த்து
பலமாய் கருத்தை சிலையாய் வார்த்து
திடமாய் மற்றவர் உள்ளத்தை வென்று
விளைவாய் என்றும் உரமாக நன்றே.

சொந்தமாய் நீயும் உழைத்துப் பார்
சாந்தமாய் என்றும் வளர்ந்து பார்
மந்தமாய் நில்லாது கிளர்ந்து பார்
பந்தமாய் வளரும் உன்னுயிர் வேர்.

எல்லோரும் சமமென நினைத்துப் பார்
கல்லாரும் திறமென மதித்துத் தேர்
உள்ளாறும் அவர்மன ஆழத்தின் வேர்
வல்லோரும் உன்னிடம் அடக்கிடுவர் போர்.

ஒற்றுமையாக வாழ்

எதிர்க்கடை வேண்டும் கீரைக்கடைக்கென்பது
புதிர்போட்டு அவருடன் பொறாமைப்பட அல்ல
மற்றவரை விட முன்னேறிட என்பதே தவிர
உற்றவரை ஏறி மிதித்திட அல்ல.

கற்றவர் பலரில் உள்ள குறை
கல்லாதவரை பலதில் மறைக்கும் முறை
இல்லாதவரை ஏய்த்துப் பிழைக்கும் கறை
செல்லாதவரை தவிர்த்து கசக்கும் துறை

பெட்டிசம் எழுதி பெரியாள் ஆகி
பட்டியில் இருக்கும் மாடுகள் போல
மற்றவரை எல்லாம் துடிக்க வதைத்து
உள்ளவரை செய்வார் துன்பம் தினமும்.

என்ன செய்வான் பாவி அவன்
சொன்ன சொல்லை தாவிக் காத்து
காலம் பூரா துன்பத்தில் தவித்து
சீலம் போவான் சீராக வானில்.

திருந்திட வேண்டும் கல்வி கற்றவர்
மருந்திட வேண்டும் கல்லாதவற்கு
அழுதிட வேண்டும் செய்த பிழைக்கு
உழுதிட வேண்டும் உள்மனம் எல்லாம்.

கழுதை போல் தாழ்ந்து வாழாது
பழுதை நீக்கி வாழ்ந்து நீகாட்டு
தொழுது தினமும கடவுளை நினைத்து
கழுவு உந்தன் பாவ நாசங்களை.

இனியாவது திருந்தி ஒற்றுமையாக வாழ்
இல்லையேல் உன்னினம் மற்றவரினால் பாழ்
செய்தபிழை பொறுக்க மன்னிப்புக்கேட்டு வீழ்
சேர்ந்துவிடும் உன்னுடன் பலம்கொண்ட வேழ்.

உறுதியுடன் நின்றுஉன் இலட்சியம் நிறைவேற்று
அறுதியிட்டு கூறுஉன் இலட்சியம் இதுவென்று
மறதியின்றி நினைத்திரு தினம்தினம் அதுவொன்றை
சுருதியுடன் நிகழும் கிட்டியசில காலத்தில்

முடிந்தவரை நீ பொறாமையின்றி வாழ்
அடுத்தவரை நீ அரவணைத்துச் செல்
கொடுத்தவரை நீ மறந்ததிடாது நினை
கெடுத்தவரை நீ மறந்துவிட்டுக் கனை

வயது போனால் வழிவிடு இளையோர்க்கு
தீயது வந்தால் தேய்த்திடு அழிவதற்கு
நல்லது சொல்லி வழிகாட்டு புதியவர்க்கு
வல்லவன் நீயென்று வையகம் போற்றுதற்கு